பட்டிப்பளை பொலிஸாருக்கு மண்முனை தென்மேற்கு அபிவிருத்தி குழுவின் பணிப்புரை


சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பட்டிப்பளை பொலிஸாருக்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்தி குழு பணிப்புரை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (14) காலை பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி மற்றும் எஸ். வியாழேந்திரன் மற்றும் சோ. கணேசமூர்த்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி கூட்டத்தில் அப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் மற்றும் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பிரதேசத்தில் காணப்படும் பொதுமக்களின் பொதுவான பிரச்சினைகள், வாழ்வாதாரம் தொழ்லாவாய்ப்பு பற்றியும் ஆராயப்பட்டது.

அத்துடன் குடிநீர், சுகாதாரம், மீன்பிடி, விவசாயம், ஏனைய கைத்தொழில் துறைகளில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்காடுப்படு தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது மிக முக்கியமாக குறித்த பகுதிகளில் சட்டவிரோதமாக இடம்பெற்றுவரும் மாடு கடத்தல், மது விற்பனை, மணல் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக குறித்த பகுதியில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பிரதேச அபிவிருத்தி குழுவின் கவணத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

அத்துடன் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் அறநெறி வகுப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் தனியார் வகுப்புகளுக்கு 12.00 மணிவரை தடை விதிக்கப்படுவது தொடர்பாகவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பிரதேச செயலாளர் தட்சணாமூர்த்தி, பிரதேசசபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.