பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி கிடைக்கும் என்றால் சிங்களப் பகுதிகள் இன்று தேவலோகமாக ஆகியிருக்க வேண்டும்



பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அனைத்து அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்கின்றார்கள். அப்படியாயின் காலாகாலமாக இந்த பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற சிங்களப் பகுதிகள் தற்போது தேவலோகமாக மாறியிருக்க வேண்டும். அபிவிருத்தி என்ற மாயம் கூறி எமது இனத்தை சிதைப்பதே நோக்கம் சரியான தமிழ்த் தலைமைக்குக் கீழ் நாம் இல்லாவிட்டால் நம்மை அறியாமலே நாம் அழிந்துவிடுவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

சனிக்கிழமை ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரனின் ஏற்பாட்டில் சித்தாண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் தமிழர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். பெரும்பான்மை இன கட்சிகள் எங்களுடன் வந்து சேருங்கள் எல்லாம் செய்து தருகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்றே எமது பகுதிகளிலும் சிலர் பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து கொண்டு பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்களித்தால் அனைத்து அபிவிருத்திகளையும் செய்து தருகின்றோம் என்கின்றார்கள். அப்படியாயின் காலாகாலமாக இந்த பெரும்பான்மை சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிக்கின்ற சிங்களப் பகுதிகள் தற்போது தேவலோகமாக மாறியிருக்க வேண்டும் தானே. அப்படி நடக்கவில்லையே, இங்கே மட்டும் வந்து அவர்கள் தேவலோகமாக்கிவிடவா போகின்றார்கள். இங்கு வந்து எமது அபிவிருத்தி என்ற மாயம் கூறி எமது இனத்தை சிதைப்பதே அவர்களின் நோக்கம்.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், காலி, கதிர்காமம், மன்னம்பிட்டி இவ்வாறு தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் தற்போது எவ்வாறு இருக்கின்றது. அங்கே என்ன நடந்தது அங்கே இருந்த தமிழர்கள் தாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டும், தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழவேண்டும் என்பவற்றை மறந்தார்கள். அங்கிருந்த தலைமைகளும் பெரும்பான்மை வாசத்தில் கலந்து விட்டார்கள். அவ்வாறு சரியான தலைமைத்துவம் இல்லாமையால் அவ்விடங்கள் இல்லாமலே போய்விட்டன. ஆனால் வடக்கு கிழக்கில் மக்கள் தமிழ் உணர்வுடன் வாழ வேண்டும் என்று நினைத்தமையால், அதற்கான சிறந்த தலைமைத்துவமும் உள்ளமையால் சிங்கள அரசு எமக்குப் பல்வேறு விதமான ஆக்கினைகளையும், தொந்தரவுகளையும் செய்து கொண்டிருக்கின்றது.

எல்லாரையும் போல் நாமும் வாழ்ந்து, அபிவிருத்தி என்ற பெயரில் சிலவற்றை செய்து, பெரும்பான்மையுடன் கலந்து இருக்கப் போகின்றோமா? அல்லது, எமது தமிழை நாங்கள் பேசி, எமது கலாச்சாரம், பாண்பாட்டைப் பேணி, எமது முன்னோர்கள் காட்டிய வழியில் இருக்கப் போகின்றோமா என்பதை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

நாங்கள் தமிழர்களாக வாழ விரும்புகின்றோம் என்பதற்காகவே 1952ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை எமது பிரதேசங்களில் தமிழ்க் கட்சிக்கு வாக்களித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் பெரும்பான்மைக் கட்சிகள் வௌ;வேறு வழிகளில் அதனைக் குலைக்கப் பார்க்கின்றது. பொரும்பான்மைக் கட்சிகளால் மேற்கொள்ப்படுகின்ற உதவிகள், அபிவிருத்திகள் அந்தக் கட்களின் நிதியில் இருந்து வருவதல்ல அது அனைத்தும் எம்மிடம் இருந்து பெறப்படுகின்ற பணம்.

எங்களிடம் இருந்து எடுக்கப்படுகின்ற பணத்தை நாங்கள் விரும்பிய படி வாழ்வதற்காக எங்களுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்றே நாங்கள் கோருகின்றோம். அந்த வகையிலான எமது போராட்டங்கள் மூலமே இந்த மாகாணசபைகள் வந்தன. மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள், நிதி மூலங்களைத் தந்தால் எமது மக்களுக்கான சேவைகளை நாங்களே செய்வோம்.

நாங்கள் மாகாணசபையில் ஆட்சியில் இருந்த போது பல வேலைத்திட்டங்களைச் செய்திருக்கின்றோம். எங்களுக்கு ஆட்சி அதிகாரம் மிகக் குறுகிய காலமே இருந்தது. இதன் மூலம் பல்வேறு அபிவிருத்தி வேலைகள், உதவிகளைச் செய்திருக்கின்றோம். அதுமட்மல்லாது அயல் மாவட்ட பெரும்பான்மையின மக்களால் எமது பண்ணையாளர்கள் மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்திய மயிலத்தமடு பிரதேச சட்டவிரோத ஆக்கிரமிப்பனை தடுத்து நிறுத்தினோம். ஒருவித ஆர்ப்பாட்டமும், ஆரவாரமும் இன்றி அதனைச் செய்தோம். ஏனெனில் இந்த நல்லாட்சியில் எங்களிடம் அதைச் செய்யக் கூடிய குறைந்தளவு அதிகாரமாவது இருந்தது. அதனால் நாங்கள் மக்களை வீதிக்கு இறக்கவில்லை. கிழக்கு ஆளுநர் ஒஸ்டின் பெனான்டோ, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் தொடர்பினை ஏற்படுத்தி இரு இனங்களிலும் எவ்வித சலசலப்பும் இன்றி எமது விடயத்தை நிறைவேற்றினோம்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் அல்லது முஸ்லீம் ஒருவர் தான் முதலமைச்சராக வரமுடியும். நாங்கள் புத்திசாலித்தனமாகச் செயற்பட்டால் எம்மவர் முதலமைச்சராக வரமுடியும். அதற்காக தமிழர் ஒருவரைத் தான் முதலமைச்சாரக்குவோம் என்று சொல்லிச் சொல்லிச் சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுப்பது போல் மற்றைய பகுதிக்கு தீணி போட்டுவிடக் கூடாது.

நாங்கள் நினைத்த மாத்திரத்தில் இங்கு அனைத்தும் நடந்துவிடாது. வழிப்பாக இருக்க வேண்டும். முதலில் தமிழராக வாழ வேண்டும். இவ்வாற இருக்கையில் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்களித்தால் என்ன நடக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்கள் சொல்வதைத் தான் இவர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்கள் தூக்கியெறியப்பட்டு விடுவார்கள்.

ஆனால் எமது தமிழ்த் தலைமைகள் எங்கு சென்றாலும் எமது தமிழர்களின் விடயம் தொடர்பாகத் தான் கதைப்பார்கள். எமது நிலத்தை சிங்களவர்கள் அபரிக்கின்றார்கள் என்பதால் தான் எமது பிள்ளைகள் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள். அவர்களை நாம் மறப்பதா? அவர்கள் வேறு வழியில்லாமல் ஆயுதம் தூக்கிப் போராடினார்கள் ஆனால் தற்போது நாங்கள் ஆயுதம் இல்லாமல் எமது வாக்குப் பலத்தினால் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆரியக் கூத்தாடினாலும் எமது காரியத்தில் கண்வைத்திருக்க வேண்டும். சரியான தமிழ்த் தலைமைக்குக் கீழ் நாம் இல்லாவிட்டால் நம்மை அறியாமலே நாம் அழிந்துவிடுவோம் என்று தெரிவித்தார்.