கிழக்கு மாகாண தொண்டராசிரியர் நியமனத்தை அரசு இழுத்தடித்து வருவது கவலைக்குரியது என முன்னாள் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர் நந்தன் மாஸ்டர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளினால் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கிராமப்புறங்களிற்கு சென்று கல்வி கற்பதற்கு அஞ்சிய வேளையில் தொண்டராசிரியர்கள் அவர்களின் பிரதேசங்களில் சிறப்பாக கல்வி பணியாற்றி அப்போதைய கல்வி வெற்றிடத்தை ஈடுசெய்தவர்கள். எனினும் முன்னர் கிழக்கு மாகாணசபை செயற்பட்ட காலத்தில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தொடங்கி கிழக்கு மாகாண ஆளுநர் வரை அவர்களது ஆசிரிய நியமனங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது.
கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அரச திணைக்களங்களில் வெளி மாவட்டத்தவர்களைக் கொண்டு அரச பதவி வெற்றிடங்களை பூரணமாக நிரப்பி வரும் வேளையில் தொண்டர் ஆசிரியர் நியமனங்களிற்கு மட்டும் திறைசேரி அனுமதி கிடைக்கவில்லை, அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவில்லை, ஆளுநர் அங்கீகாரம் கிடைக்கவில்லை, என சாக்கு போக்கு சொல்லி காலம் கடத்துவது கவலைக்குரியது. இத் தொண்டராசிரியர்கள் தமது நியாயபூர்வமான கோரிக்கையை முன்வைத்து பல தடவைகள் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த காலங்களில் நடத்திய போது பல்வேறு தரப்பினரால் பல்வேறு தடவைகள் நீதியான முறையில் நியமனம் வழங்கப்படும் என உறுதியளிப்பதும் பின்னர் கைவிடுவதும் வழமையான செயலாக பல தடவைகள் தொண்டராசிரியர்கள் பார்த்து விட்டார்கள்.
தொண்டர் ஆசிரியர்களின் பலர் தமக்கு நியமனம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தே ஓய்வூதிய வயதெல்லையை கூட நெருங்கி விட்டார்கள். எனவே உறுதியளித்தபடி 445 தொண்டராசிரியர்களிற்கும், மிகுதி 106 பேருக்கும் திறைசேரியின் அனுமதி பெற்று ஆசிரியர் நியமனத்தை விரைவாக வழங்க சம்பந்தப்பட்ட தரப்பினர் முன் வர வேண்டும் என அவர் விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.













