சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானம்

சட்டக்கல்வி அனுமதிக்கான கல்வித் தகைமையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிகளின் பிரகாரம், கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் 3 சாதாரண சித்திகளை பெற்ற மாணவர்கள் சட்டக்கல்வியை கற்க முடியும்.

எனினும், எதிர்காலத்தில் சட்டம் பயில வேண்டும் எனின், உயர்தரப் பரீட்சையில் 3 திறமை சித்திகளைப் பெறுவது அவசியம் என இலங்கை சட்டக்கல்லூரி தெரிவித்துள்ளது.

சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சட்டக்கல்லூரியின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சபரியின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு சட்டவாக்க சபை அனுமதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டத்தரணிகளுக்கான ஆடை தொடர்பில் அனைத்து சட்டத்தரணிகள் சங்கத்தினரையும் தௌிவுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா மேலும் கூறினார்.