அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகர் கே.ஹேந்திரமூர்த்தி


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பதவிநிலை உதவியாளரும், இலங்கைக்கான ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகரும், பிரதம போதனாசிரியருமான கந்தசாமி ஹேந்திரமூர்த்தி இன்றுடன் (02) தனது 29 வருடகால அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இலங்கைத் தீவின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த அமரத்துவமடைந்த தம்பாப்பிள்ளை கந்தசாமி – தம்பிமுத்து பாக்கியம் தம்பதிகளின் புதல்வனாக 1958 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய கல்லாறு அருளானந்தா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை பெரிய கல்லாறு மகா வித்தியாலயம் மற்றும் கல்லடி சிவானந்தா வித்தியாலயங்களிலும், உயர்கல்வியைப் பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேர்ந்திருந்தார்.

கடந்த 1990 ஆண்டில் கல்முனை வடக்கு, தமிழ் பிரிவுக்கான பிரதேச செயலகத்தில் எழுதுவினைஞராகத் தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், பின்னர் 1992 முதல் 2012 வரை பிரதம முகாமைத்துவ உதவியாளராக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும், 2012 முதல் 2015 வரை பிரதம முகாமைத்துவ உதவியாளராக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திலும், 2016 ஆம் ஆண்டின் முதலிரு மாதங்களில் முகாமைத்துவ உதவியாளராகத் திருக்கோவில் பிரதேச செயலகத்திலும், இறுதியாக 2016 தொடக்கம் ஓய்வுபெறும் இன்றைய நாள் வரையில் பதவிநிலை உதவியாளராக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சிறப்புறப் பணியாற்றியிருந்தார்.

இலங்கைத் தீவு முழுவதும் அசாதாரண சூழல் நிலவிய கடினமான ஒரு காலகட்டத்தில் அரச சேவையில் இணைந்த இவர், தனது பக்கச்சார்பின்றிய சீரிய சேவைகள் மூலம் தமிழ் பேசும் மக்களின் விருப்பத்துக்குரிய ஒரு பணியாளராக மதிக்கப்பட்டவர். உள்நாட்டு யுத்தம் மிக மோசமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு சிறந்த அரச ஊழியராகச் செயற்பட்டு அப்போதைய அரசினால் வழங்கப்பட்ட உதவிகள் அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியான முறையில் சென்றடைய உதவியவர். அரச உத்தியோகத்தர்கள் களப் பணிகளுக்குச் செல்லமுடியாத அளவுக்கு இனந்தெரியாத குழுக்களின் அச்சுறுத்தல்கள் மேலோங்கியிருந்த காலப்பகுதிகளில் தானாக முன்னின்று கிராமங்களுக்குச் சென்று தனது திணைக்களத் தலைவர்களுக்கு அறிக்கைகளைக் கையளித்தவர்.

சுனாமிப் பேரிடர் ஏற்பட்டவேளையில் தமது வாழ்விடங்களை இழந்து தவித்த மக்கள் பாதுகாப்பான முறையில் முகாம்களில் தங்கவைக்கப்படும் வகையில்  ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட அவசர வேலைத்திட்டங்களில் முன்னின்று செயற்பட்டவர். ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வேளைகளில் வழங்கப்பட்ட அரச நிவாரணப் பணிகளில் தன்னையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டதோடல்லாது தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வெள்ள, மண் சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகளிலும் தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டவர் என இவரது சேவைக்கால வரலாறு சிறப்புற அமைந்துள்ளமை கண்கூடு.

கடந்த 1991 ஆம் வருடம் அக்கரைப்பற்றில் தனது துணைவியான சைமன் சில்வா உதயகுமாரியைக் கரம் பற்றிய கே. ஹேந்திரமூர்த்தி அவர்களுக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உள்ளனர். முதல் மகன் கே.ராஜேந்திர பிரசாத் (ராமிலன்) மற்றும் இளையவர் கே.சாரங்கன் (திருக்கோவில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோர் கராத்தே தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டி பெற்றது மட்டுமல்லாது சிறந்த பயிற்றுவிப்புத் தரத்தையுடையவர்களாக விளங்குவதோடு, ராம் கராத்தே சங்கத்தின் உதவி போதனாசிரியர்களாகவும் பணியாற்றி தமது தந்தையின் பணிகளைப் பெருமையுடன் முன்னெடுத்துச் செல்கின்றனர். இவரது கடைக்குட்டி மகள் கே.அட்சயாவும் ஒரு கறுப்புப் பட்டி வீராங்கனை என்பதுடன் அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலய மாணவியாக உயர்தரம் கற்று வருகிறார்.

தனது சிறுவயது முதலே கராத்தே தற்காப்புக் கலையில் அதீத ஆர்வமுடையவராயிருந்த இவர், தாரமும் குருவும் தலைவிதிப்படி என்பதற்கமைய மறைந்தும் மறையாத மாமனிதரும், கராத்தே கலையில் விற்பன்னருமான சிஹான் கே.இராமச்சந்தினின் பயிற்சிப் பாசறையில் இணைந்துகொண்டு அவரது நம்பிக்கைக்குரிய சிரேஸ்ட மாணவர்களில் ஒருவராகப் பரிணமித்துக்கொண்டிருந்த நிலையில் கடந்த 1973 ஆம் வருடம் இடம்பெற்ற மாகாணமட்ட விளையாட்டுப் போட்டிகளில் 16 வயதுக்குட்பட்டோருக்கான Shot Put போட்டிகளில் கிழக்கு மாகாணம் சார்பில் வெண்கலப் பதக்கம் வென்று தனது முதல் மைல்கல்லை எட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

கராத்தே தற்காப்புக் கலையில் கறுப்புப் பட்டியில் விசேட தரமான சிஹான் (5th Dan) தரத்தையுடைய இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை கராத்தே சம்மேளனத்தினால் சான்றளிக்கப்பட்ட ஒரு போதனாசிரியராகத் தன்னை நிலைநிறுத்தி, கடந்த நான்கு தசாப்தங்களாகக் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்களச் சமூகங்களிலிருந்து இன்று இலங்கைத் தீவின் நிருவாக எல்லை கடந்து வெளிநாடுகள் பலவற்றிலும் கராத்தே துறையில் தமது திறமைகளை நிரூபித்துக்கொண்டிருக்கும் பல வீர வீராங்கனைகளின் ஆதர்ச குருவாகப் பரிணமித்திருப்பதென்பது ஒன்றும் இலகுவான ஒரு விடயமல்ல.

அடுத்து 2016 ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டிகளில் இவரது மாணவர்களான எஸ்.ரிசோபன் மற்றும் எஸ்.ஏ.சராஜ் மொகமட் ஆகியோர் முறையே ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருந்தார்கள்.

அதுமட்டுமல்லாது 2016 ஆம் ஆண்டு நடந்த தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டிகளில் குமித்தே பிரிவில் இவரது மாணவன் எஸ்.ரிசோபன் வெண்கலப் பதக்கம் வென்றிருந்ததோடு, 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேசிய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டிகளில் குமித்தே பிரிவில் இதே மாணவன் வெள்ளிப் பதக்கத்தையும், காட்டா பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். அதேபோன்று இவ்வருடம் (2018) இடம்பெற்ற போட்டித்தொடரிலும் இவரது மாணவர்களான பி.ஷரோன் சச்சின் மற்றும் எஸ்.ஏ.சராஜ் மொகமட் ஆகியோர் காட்டா போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்கள்.

அத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு விளையாட்டு அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் குழு காட்டா (Team Kata) போட்டிகளில் கே.சாரங்கன், பி.ஷரோன் சச்சின் மற்றும் எஸ்.ரிசோபன் ஆகியோர் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றியது இன்னொரு சாதனையாகப் பதிவுசெய்யப்பட்டது.

இவ்வாறு அகில இலங்கை சோட்டோக்கன் கராத்தே தோ சம்மேளனத்தினால் (SLSKF) கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட பல போட்டிகளிலும், அதேபோன்று அகில இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தினால் (SLKF) நடாத்தப்பட்ட போட்டிகளிலும் எண்ணிலடங்காத வெற்றிகளையும் பதக்கங்களையும், பல்வேறுபட்ட சாதனைகளையும் படைத்த வீர வீராங்கனைகளுக்குப் பின்னாலிருந்து அவர்களைப் பயிற்றுவித்து வழிகாட்டிய பேராசானாக இவர் விளங்கினார் என்பது தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு விடயமே.

கல்முனை கல்வி மாவட்டத்தின் திருக்கோவில் கல்வி வலய மாணவர்கள் பலரும் தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்கக் காரணமாக இருந்த திரு. கந்தசாமி ஹேந்திரமூர்த்தி அவர்கள், தனது மாணவர்கள் மேலும் பல சிகரங்கள் தொடவேண்டி என்பதில் கொண்டுள்ள ஈடுபாட்டில் எள்ளளவும் குறையவில்லை என்பதே உண்மை. ஆகையால் எமது மாணவர் சமூகமும் இளம் சந்ததியினரும் இவரது திறமைகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.

கராத்தே துறையில் கிழக்கு மண் ஈன்றெடுத்த முத்தாகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வியக்கத்தகு சாதனைகள் பல படைத்து தற்காப்புக் கலையில் தமிழரின் பெருமையை ஓங்கச் செய்த அரும்பெரும் சொத்தாகவும் விளங்கும் உயர்திரு. கந்தசாமி ஹேந்திரமூர்த்தி அவர்களை முன்னின்று கௌரவிக்கவேண்டியது கிழக்கு வாழ் மக்கள் ஒவ்வொருவரதும் தலையாய கடமையாகும்.