சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கம் நடாத்திய சாதனையாளர் கௌரவிப்பு விழா


அக்கரைப்பற்று - 9 சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கம், சமூகஜோதி அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்கம் மற்றும் மகளிர் மறுமலர்ச்சி மன்றம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சாதனையாளர் கௌரவிப்பு விழா நேற்று (09) மாலை சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரத்ன சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற குறித்த விழாவிற்குப் பிரதம அதிதியாக கிழக்கிலங்கையின் சமாதான செயற்பாட்டாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளரும், நாவலாசிரியரும், தனது ‘ஒரு கிராமத்து அத்தியாயம்’ நாவலுக்காக சுய நாவல் இலக்கியத் துறையில் இவ்வருடத்திற்கான அரச இலக்கிய விருது பெற்றவரும், குறித்த நாவலுக்காக இவ்வருடத்திற்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் சிறந்த நூலுக்கான பரிசுச் சான்றிதழ் பெற்றவரும், அதே நாவல் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட இலக்கிய வெளியீடுகளில் சிறந்த நாவலாகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அண்மையில் இடம்பெற்ற 20 ஆவது கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கும் வைபவத்தில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமிருந்து சாகித்திய விருது எனும் உயர் கௌரவத்தைப் பெற்றவருமான கலாபூஷணம் எஸ்.ஜோன்ராஜன் கலந்து சிறப்பித்ததுடன், சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்க இணைப்பாளரும், ஆலையடிவேம்பு மத்தியஸ்த சபை உறுப்பினரும், சமாதான நீதவானுமான கலாபூஷணம் அக்கரை மாணிக்கவாசகத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டு, கடந்த 1978 ஆம் வருடம் அன்றைய ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அவரது ‘போடியார் மாப்பிள்ளை’ நாவலுக்காகப் பெற்றுக்கொண்ட முதலாவது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற நினைவுச் சட்டகத்தையும் பெற்றிருந்ததுடன், சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்க நிருவாக சபை உறுப்பினர்களிடமிருந்து நினைவுப் பரிசுகளையும் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசப் பெண்களின் மத்தியிலிருந்து மிக இளவயதில் அரசியல் துறையில் பிரவேசித்து, ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பெண் பிரதிநிதிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராகப் பிரகாசித்துவரும் திருமதி. கிந்துஜா பிரதீபன் மகளிர் மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவி திருமதி. பரிமளாதேவி பத்மராஜாவினால் அங்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், தனது முயற்சியின் பலனாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான சிறப்புரையொன்றையும் ஆற்றியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஆகஸ்டில் இடம்பெற்ற தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களையும், அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையும், வழிநடத்திய பெற்றோர்களையும் கௌரவிக்கும் நிகழ்வில் அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் திருவள்ளுவர் வித்தியாலயம் என்பவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட 6 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் மாலையிட்டு, பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, பாராட்டுப் பத்திரம் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆசிரியர்களான எஸ்.பிரபாகரன் மற்றும் ரி.முரளீஸ்பரன் ஆகியோர் சமூகஜோதி. அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்க உறுப்பினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களது உரைகளும் அங்கு இடம்பெற்றிருந்தன.

அடுத்து புதிய தொழில் முயற்சியாளர்களை வாழ்த்தி, அவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், விழாவில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அதிதிகளால் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொதிகளும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று - 9 கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.சபாரெத்தினம் மற்றும் அதன் செயலாளரும் ஆயுர்வேத வைத்தியருமான ஆர்.கோபிநாத் ஆகியோர் விசேட விருந்தினர்களாகவும், அக்கரைப்பற்று சென். ஜோன் வித்தியாலய அதிபர் திருமதி. கோமளம் துளசிநாதன், ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கிராம உத்தியோகத்தர் எஸ்.அருள்ராஜா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.இதயதினேஸ், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. மதனிகா திருஞானசம்பந்தம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்ததுடன், சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கம், சமூகஜோதி அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்கம் மற்றும் மகளிர் மறுமலர்ச்சி மன்றம் ஆகியவற்றின் உறுப்பினர்களும், பொதுமக்களும் விழாவில் பிரசன்னமாகியிருந்தனர்.