செங்கலடி பிரதேச சபையில் குழப்பம்! 24மேலதிக வாக்கினால் வரவு செலவுத்திட்டம் வெற்றி.

-செங்கலடி நிருபர்-

ஏறாவூர் பற்று – செங்கலடி பிரதேச சபையின் அமர்வு இன்று (10) திங்கட்கிழமை பிரதேசசபையில் அவைத் தலைவர் நாகமணி கதிரவேல் தலைமையில் இடம்பெற்றது. 
கூட்ட ஆரம்பத்தில் இன்று கூடிய கூட்டம் விசேட கூட்டமா அல்லது பொதுக் கூட்டமா என்ற வாக்குவாதம் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றது. இன்று கூடியது பொதுக்கூட்டம்தான் விசேடகூட்டம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் முகமட் சாஜீத் தெரிவித்தார்.  அதை மறுத்த தமிழர் விடுதலை கூட்டனியின் உறுப்பினர் பு.சசிதரன் இது விசேடகூட்டம் எனவும் நிகழ்ச்சி நிரலில் உள்ளவாறு கூட்டம் நடைபெறவேண்டும் எனவும் கூறினார். 
இங்கு  உறுப்பினர்கள் சிலர் தவிசாளருக்கு சாதகமாக செயற்படுகின்றனர் என பு.சசிதரன் தெரிவிக்க  அவரின் கூற்றை சில உறுப்பினர்கள் மறுக்க சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
மீண்டும் சபை நடவடிக்கை வழமைபோல நடாத்தப்பட்டது இவ் ஆண்டிற்கான சபையின் பணம் 10இலட்சம் ரூபா ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படவுள்ளதாக தவிசாளர் தெரிவித்தார். இருப்பினும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அப்பணம் பிரித்து வழங்ப்படாமையுள்ளதாகவும் முதல் கட்டமாக 24 உறுப்பினர்களுக்கு இப்பணம் வழங்க தீர்மாணித்துள்ளதாகவும் தவிசாளர் தெரிவித்தார்.
சபையில் உள்ள 31 உறுப்பினர்களுக்கும் இப் பணம் வழங்கப்பட வேண்டும் என மீண்டும் உறுப்பினர்களால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. இதன் போது தவிசாளரினால் சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 

மீண்டும் சபை ஆரம்பமாகியபோது அணைத்து உறுப்பினர்களுக்கும் 10இலட்சம் ரூபா வழங்க தீர்மாணித்துள்ளதாக தவிசாளர் சபையில் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்து 2019ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்திற்கான பட்டியல்  பிரதேசசபை செயலாளரினால் வரவு செலவு தொடர்பான திட்டங்கள் வாசிக்கப்பட்டன.
இதன் போது சபையின் வருமானமாக 59,547,200 ரூபாவும், செலவினமாக 38,103,000 ரூபாவும் எனவும் கூறப்பட்டது. 
பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றுவதற்காக உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அமர்வில் கலந்துகொண்ட 28 உறுப்பினர்களில் 26 பேர் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவும் இதற்கு எதிராக 02 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் வ.சுரேந்திரன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டனியின் பிரதேசசபை உறுப்பினர் பு.சசிதரன் ஆகியோரே எதிராக வாக்களித்தனர்.
24 மேலதிக வாக்குகளினால் வரவுசெலவுத்திட்டம் ஆதரவாக நிறைவேற்றப்பட்டு செங்கலடி பிரதேசசபைக்கான 2019ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் வெற்றிபெற்றது.