
மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் அதிபர் ஆசிரியர்களே. வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன்.
மண்முனைப்பற்று கோட்டப் பாடசாலைகளில் இருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளி மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொண்ட மாணவர்களையும், அவர்கட்கு கற்பித்த ஆசிரியர் களையும் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே மேற்படி குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு மண்முனைப் பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.க.நல்லதம்பி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து உரையாற்றும் போது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் திணைக்கள உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் ஆகிய அனைவரும் காரணமானவர்களாகும்.
என்னால் அவர்கட்கான ஆலோசனைகளை மாத்திரமே கூறமுடியும்.
இன்று மட்டக்களப்பு கல்வி வலயம் கல்வியில் துரித வளர்ச்சி கண்டு வருகின்றது. இன்று தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்கள் தொடர்ந்து சிறந்த முறையில் கல்வி கற்பார்களானால் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் மண்முனைபற்றுக் கோட்ட அதிபர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியவர்கள் எடுத்துக் கொண்ட முயற்ச்சிக்கு தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார்.
தனது 60 வது அகவையை நெருங்கும், ஒய்வினைப் பெற்றுச் செல்ல விருக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.நல்லதம்பி அவர்கள் வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களைப் பாராட்டிப் பேசியதுடன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய திரு.திருமதி ரோல்ட் தனலட்சுமி அவர்களையும், அவர்கள் கல்விக்காக ஆற்றும் பணிகளையும் எடுத்துக் கூறினார்.
இவர்கள் ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அதிகமான நிதி உதவிகளைச் செய்து வருபவர். கல்விப்பணி, சமூகப்பணி என்பவற்றைச் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர்கள். ஆனால் கடந்த காலங்களில் தான் பல உதவிகளிச் செய்தும் அவற்றைப் பெற்றுக் கொண்டு பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக திருமதி ரோல்ட் தனலட்சுமி கவலைப் பட்டார் எனவும் தெரிவித்தார்.
தற்போது மண்முனைப்பற்றுக் கோட்டத்தில் உள்ள
மட்/சிவமணி வித்தியாலயம், மட்/நவரெத்னராசா வித்தியாலயம் என்பவற்றுக்கு போட்டோ பிரதி இயந்திரமும், மட்/ஆரையம்பதி மகா வித்தியாலயத்திற்கு இரு இரும்பு அலுமாரிகளும், பெறுமதியான பூ மரக்கன்றுகளும் பெற்றுக் கொடுத்துள்ளார்.
மட்/சுப்பிரமணியம் வித்தியாலயத்திற்கு ஒரு இரும்பு அலுமாரியும், தரம் 5 புலமை பரீட்சைக்கு தோற்றிய அனைத்துப் பாடசாலை மாணவர்கட்கும் 'வெற்றித் தேர்வு' வினாவிடைப் பயிற்ச்சிப் பத்திரங்களும் பெற்றுக் கொடுக்க உதவி செய்தார் என கூறினார்.
இவ்வைபவத்தில் அதிதிகளாக திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர், மண்முனைப் பற்று பிரதேசசபை தவிசாளர் திரு.மகேந்திரலிங்கம், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் திரு.க.அருட்பிரகாசம், திரு.ம.பாலசுப்பிரமணியம், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆரம்பக் கல்வி திரு.ஆர்.பாஸ்கரன், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் திருமதி. நே.தங்கவடிவேல் ஆகியவர்கள் கலந்து பரிசில்கள் வழங்கியதுடன், சிறப்புரையும் ஆற்றினர்.
























