
மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த திரு.கந்தையா நல்லதம்பி அவர்கள், மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பினால் வருடம் தோறும் வழங்கப்படும் சமூகசேவை, கல்விப்பணி, சுகாதாரம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டி அவற்றின் மேம்பாட்டுக்காக உழைக்கின்றவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் தேசமானி விருதினை அண்மையில் கொழும்பு பண்டார நாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்துக் கிடைக்கப்பெற்றார்.
இவர் தற்போது மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள மண்முனைப்பற்று கோட்டக் கல்விப்பணிப்பாளராக கடமைபுரிந்து வருகின்றார். அத்துடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், மண்முனைப்பற்று வள்ளியம்மை யோகா கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் இணைப்பாளரும், சமாதான நீதவானுமாவார். ஒரு கலைப் பட்டதாரியான இவர் கல்விப் புலத்தில் நாற்பது வருடங்களாக ஆசிரியராக, அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றிவருவதுடன், சிறந்த சமுகசேவையாளனுமாகத் திகழ்கின்றார்.
அதிபராக இருபத்தாறு வருடங்கள் பல பாடசாலைகளில் சேவையாற்றி யுள்ளார். கமு/ திகோ/ பொத்துவில் மெ. மி. த. மகா வித்தியாலயம், மட்/பட்/ மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம், மட்/பட்/ பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் சேவையாற்றி பல பட்டதாரி மாணவர்களை உருவாகியுள்ளார்.















