கிழக்குப் பல்கலை நுண்கலைத்துறையில் பட்டிப்பொங்கலுடன் தொடர்புடைய உள்ளூர் கலை பண்பாட்டு விழா



கிழக்குப்பல்கலைக்கழக கலை கலாசாரா பீட நுண்கலைத்துறையினரால் பட்டிப்பொங்கலுடன் தொடர்புட்ட உள்ளூர் கலைப் பண்பாட்டு விழா 29.01.2019 ஆம் திகதியன்று காலை 10.00 மணியளவில் நுண்கலைத்துறை தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அதில் 'உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அதற்கான சந்தை வாய்ப்புக்களின் நிலை' போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்விழா கற்றல் - கற்பித்தலை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்குப்பல்கலைக்கழக பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கே.இ.கருணாகரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கலை கலாசார பீட பீடாதிபதி, திரு.மு.ரவி அவர்களும், விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி திருமதி முத்துலெச்சுமி வினோபா அவர்களும்,

கலைகலாசார பீடத்தின் பீட அவை உறுப்பினர் திரு.எஸ்.கோபாலசிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் உள்ளூர் பட்டிக்காரர்களான ஏறாவூர் பற்று கால்நடை ஒன்றியத் தலைவர் முத்துலிங்கம் நதீஸ்வரன் அவர்களும், ஏறாவூர் பற்று கால்நடை ஒன்றியத்தின் செயலாளர் காளிக்குட்டி நாகேந்திரன் அவர்களும், கால்நடை சங்கத் தலைவர் கணபதிப்பிள்ளை ஜெயரெத்தினம் அவர்களும் நுண்கலைத்துறை விரிவுரையாளர்களும், மாணவர்களும், கிழக்குப்பல்கலைக்கழக கல்விசார், கல்விசாரா ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வினை நுண்கலைத்துறையின் இறுதி வருட மாணவன் பே.நிதாகரன் தொகுத்து வழங்கியயதுடன். வரவேற்புரை நுண்கலைத்துறையின் சிரேஷட விரிவுரையாளர் திரு.கு.ரவிச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தலைமையுரையை நுண்கலைத்துறையின் தலைவர் திரு.சு.சந்திரகுமார் அவர்கள் ஆற்றினார் இவர் 'பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கற்றல் - கற்பித்தலைச் செயல் மையப்படுத்தி விரிவுரையாளர்களின் ஆராய்ச்சியை வலுப்படுத்துவது சமகாலத் தேவை. இதனால், உள்ளூர் அறிவுத்திறன், பண்பாட்டுடன் இணைந்த இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றோம்' என்றார்.

நுண்கலைத்துறை இறுதி வருட மாணவி யோ.மயூரியால் 'பட்டிப்பொங்கல்' என்னும் தலைப்பில் 'பட்டிப்பொங்கல் நன் நாளில் பெட்டிப்பாலில் கட்டிப்பொங்கல் பொங்கும் மனிதர்களாய் நாம்' எனும் கவிதை வாசிக்கப்பட்டது. பின்னர் பதில் உபவேந்தர் தனது உரையில் 'நுண்கலைத்துறைத் தலைவருக்கு இந் நிகழ்வை நிகழ்த்தியமையைப் பாராட்டியதோடு உள்ளூர் பண்பாட்டுப் பொருளாதாரத்தை வளப்படுத்தி இளம் தலைமுறையினர் கைக்கொள்ள வேண்டும் என்றும், அனைத்துப் பாடத்துறையினரும் இதில் இணைந்து செயற்பட வேண்டும்' என்றும் கூறினார்.

அடுத்து நுண்கலைத்துறை இரண்டாம் வருட சிறப்புக் கற்கை மாணவர்களினால் 'ஏர் பிடிப்போம்' எனும் தலைப்பில் கிராமியப் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலை கலாசார பீட பீடாதிபதியினால் 'உள்ளூர் உற்பத்திகள் தொடர்பாக நுண்கலைத்துறையினர் வேலை செய்து கொண்டு வருவதும் அது தொடர்பாக மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுவதுமான சமூக நலன்சார் வேலைகளும் வரவேற்கத்தக்கவை' எனக் குறிப்பட்டார். இதனைத் தொடர்ந்து  'தற்காலத்தில் பட்டிக்காரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

தற்காலத்தில் பட்டிக்காரர்கள் எதிர் கொள்ளும் சவால்களுள் முறையான மேய்ச்சல் நிலங்கள் இன்மை, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள மேய்ச்சல் நிலங்களுக்குள் அத்துமீறிய ஏனைய மேய்ச்சல் சமூகத்தவரின் உள்நுழைவும், இப்பிரச்சினைகளை தடுப்பதற்கு பிரதேச செயலகங்கள் முறையான தீர்வுகளை முன்வைக்காமை போன்ற கருத்துக்கள் பட்டிக்காரர்களால் முன்வைக்கப்பட்டன.

மேலும், 'உள்ளூர் மாட்டினங்கள் ஆயிரத்து ஐந்நூற்றிக்கும் மேலாக கிழக்கு மாகாணத்தில் இறந்து இருந்தும் அது சார்ந்து இதுவரையும் அதிகாரிகளால் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை என்பது பட்டிக்காரர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது' என கலந்துரையாடலில் வெளிப்பட்டது. 

'இவ்வாறான இழப்புகளுக்கு அரசாங்கத்தினால் தரப்படும் தீர்வாக வருவாய்க்கு மீறிய செலவுகளைக் கொடுக்கும் வெளிநாட்டு மாட்டினங்களினை இறக்குமதி செய்து அந்த மாடுகளை எங்களுக்கு நுண்கடன் அடிப்படையில் மானியமாக தருவதான நடவடிக்கை முன்வைக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடானது எங்களின் சூழலுக்கு பொருத்தமில்லாததும், எங்களுக்கான சூழலுடன் இணைந்து வாழுவதும் குறைவான செலவுகளைக் கொண்டதுமான உள்ளூர் மாட்டினங்களை இல்லாமல் செய்து பட்டிக்காரர்களை வீதிக்கு அனுப்பும் நடவடிக்கையாகவும் காணப்படுகின்றது' என்பன போன்ற விடயங்கள் பட்டிக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.

எனவே, இவற்றை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இப்பிரச்சினைகளை ஆராய்ந்து நுண்கலைத்துறை மாணவர்கள் நாடகப் படைப்பாக்கத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.