
விவசாயத்திற்கு பேர்போன பட்டிப்பளைப் பிரதேசமானது கடந்தகால யுத்த வடுக்களை தன்னகத்தே சுமந்து அன்றாடம் உழைத்து தமது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் அடித்தட்டு மக்களை கொண்டமைந்த கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். அவ்வாறான கிராமங்களில் ஒன்றே குழுவினன்மடு கிராமம்.
அக் கிராமத்தின் வசித்து வரும் சாதாரண விவசாயி ஒருவரின் மகனே அமிர்தலிங்கம் சுதர்சன். அண்மையில் வெளியான உயர்தரப் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்டமட்டத்தில் 25 ஆவது இடம் பெற்று பொறியியல் துறைக்கு தெரிவாகி தனக்கும், தான் சார்ந்த சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது இச்சாதனையை பாராட்டும் முகமாக மண்முனை மேற்கு கல்வி நிர்வாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் செ.மகேந்திரகுமார், கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ், சுகாதாரமும் உடற்கல்வியும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் எம்.அரியதாஸ், காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய ஆசிரியர் வ.இராஜகுலசிங்கம் ஆகியோர் நேரில் சென்று மாணவனுக்கு கேடயம் மற்றும் பரிசுப் பொருள் வழங்கி தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், இன்னும் பலபடிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று ஊக்கப்படுத்தினர்.
குழுவினன்மடு குக்கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட சுதர்சன் தனது சாதாரண தரக் கல்வியை மட்/ கொல்லநுலை விவேகானந்தா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை மட்/ முதலைக்குடா மகா வித்தியாலயத்திலும் பயின்று பௌதிக விஞ்ஞானத் துறையில் தோற்றி இச் சாதனையை தன்வசமாக்கியுள்ளார்.
நகரப்புறத்தில் கல்வி கற்கும் மாணவர்களால் மாத்திரம் சாதிக்க முடியும் எனும் விம்பத்தை தகர்த்து கிராமப்புறங்களில் உள்ளவர்களாலும் உயர்ந்த இலக்கை அடையலாம் எனும் தன்னம்பிக்கையை தனது சமூகத்திற்கு விதைத்து விட்டார் இம் மாணவன்.
இச் சாதனை பற்றி கூறும்; மாணவன் சுதர்சன் தன்னை ஊக்கப்படுத்திய பெற்றாருக்கும், கல்வியை சிறப்பாக வழங்கிய தங்களது பாடசாலை அதிபர், ஆசிரிர்கள் நிருவாகத்திற்கும் நன்றியை தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் இது போன்ற சிறிய கிராமங்களில் இருந்து வைத்தியம், பொறியியல், சட்டம், தொழில்நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும்; சாதனை படைக்கும் மாணவர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறிக்கொண்டார்.





















