சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் சேமிப்பாளர் கெளரவிப்பு நிகழ்வும்

அக்கரைப்பற்று சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டமும் அதன் சேமிப்பாளர்களைக் கெளரவிக்கும் நிகழ்வும் தலைவர் கே.சுந்தரலிங்கம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றிருந்தன.

அக்கரைப்பற்று – 9, விகாரை மேற்கு வீதியிலுள்ள சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்க அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் கடந்த 2018 ஆம் ஆண்டில் வைப்பிலிடப்பட்ட சேமிப்புகளில் முன்னோடிகளாகச் செயற்பட்டிருந்த அங்கத்தவர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களோடு இணைத்து பாராட்டுப் பத்திரங்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், நிருவாக சபை உறுப்பினர்களால் இவ்வாண்டில் புதிய வகுப்புகளுக்குச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் அங்கு வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளுக்கு மத்தியில் சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரும், கடந்த 17 வருடகாலமாக சமூக மேம்பாட்டு வேலைத்திட்டங்களில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் சேவையாற்றிவருபவரும், சமாதான நீதவானுமான ஸ்ரீ ஜோன்ராஜன் தேவ் ஆனந்த் சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்க நிருவாகிகளால் பொன்னாடை போர்த்தியும், பாராட்டுப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் என்பன வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.