முனிபா மஸாரி | இதை படிக்கும் போது நிச்சயமாக உங்கள் எண்ணங்களில் ஒரு மாற்றம் வரும்

பாக்கிஸ்தான் நாட்டின் இரும்பு பெண்மனி முனிபா மஸாரி
-சகி-
நாம் நம்முடைய வாழ்க்கையில் எனக்கு எதுவுமே இல்லை எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என் வாழ்க்கையில் எந்த நன்மையும் நடக்கவில்லை என்று கவலைப்படுவதிலேயே வாழ்நாட்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு பிடித்த விஷயங்களும் நாம் நேசிப்பவர்களும் நம்மை விட்டு போய் விடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்து பலவற்றை இழந்து அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம்முடன் இருப்பதற்கு தகுதி உள்ளவை மட்டும் தான் நம்முடன் இருக்கும். நம்மை விட்டு போகின்றவற்றை பற்றி கவலைப்படுவதை நிறுத்த வேண்டும். நாம் எல்லோருக்கும் பயம் என்ற ஒன்று உண்டு. நிறைய விடயங்களுக்காக நாம் பயப்படுகின்றோம். அதில் முக்கியமான பயம் நாம் நேசிப்பவர்களை இழந்து விடுவோமோ என்பது. அவர்களை வாழ்நாள் முழுவதும் நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பலவாறு நம்மை நாமே மாற்றிக் கொண்டு வாழ்கிறோம். நமக்கென்று ஒரு தனித்துவம் இன்றி வாழ்கிறோம். இறைவன் நமக்கென்று தந்திருக்கும் நல்லவற்றை கொண்டு நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும். வாழ்க்கையில் எல்லாம் இழந்த போதும் சோர்ந்து போகாமல் சாதித்த மனிதர்கள் பலர் நம்மோடு இருக்கின்றர். அவர்களோடு ஒப்பிட்டு பாருங்கள் அப்போது தெரியும் நீங்கள் எவ்வளவு அதிஷ்டசாலி என்பது.

அப்படி ஒரு சாதனை பெண்ணை பற்றி தான் நான் இங்கு கூற போகின்றேன்.

இதை படிக்கும் போது நிச்சயமாக உங்கள் எண்ணங்களில் ஒரு மாற்றம் வர வேண்டும்.

"அவர்கள் எனது குறைகளை பார்கிறார்கள்
நான் எனது நிறைகளை பார்க்கிறேன்.
அவர்கள் என்னை ஊனமுற்றவள் என்றார்கள்
நான் என்னை மாற்றுதிறனாளி என்றேன்."

இந்த வசனம் ஒரு மேடையில் முனிபா மஸாரி என்ற ஒரு முப்பது வயது பெண் தன்னை பற்றி கூறியது.

முனிபா மஸாரி இவரை "இரும்பு பெண்மனி" என்று அழைக்கிறார்கள். மனதால் மட்டும் இரும்பு பெண்ணல்ல உண்மையாகவே இவரது உடலில் இடுப்பு பகுதிக்கு கீழ் உள்ள எல்லா உடற்பாகங்களும் இரும்பால் பொருத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தான் இவரை இரும்பு பெண்மனி என்கிறார்கள்.

முனிபா மஸாரி இவர் பாகிஸ்தான் நாட்டின் பலோஜிஸ்தான் என்ற ஒரு கிராமத்தில் 1987ம் ஆண்டு பிறந்தவர். மிகவும் கலாச்சாரமும் கட்டுப்பாடுகளும் நிறைந்த ஓர் ஊர் அது. அவரது சிறு வயது கனவே தான் ஒரு ஓவியராக வர வேண்டும் என்பதே. ஆனால் அவரது பதினெட்டாவது வயதில் அவரது தந்தையின் விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்து கொண்டார். தான் திருமணம் செய்து கொள்வது தான் தன் தந்தைக்கு விருப்பம் என்பதால் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் தான் தனக்கு மகிழ்ச்சி என்று முனிபா மஸாரி அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால் அந்த திருமண வாழ்க்கை ஒரு போதும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. திருமணம் முடித்து இரண்டாவது வருடம் அவர் கார் விபத்து ஒன்றில் சிக்கினார். காரை ஓட்டிச்சென்ற அவர் கணவர் தூங்கி விட்டதால் கார் ஒரு பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

முனிபா மஸாரியின் கணவர் காரிலிருந்து குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார் ஆனால் முனிபா மஸாரி காரினுள்ளேயே மாட்டிக் கொண்டார். அந்த நிலையிலும் கணவர் தப்பித்தது அவருக்கு மகிழ்சியளித்தது.


அந்த விபத்தில் அவர் உடலில் பல எலும்பு முறிவுகளும் பலத்த அடிகளும் ஏற்பட்டது. அது ஒரு கிராமம் என்பதால் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதே சிரமமாக இருந்தது. பின் வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டு பல சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரின் உடலில் பல பாகங்களில் நட்டுகளும் இரும்பும் பொருத்தப்பட்டு உயிரோடு காப்பாற்றப்பட்டார்.

அடுத்த நாள் வைத்தியர் அவரிடம் இனி ஒருபோதும் உங்களால் நடக்க இயலாது என்று கூறினார். அத்துடன் அவரால் இனிமேல் ஓவியம் வரையவும் முடியாது என்றும் கூறினார்கள்.

முனிபா மஸாரி மிகவும் மனமுடைந்து போனார். இருபது தொடக்கம் இருபத்தைந்து வயதிற்குள் இருக்கும் ஒரு இளம் வயது பெண். அவரின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

மீண்டும் அடுத்தநாள் வைத்தியர் அவரிடம் உங்கள் சிறுநீர்ப்பை சேதமடைந்ததால் உங்களுக்கு சிறுநீர் கட்டுப்பாடு இருக்காது ஆகவே எப்பொழுதும் செயற்கை சிறுநீர் பை பொருத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்கிறார்.ஆனாலும் முனிபா மஸாரி தன்னால் வாழ்ந்து விட முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்.

அந்த நம்பிக்கையை உடைக்கும் இரண்டு செய்திகள் அவரை உருக்குலைத்தது. ஒன்று அவரது கணவர் முனிபா மஸாரியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் புரிந்து கொண்டார் ஆனால் முனிபா மஸாரி தனது கணவருக்கு திருமண வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

இரண்டாவது அவரால் எப்போதும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பது. அதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கை என்பது அவள் தாயாகும் போது தான் முழுமையடைகின்றது என்று ஒரு கலாச்சாரம் மிக்க ஊரில் பிறந்து வளர்ந்தவர் முனிபா மஸாரி.

வைத்தியசாலையின் வெள்ளை சுவர்களை பார்த்து பார்த்து அவருக்கு நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்ற எண்ணம் தோன்றியது.

ஆனால் முனிபா மஸாரியின் தாய் அவரிடம் "இதுவும் கடந்து போகும். நீ சாதிக்க வேண்டிய ஏதோ ஒன்றை கடவுள் உனக்காக வைத்திருக்கிறார் ஆகவே சோர்ந்து போகாதே" என்று தைரியம் கூறினார். அதன் பின் தன் பயத்தை தகர்த்தெறிந்து விட்டு தன் சாதனை பயணத்தை தொடங்கினார் முனிபா மஸாரி.

அவரது முதல் ஓவியம் "எனது மரப்படுக்கையின் மீது" என்னும் தலைப்பில்.

அது வெறும் ஓவியம் மட்டுமல்ல அவரது காயங்களுக்கு சிகிச்சையாக இருந்தது.

தன்னால் தாயாக முடியாது ஆனால் இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் அநாதையாக இருக்கிறார்கள், நான் ஏன் அப்படி ஒரு குழந்தைக்கு தாயாக இருக்க கூடாது? என்று ஒரு குழந்தையை தத்தெடுத்தார்.

மேலும் அவர் ஊனமுற்ற அனாதை குழந்தைளை பாதுகாக்கும் ஒரு சேவை மையத்தை ஆரம்பித்தார். ஓவியம் வரைய ஆரம்பித்தார். அவருடைய அற்புதமான உயிருள்ள ஒவியங்களை உலகம் வியந்து நோக்க தொடங்கியது.

பாகிஸ்தான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி ஒன்றில் கடந்த மூன்று வருடங்களாக அறிவிப்பாளராக பணியாற்றுகின்றார் முனிபா மஸாரி அவர்கள்.

இன்று அவர் பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் நலன்புரி அமைப்பின் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராக இருக்கின்றார்.

முனிபா மஸாரி அவர்கள் தன்னுடைய வாழ்க்கையின் வெற்றிக்கும் தன்னுடைய முடிவில்லா புன்னகைக்கும் காரணம் என்னவென்று இவ்வாறு கூறுகின்றார் "நான் ஒரு போதும் இழந்த பொருட்களுக்காகவோ மனிதர்களுக்காகவோ கவலைப்படுவதில்லை, ஏனெனில் எவரெல்லாம் என்னோடு இருக்க வேண்டும் விரும்பினார்களோ அவர்கள் இன்னும் என்னுடனே இருக்கிறார்கள். சில நேரம் சில மனிதர்கள் உங்கள் வாழ்வில் இல்லாதிருப்பது உங்களை நீங்கள் ஒரு சிறந்த மனிதராக செதுக்கிக் கொள்ள வழி வகுக்கும். உங்களை நீங்களே நேசித்து கொள்ளுங்கள்".

முப்பத்தியொரு வயதிற்குள் இழக்க கூடாதவைகள் அனைத்தையும் இழந்தும் கூட இன்று வெற்றியின் உச்சத்தில் நிற்கும் இந்த அற்புதமான பெண்ணின் வாழ்க்கை பயணம் நமது வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
-சகி-