இலங்கையின் 71வது சுதந்திர தின ராஜதந்திர வரவேற்பு உபசார வைபவத்தினை குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் குவைத் நகரில் அமைந்துள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் கடந்த 07 .02 . 2019 இல் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தது.
பிரதம அதிதிகளால் மங்கள விளக்கேற்றப்பட்டு குவைத் மற்றும் இலங்கை தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதை அடுத்து குவைத்துக்கான இலங்கை தூதுவர் மேதகு காண்டீபன் பாலசுப்ரமணியம் சபையோரை விளித்து உரையாற்றினார்.
குவைத்தில் வாழும் 120 ,000 க்கும் மேற்படட இலங்கையர்களின் நாட்டுக்கான அர்ப்பணிப்பை மெச்சிய தூதுவர் தனது சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த கால அடைவுகளை மிக நன்றியுணர்வுடன் மீட்டிய தூதுவர் குவைத் அரசாங்கத்தின் அளப்பரிய ஒத்துழைப்புக்களை பாராட்டிப்பேசினார்.
இரு தரப்பு பொருளாதார மற்றும் வணிக உறவுகளுக்கும் கால்கோளாக இருக்கும் இருநாட்டு உயர்மட்ட தலைவர்களின் வருகைகள் மேலும் அதிகரிக்கப்படவேண்டிய முக்கியத்துவத்தினை மேதகு காண்டீபன் அவர்கள் வலியுறுத்தினார்.
குவைத் நாட்டின் அதி மேதகு அமீர் அவர்கள் முடி சூட்டப்பட்டதன் 13 வது ஆண்டு நிறைவையும், சுதந்திரம் அடைந்து 58 ஆவது ஆண்டு நிறைவையும் ஈராக் யுத்தத்த்திலிருந்து விடுதலை பெற்று 28 வருட நிறைவையும் பெப்ரவரி மாதத்தில் கொண்டாடும் குவைத் சமூகத்தினருக்கு இலங்கை அரசின் சார்பில் தனது வாழ்த்துக்களை தூதுவர் பகிர்ந்துகொண்டார்.
வர்த்தக ராஜதந்திரத்தில் ஒரு முனைப்பான மென் சக்தியாக கலாச்சாரம் திகழ்வதன் முக்கியத்துவத்தைக் கோடிட்டுக்காட்டிய குவைத்துக்கான இலங்கை தூதுவர் இரு நாடுகளும் கலாச்சார அம்சங்களை பரிமாறிக்கொள்வதை ஊக்கப்படுத்தினார்.
பொருளாதார , வணிக, அரசியல் மற்றும் கலாச்சாரம் அடங்கலான ஒட்டுமொத்த இருதரப்பு உறவு செயற்பாடுகளில் பூரண திருப்தியை வெளியிட்ட தூதுவர் கடந்த வருடம் இடம்பெற்ற கூட்டு வர்த்தக குழுக்கூட்டத்தை நடாத்திய குவைத்தின் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் மேதகு காலித் நாசர் அல் ரௌதான் அவர்களுக்கு தனது விசேட நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
தனது உரையின் போது இவ்வாண்டு இலங்கை நடாத்தவுள்ள அழிவினை எதிர் நோக்கும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பான 18 வது மாநாட்டிற்கான (CITES Cop - 18 ) இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய மேதகு காண்டீபன் அவர்கள் வந்திருந்த வெளிநாட்டு தூதுவர்களினூடாக அவர்களுடைய அரசாங்கங்களுக்கு இம்மாநாட்டிற்கானஅழைப்பினை விடுத்தார் . இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான (CITES Cop - 18 ) தகவல்கள் அடங்கிய உத்தியோகபூர்வ காணொளியும் அவரது உரையின் இடைநடுவில் ஒளிபரப்பப்பட்டது.
மத்திய கிழக்கின் அமைதி மற்றும் பாதுகாப்பை மீள் உறுதிப்படுத்த குவைத்தின் அதி மேதகு அமீரின் அர்ப்பணிப்பினை மெச்சிய தூதுவர் அதற்கான இலங்கையின் பூரண ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தினார்.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் முக்கிய அங்கமாக இலங்கையிலிருந்து வந்து கலந்துகொண்டிருந்த எஹலபொல கலைஞர் குழுவின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.அத்தோடு இலங்கையின் பல்லினத்தன்மையினைபிரதிபலிக்கும் ஆடை நடை பவனியும் (Fashion Show) அரங்கேற்றப்பட்டது.
நிகழ்வுக்கு சமூகம் தந்தோர் செவ்விளநீர் பானத்துடன் வரவேற்கப்பட்டதுடன் இலங்கைக்கே உரித்தான வாசனைதிரவியங்களுடன் கூடிய இராப்போசனத்துடன் உபசரிக்கப்பட்டனர் .
மேலும் குவைத் வாழ் இலங்கையர்களுக்காக இலங்கை தூதுவராலயம் சுமார் 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கலந்துகொண்ட கலை நிகழ்வு ஒன்றையும் மிஷரிப் கலாச்சார நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
குவைத் நாட்டிற்கான இலங்கைத் தூதுவரான காண்டீபன் பாலசுப்ரமணியம் மட்டக்களப்பை சேர்ந்தவராவார் .
![]() |
| Officers From Batticaloa |



















