உதயபுரத்தில் கருமாரி அம்மன் ஆலய மாசிமக யாகத்தில் நடந்த அற்புதம்.



ரவிப்ரியா 

பெரியகல்லாறு உதயபுரத்தில் வேம்புமரத்தின் கீழ் அமைக்கப்பட்ட எளிமையான ஆலயத்தில் இருந்து அருள் பாலிக்கும் கருமாரி அம்மனின் அற்புதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அம்மன் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த செவ்வாயன்று நடைபெற்ற மாசிமக நான்காவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு யாகம் நடாத்துவதற்கு ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பாண்டிருப்பைச் சேர்ந்த நாகேஸ்வரன்  குருக்கள் (கல்முனை அரசடி பிள்ளையார் ஆலயம்) முதற் தடவையாக திடீரென வருகை தந்தார்.

ஆலய நிர்வாகிகள் வேறு ஒரு குருக்களை மட்டக்களப்பில் இருந்து ஒழுங்கு பண்ணியிருந்த வேளையில் தங்களுக்கு அறிமுகமில்லாத அந்த குருக்கள் வேம்பு மரத்தையும் ஆலயத்தையும் சுற்றிப்பார்த்துவிட்டு அம்மன் எனக்கு கட்டளை பிறப்பித்த ஆலயம் இதுதான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.

எனது ஆலயத்தில் நடைபெற இருக்கும் யாகத்திற்கு 21 மூலிகைகளை கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என அம்மன் பணித்தார். மூலிகைகளின் பெயர்களை கூறும்படி கேட்க அவை உன்னிடம் வந்து சேரும் என கூறி மறைந்துள்ளார்.

இரண்டு நாட்களில் அந்த மூலிகைப் பொதி தான் பூஜை செய்யும் ஆலயத்தில் காணப்பட்டதாகவும் இதை அம்மன்தான் அனுப்பியுள்ளார் என்பதை உணர்ந்து அவற்றை உலர்த்தி கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.     

அம்மன் வாக்கு கொடுத்த 21 மூலிகைகளோடு வந்திருக்கின்றேன் என்று கூறி மூலிகைகள்   கையளித்தார். அத்துடன் வேம்பு மரத்தில்தான் இருப்பதாகவும் அதன் கீழ் நெய் விளக்கேற்றுமாறும் கூறியுள்ளார் என தெரிவித்தார். (குறித்த மரத்தில் பெரிய கருநாகமும், வெண்நாகமும் இருக்கும் படங்கள் ஆலய பொறுப்பாளர்கள் வசம் இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.) அத்துடன் அம்மரத்தில் இரு கண்களுக்கான அடையாளமும் காணப்படுகின்றது.

பின்னர் குறித்த ஐயா பூஜை நேரத்தில் குடும்பத்துருடன் வந்து நெய்விளக்கேற்றி அம்மனின் கோரிக்கையை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.

மட்டக்களப்பில் இருந்த வந்த ஐயா யாகம் வளர்த்தார். அவ்வேளை யாக தீயில் அம்மன் திருவுருவம் மற்றும் சிவன், முருகப் பெருமான் மயிலுடனும் காட்சி தந்ததாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். சிலர் இதை காணொளியிலும் பதிவு செய்துள்ளதையும் காணக் கூடியதாக இருந்தது. (இணைக்கப்பட்டுள்ள கடைசிப் படங்களை உற்று நோக்கினால் ஒரளவு தெரியும் கைதொலைபேசி படங்கள் என்பதால் தெளிவ குறைவு) பூஜையின்போது வயது பேதமின்றி பல பெண்கள் உருவேறி ஆடவும் செய்தனர்.

மிகவம் சக்திமிக்க ஆலயமாக வளர்ந்துவரும் இவ்வாலயத்தின் உரிமையாளரும் அம்மனின் சக்தி பெற்றவருமானவர் (பெண்) அம்மன் அருளால் பக்தர்களின் குறைகள் மற்றும் நோய்கள் தீர்த்துவைப்பதிலும் முன்னிலை வகிக்கின்றார். தீர்வு கிடைத்தவர்களின் கைபட எழுதிய சுய பதிவேட்டையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்மாதம் 3ந் திகதி குறித்த நாகம் தீண்டி உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த பெரியகல்லாறு மக்கள் வங்கி வீதியைச் சேர்ந்த திருமதி உதயகுமாரன் விமலேஸ்வரி (52) நாகம் தீண்டி தான் மறுபிறவி எடுத்த மெய்சிலிர்க்கவைக்கும் கதையை எம்மிடம் தெரிவித்தார். (அப்பெண் தனியாக அம்மனை தரிசிப்பதை படத்தில் காணலாம்).

நள்ளிரவு நெருங்கும் நேரம். நான் நல்ல உறக்கத்தில் இருந்தபோது காலில் ஏதோகொத்தியது போன்ற உணர்வு. திடுக்கிட்டு விழித்து காலைப் பார்த்தபோது காலின் அருகருகே 3 இடங்களில் இருந்து இரத்தம் பொசிந்து கொண்டிருந்தது. தாங்கமுடியாத வலி. உடல் நீலமாக மாறிக் கொண்டிருந்தது. உணர்விழந்து வருவதை உணர்ந்தேன். உடனே என்னை இந்த ஆலயத்திற்கே கொண்டுவந்தார்கள்.

ஆலய அம்மா என்காலில் வாய்வைத்து விஷத்தை உறிஞ்சி எடுத்து வாயால் துப்பினார். இவ்வேளை நான் முற்றாக உணர்விழந்துவிட்டேன். இறுதியில் ஆலய அம்மாவும் உணர்விழந்து விட்டதாக பின்னர் அறிந்தேன். சிறிது நேரத்தில் நான் உணர்வு பெற்றேன். ஆலய அம்மா ஆபத்தான காரியம் என தெரிந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு தனது உயிரைத் துச்சமாக மதித்து எனக்கு உயிர் பிச்சை அளித்ததை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது. இதன் மூலம் கருமாரியம்மனின் அருளையும் மகிமையையும் நேரடியாக என்னால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது என அவர் தனது அனுபவத்தை நேரடியாக எம்மிடம் மெய்சிலிர்க்க பகிர்ந்து கொண்டார். இதற்கு முன்னரும் இதேபோல் அரவம் தீண்டியவர்களை ஆலய அம்மா காப்பாற்றியள்ளார் என்பதை சுய பதிவேட்டில் சம்பந்தப்படடவர்கள் பதிந்துள்ளதை காணக் கூடியதாக இருந்தது.

அகந்தை கொண்டு அழிவின் விழிம்பில்  இருக்கும் மனித குலம் அம்மனின் அருளாள் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை.            ;       ;     .