காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்படுவது எப்போது?

எண்பத்து நான்கு வருட கால பழைமை வாய்ந்த காரைதீவு பிரதேச வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் நிர்வாகத்தின் கீழ் இவ்வைத்தியசாலை இயங்கி வருகிறது.காரைதீவு பிரதேசத்திலுள்ள சுமார் 20ஆயிரம் மக்களின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்கின்ற இவ்வைத்தியசாலை அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
இந்த இடத்தில் பிரதேச வைத்தியசாலை அமைவதற்கு தனது காணியை 2005இல் அன்பளிப்பாக வழங்கியவர் பேராசிரியர் த.வரகுணம் ஆவார்.
காரைதீவுக்கான நிரந்தர வைத்தியசாலை 1954இல் கிராமசபைக் கட்டடத்தில் முதன்முதலாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.1978இல் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெட்ணம் மேற்கொண்ட முயற்சியால் மகப்பேற்று மருத்துவமனையுடன் கூடிய மத்திய மருந்தகமாக( CDMH) இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட்டது. அவரது சகோதரி அமரர் திருமதி ரங்கநாயகி பத்மநாதனின் முயற்சியினால் இவ்வைத்தியசாலை சுற்றயல்கூறு தரத்திற்கு (PU)தரமுயர்த்தப்பட்டது.
2004 இல் ஏற்பட்ட சுனாமியால் கடலருகேயிருந்த இவ்வைத்தியசாலை சின்னாபின்னமாகியது. அதன் பின்னர் 2006இல் தற்காலிகமாக காரைதீவு கமநலகேந்திர நிலையத்தில் மனித அபிவிருத்தித் தாபம் அமைத்துக் கொடுத்த கொட்டில்களில் இயங்கி வந்தது. அக்காலகட்டத்தில்தான் இது பிரதேச வைத்தியசாலையாக தரமுயத்தப்பட்டது.
2009 இல் சண்முகா மகாவித்தியாலயத்திற்கு அருகிலுள்ள பேராசிரியர் த.வரகுணத்தின் பல கோடி ரூபா பெறுமதியான காணியினை அன்பளிப்பாகப் பெற்று அங்கு 'மேர்லின்' என்ற பன்னாட்டு அரசசார்பற்ற ஸ்தாபனம் 8.42 கோடி ருபா செலவில் தற்போதுள்ள வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தது.
தற்போது மாவட்ட வைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி ஜீவராணி சிவசுப்பிரமணியம் கடமையாற்றி வருகிறார்.இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்படாமையினால் பல பிரச்சினைகளை, இடர்பாடுகளை, வசதியீனங்களை இவ்வைத்தியசாலை சந்தித்து வருகிறது. குருதி, சிறுநீர்ப் பரிசோதனை உட்பட பல வசதிகள் இங்கு இல்லை.
ஆளணிக்கோப்பின்படி 23 சிற்றூழியர்கள் இருக்க வேண்டிய நிலையில் இங்கு 19 ஊழியர்களே உள்ளனர். அதேபோல் 5 வைத்திய அதிகாரிகள் இருக்க வேண்டிய நிலையில் 3 வைத்திய அதிகாரிகளே உள்ளனர். 10தாதிய உத்தியோகத்தர்கள் தேவையாக இருந்த போதிலும் 9பேர் மட்டுமே உள்ளனர்.
ஆளணித் தட்டுப்பாடு தொடர்பாக மாவட்ட வைத்திய அதிகாரி ​ெடாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்பிரமணிம் குறிப்பிடும் போது,"ஆளணி குறைவாக உள்ளதென்பது உண்மைதான். எனினும் நாம் அந்த ஆளணியை வைத்துக் கொண்டு வெளிநோயாளர் விடுதி, ஆண்விடுதி, பெண் விடுதி, மகப்பேற்று விடுதி, சிறுகுழந்தைகள் விடுதி போன்றவற்றை சீராக நடத்தி வருகின்றோம். வைத்தியர்கள் தமது கடமைக்கு அப்பாலும் சேவை செய்து வருகின்றனர்.
இதை விட தினமும் வெளிநோயாளர் பிரிவுக்கு மேலதிகமாக பல்வேறுபட்ட கிளினிக்குகள் நடைபெற்று வருகின்றன.
அதனை விட மாதமொரு முறை உளவள சிகிச்சைக் கிளினிக்கும் தவறாது நடைபெற்று வருகின்றது.
தினமும் 140 தொடக்கம் 200 வரையிலான வெளிநோயாளர்கள் வருகின்றனர். விடுதிகளில் சுமார் 50_-70பேர் வரையிலுள்ளனர். மாதாந்தம் 450-_500 வரையிலான நோயாளர்களுக்கு நாம் சிகிச்சையளிக்கிறோம்.
இங்கு வருடாந்தம் 12மாதங்களில் நோயாளர் அனுமதி 5500 ஐயும் தாண்டுகிறது. ஏனைய 'ஏ' அல்லது 'பி' தரத்திலுள்ள பிரதேச வைத்தியசாலைகளில் வருடாந்தம் 5000 பேர்தான் வருடாந்தம் அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே இதனைத் தரமுயர்த்துவதில் எந்த இடர்பாடுமில்லை. இதற்கான கோரிக்கைகளை எமது பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் உரிய சகல தரப்புகளிடமும் சமர்ப்பித்துள்ளேன். அபிவிருத்திச் சபையும் பொதுநலன்விரும்பிகளும் பிரமுகர்களும் பொதுமக்களும் சேர்ந்தே அதனை வென்று தர வேண்டும்" என்றார்.
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் கூட்டிய அபிவிருத்திக்கான பிரேரணைகளைப் பெறும் பொதுக் கூட்டத்தில் மாவட்ட வைத்தியஅதிகாரி ஜீவராணி இவ்வைத்தியசாலை தரமுயர்த்தப்பட வேண்டிய அவசியத்தையும் புறக்கணிப்புகளையும் தேவைகளையும் எடுத்துக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வைத்தியசாலையை தரமுயர்த்த அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே காரைதீவு மக்களின் ஒட்டுமொத்த கோரிக்ைகயாகும்.