
(y.சசி)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் மண்முனை மேற்கு கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மாணவிகள் க.பொ.த சாதாரண தரத்தில் இருவர் 9A சித்தியும், ஒருவர் 8A B சித்தியும் பெற்று வலயத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். தனது வரலாற்றில் முதல் தடவையாக 9A சித்திகளை இம் முறை பெற்றுக் கொண்டதை இட்டு பெருமிதம் கொள்கிறது மட்டக்களப்பு மேற்கு கல்விச் சமூகம்.
கன்னன்குடாவைச் சேர்ந்த செல்வி பிரபாகரன் அபிரக்ஷனா (9A), காயான்மடு கிராமத்தினைச் சேர்ந்த செல்வி மோகனதாஸ் டிலோச்சனா (9A) சித்திகளையும், மண்டபத்தடி கிராமத்தினைச் சேர்ந்த செல்வி மோகனரெத்தினம் மிதுஸா 8A B சித்தியினையும் பெற்று தமது கிராமத்திற்கும், வலயத்திற்கும் முன்னோடி மாணவர்களாகத் திகழ்கின்றனர்.
சாதனை புரிந்த மாணவிகளை பிரதிக்கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் அவர்களும், பாடசாலை அதிபர் ரி. புலேந்திரகுமார் அவர்களும், கோட்டக்கல்விப் பணிப்பாளரும் முன்னாள் பாடசாலை அதிபருமான எஸ். முருகேசுப்பிள்ளை அவர்களும், செயற்றிட்ட பொறுப்பாசிரியர் திரவியராஜா அவர்களும், பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டு பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர். இதில் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த மாணவிகள் உயர்தரத்தில் கணிதப்பிரிவிலும், விஞ்ஞானப்பிரிவிலும் கல்வியைத் தொடர்ந்து சாதனை படைக்கவிருக்கும் நிலையில் இவர்களது கல்வி நடவடிக்கைகளுக்கு போதுமான பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் பல தடங்கல்களுக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலையில் காணப்படுகின்றனர்.
செல்வி மோகனதாஸ் டிலோச்சனா, செல்வி மோகனரெத்தினம் மிதுஸா ஆகிய மாணவிகளின் குடும்பநிலை அன்றாடம் கூலி வேலை செய்து சீவியம் நடத்துகின்ற இக்கட்டான நிலையிலேயே காணப்படுகின்றது. சாதாரண தரம் வரையிலும்; அடிப்படை வசதிகள் அற்ற கிராமத்தில் இருந்து சாதனை படைத்த இம் மாணவிகளின் உயர்தரக் கல்வியும் பொருளாதார ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் மாணவிகளுக்கு முக்கிய தேவையான பொருளாதார உதவிகள் வழங்கப்படுமிடத்து இவர்கள் மென்மேலும் சாதனைகள் புரிவார்கள் என்பதில் ஐயமில்லை.
கடந்த கால யுத்த வடுக்களால்; பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமானது குறைந்தளவு பௌதிக கட்டமைப்பு வசதிகளுடன் பல சவால்களையும் முகம் கொடுத்து கல்வியில் சாதனைகள் படைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















