சுப்ரா பரீட்சையில் சித்திபெற்ற உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு


அக்கரைப்பற்று சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கம், சமூகஜோதி அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்கம் மற்றும் மகளிர் மறுமலர்ச்சி மன்றம் ஆகிய முறைசார் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மகளிர் தினத்தோடிணைந்த சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு கடந்த வெள்ளியன்று (08) மாலை இடம்பெற்றிருந்தது.

கலை இலக்கிய ஆர்வலரும், ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்த சபையின் உறுப்பினரும், சமாதான நீதவானுமான கலாபூஷணம் கே.எஸ்.ரி.மாணிக்கவாசகம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த மேற்படி நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று – 9 கிராம சேவகர் பிரிவுக்கான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும், அகில இலங்கை சமாதான நீதவானுமான எம்.சபாரெத்தினத்தின் இல்ல வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நிகழ்வுகளில் முதலாவதாக, கடந்த வருடம் மலேசியாவில் இடம்பெற்ற அனைத்துலக தமிழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான முதற்சுற்று தமிழ் பேச்சுப் போட்டிகளில் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகத் தெரிவாகி, பின்னர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சென்னை நகரிலுள்ள SRM கல்லூரியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று மிக இளவயதில் இந்த பெறுவதற்கரிய சாதனையைப் படைத்திருந்த பொலன்னறுவை மாவட்டம், சமன்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி வித்தியாலயம், உணாவெவ, செவனப்பிட்டிய பாடசாலையின் ஆசிரியர் பாலன் சுதாகரன் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரும், ஜனாதிபதி விருது பெற்ற இலக்கியவாதியும், பிரபல எண்கணித ஆய்வாளருமான கலாபூஷணம் எஸ்.ஜோன்ராஜனால் பொன்னாடை போர்த்தியும், கலாபூஷணம் கே.எஸ்.ரி.மாணிக்கவாசகத்தினால் மாலை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்.

அடுத்து இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் கடந்த வருடம் மே மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்தப்பட்ட அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் தரத்துக்குப் (SUPRA) பதவியுயர்வு வழங்குவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை தொடர்பாகக் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆந் திகதி வெளியான எழுத்துப் பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கமைய இலங்கை முழுவதிலிருந்தும் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கு மத்தியில் 361 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக முதலிடத்தையும், 319 புள்ளிகளைப் பெற்று 23 ஆம் இடத்தையும் பெற்று சிறப்புச் சித்தி பெற்றவர்களும், மேற்குறிப்பிடப்பட்ட சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கம், சமூகஜோதி அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்கம் மற்றும் மகளிர் மறுமலர்ச்சி மன்றம் ஆகிய முறைசார் அமைப்புக்களின் உறுப்பினர்களுமான கிருஷ்ணபிள்ளை சோபிதா மற்றும் ஸ்ரீ ஜோன்ராஜன் தேவ் ஆனந்த் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமத்திய மாகாணத்தின் தமிழர் பிரதேசமான சமன்பிட்டி கிராமம் தொடங்கி கிழக்கிலங்கையின் தென்கோடிப் பிரதேசமான பாணமை வரை பரந்துவாழும் சமூக மேம்பாட்டு அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள், மேற்படி மூன்று முறைசார் அமைப்புக்களினதும் உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலர் பங்கேற்ற குறித்த சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வின்போது முதலில் கிருஷ்ணபிள்ளை சோபிதாவின் பெற்றோர் கௌரவிக்கப்பட்டதோடு, அவரது மகத்தான சாதனையின் பொருட்டு மகளிர் மறுமலர்ச்சி மன்றத் தலைவி திருமதி. பரிமளாதேவி பத்மராஜா அவருக்குப் பொன்னாடை போர்த்த, நிருவாக சபை உறுப்பினர் திருமதி. நவமணி நல்லதம்பி மாலை அணிவித்தார். அடுத்து பாண்டியூர் கவிஞர் மீரா சுந்தர் தன்னால் புனையப்பட்ட பாராட்டுப் பாமாலையை வாசித்ததுடன், சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.சுந்தரலிங்கம் அப்பாமாலையைக் கையளித்தார். தொடர்ந்து சமூகஜோதி அமரர். கணபதிப்பிள்ளை விஜயகுமார் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்தினால் அவருக்கான நினைவுப் பரிசும் அங்கு வாசித்துக் கையளிக்கப்பட்டது.

அவரைத் தொடர்ந்து மேற்படி பரீட்சையில் 23 ஆம் இடத்தைப் பெற்ற ஸ்ரீ ஜோன்ராஜன் தேவ் ஆனந்துக்கான கௌரவிப்பின்போது, முதலில் அவரது பெற்றோர் கௌரவிக்கப்பட்டதோடு, சுபீட்சம் சமூக அபிவிருத்திச் சங்க நிருவாக சபை உறுப்பினர் எஸ்.கணேசலிங்கம் அவருக்குப் பொன்னாடை போர்த்த, திருக்கோவில் பிரதேச செயலகப் பணியாளர் வி.மகேந்திரன் மாலை அணிவித்தார். அடுத்து கலாபூஷணம் அக்கரை மாணிக்கவாசகம் தன்னால் இயற்றப்பட்ட வாழ்த்துப் பாமாலையை சபையில் வாசித்துக் கையளித்ததையடுத்து, கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தாமோதரம் பிரதீபனால் அவருக்கான நினைவுப் பரிசு அங்கு வாசித்துக் கையளிக்கப்பட்டது.

அதனையடுத்து பாண்டிருப்பு திருவள்ளுவர் சமூக ஒன்றியத்தின் சார்பில் அதன் தலைவர் என்.சசிகாந்தினால் சாதனையாளர்களான கே.சோபிதா மற்றும் எஸ்.ஜே.தேவ் ஆனந்த் ஆகியோருக்கான நினைவுப் பரிசுகள் கையளிக்கப்பட்டன.

சமூக மேம்பாட்டு அமைப்புக்களின் சார்பில் வருகைதந்த அதிதிகள் மற்றும் குறித்த சாதனையாளர்களின் சக உத்தியோகத்தர்களான தமிழ், முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் அங்கு உரையாற்றியிருந்தனர். அனைவரும் தமதுரைகளில் குறித்த இருவரதும் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள், பண்புகள், குணவியல்புகள் குறித்துப் பேசியதோடு, அவர்களிடையே காணப்படும் விசேட புலமைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுப் பேசியிருந்தனர்.

இந்நிகழ்வுகளின்போது மகளிர் மறுமலர்ச்சி மன்றத்தின் அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின சிறப்புரைகளும், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.