முதல் தடவைப் பெறுபேற்றில் சாதனை புரிந்த தாண்டியடி அ.த.க பாடசாலை


(y.சசி)
மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் ஒரு மத்திய கிராமமாக காணப்படும் தாண்டியடி அரச தமிழ்க் கலவன் பாடசாலையில் முதன் முதலாக 2018 ஆம் வருடமே க.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 19 மாணவர்கள் தோற்றியதில் 14 மாணவர்கள் உயர்தரத்தில் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். 4A, 2B, 2C, S முதன்மைப் பெறுபேறாக காணப்படும் நிலையில் 73% மாணவர்கள் பாடங்களில் முதல் தடைவையிலேயே சித்தியடைந்தமையானது பாடசாலைச் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

அதிகஸ்ட பிரதேசங்களில் ஒன்றாகவும், கடந்தகால யுத்த அவலங்களில் சிக்கித் தவித்த பிரதான கிராமமாகவும் தாண்டியடி கிராமம் விளங்கியது. ஆங்காங்கே கூலி வேலை, ஒருபோக விவசாயம் செய்யும் அடித்தட்டு மக்களை கொண்டமைந்த இப்பிரதேசம் தற்போதைய காலவேளையில்தான் கல்வியை நோக்கிய பாதையை அமைத்து பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் இப்பிரதேச மாணவர்கள் தமது சாதாரண கல்வியைத் தொடருவதற்கு கூட நகரப்புறத்திற்கோ அல்லது ஏனைய கிராமங்களுக்கோ செல்ல வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது.

இந் நிலையினை மாற்றுவதற்கு கடந்த நான்கு வருடங்களாக முயற்சித்த அதிபர் அருணாசலம் போசராசா அவர்களது முயற்சி தற்போதுதான் கைகூடியுள்ளது. சிறந்த ஆசிரியர்களது கற்பித்தல் மற்றும் அதிபரது திறமையான முகாமைத்துவம் காரணமாக முதலாவது இலக்கில் வெற்றி கண்ட இப் பாடசாலை வருகின்ற சவால்களையும் முகம்கொடுத்து வெற்றிகொள்ளும் என நம்பிக்கை விதைக்கின்றார் பாடசாலை அதிபர்.

தற்போது பாடசாலை ஆரம்பித்து 37 வருடங்கள் கடந்துள்ள நிலையில் போதுமான பௌதீக வளங்கள் இல்லாமையால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் கல்வியினைத் தொடருகின்ற நிலைமையினை இங்கு காணக்கூடியதாக உள்ளது. குறைந்தளவு மேசை, கதிரைகளை உள்ளடக்கிய தளபாடங்கள் அதுவும் உடைந்த நிலையில் உள்ளமையானது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள பாரிய சவாலாக அமைகின்றது.

குறித்த சவால்களைத் தாண்டியும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் இக்குறைபாடுகள் வெகு விரைவாக நிவர்த்தி செய்யப்படும் இடத்து தமது கல்வி அபிவிருத்தி மேம்பாட்டிற்கு ஏதுவாக அமையும் என்றும் பாடசாலையை மென்மேலும் வளர்ச்சிப்பாதையை நோக்கி கொண்டு செல்ல தாண்டியடிக் கிராமத்தினுடைய சமூகமும், தமது வலய கல்விச் சமூகமும் தமக்கு பக்கபலமாக இருப்பதாகவும் கூறிக்கொண்டார்.