
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உட்பட பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்கு வசதியாக தேவையான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்.மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை போக்குவரத்துச் சபை புகையிரதத் திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன ஒன்றிணைந்த இந்த விசேட போக்குவரத்துச் சேவைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளன.
கிராமப்புறங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தரும் மக்களின் வசதி கருதி தேவையான அளவு மேலதிக பஸ்வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிராமப்புறங்களில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தரும் மக்களின் வசதிகள் கருதி விசேட போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனக மல்லிமாராச்சி தெரிவித்துள்ளார். பஸ் வண்டி தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசேட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் சேவைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அவை தொடர்பில் பொதுமக்களால் தொலைபேசியின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 0117 555 555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட முடியும். இதற்கென கையடக்கத் தொலைபேசியும் பயன்படுத்த முடியும். அதற்கான இலக்கம் 0771 056 032 ஆகும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த முடியும். அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பாகவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாகவும் இந்தத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.