கிழக்கு மாகாண இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களின் இடமாற்றம் உடன் செயற்படும் வண்ணம் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்



உயிர்த்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இஸ்லாமிய இராச்சியத்துக்கான மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலினால் மன உளச்சலுக்கும், மனித பாதுகாப்புக்கும் மத்தியில் உள்ள கிழக்கு மாகாண இஸ்லாமிய பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களின் இடமாற்றம் உடன் செயற்படும் வண்ணம் கல்வி அமைச்சு கவனத்தில் கொள்ளல் வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கிழக்கு மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளில் கடமையாற்றிய சுமார் 100க்கு மேற்பட்ட இஸ்லாமிய ஆசிரியர்கள் பதிலாளின்றி மனித பாதுகாப்புக்கருதி தற்காலிக இடமாற்றம் பெற்று சென்று இருப்பதினால் தமிழ் மொழிப் பாடசாலைகளில் உள்ள மாணாவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு பெரும் பாதிப்பினையும், கல்குடா, மேற்கு கல்வி வலயங்களில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அன்மையில் வெளியாகிய க.பொ.த.(சா.த) பரீட்சையில் கல்குடா, மேற்கு கல்வி வலயங்கள் முன்னேற்றமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இவ் ஆசிரியர்கள் பதிலாளின்றி தற்காலிக இடமாற்றம் பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது மேலும் பட்டிருப்பு கல்வி வலயமானது தேசிய ரீதியில் 91வது நிலையில் மிக மோசமான கல்விப்பின்னிடவை சந்தித்துள்ளவேளை பெருமளவான ஆசிரியர்கள் பதிலாளின்றி இடமாற்றம் பெற்றுள்ளார்கள்.

இவ் ஆசிரியர்களின் இடமாற்றங்களை கருத்தில் கொண்டும் ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை கவனத்தில் கொண்டும் இஸ்லாமிய பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் ஆசிரியர்களை குறிக்கப்பட்ட வலயங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய, மாகாண கல்வியமைச்சுக்கள் முன் வரவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் அச்சத்தின் மத்தியில் காத்தான்குடியில் தேசிய, மாகாண பாடசாலைகளில் சேவையில் உள்ள தமிழ் மொழியிலான ஆசிரியர்களின் மனித பாதுகாப்பினை உயர்வாக கருத்தில் கொண்டும், கல்முனை கல்வி வலயத்தில் இருந்து மத்திய கல்வி வலயத்திற்கு பயணிக்கும் பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் சோதணைச் சாவடிகளில் அசௌகரியங்களை எதிர் நோக்குவதினை கருத்தில் கொண்டும் அருகில் உள்ள பட்டிருப்பு, மேற்கு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்லின சமூக கட்டமைப்பைக் கொண்டதும், பல்லின சமூக கலாச்சார விழுமியங்களைக் கொண்டதுமான கிழக்கு மாகாண கல்வி பெரும் பின்னிடைவைச் சந்தித்துள்ளவேளை, சில அரசியல் வாதிகளின் அரசியல் நிரல்களினால் தரமாண கல்வி பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.



இதேவேலை புதன் கிழமை 15ம் திகதி மத்திய கல்வியமைச்சின் இடமாற்றக் கிளையின் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான நிலைமையை விளக்கியுள்ளதாகவும் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.