
(தேவா)
மட்டக்களப்பு மாவட்டமானது வடக்கே வெருகல் ஆற்றைக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தையும் கிழக்கே வங்காள விரிகுடாவையும் தெற்கே அம்பாரை மாவட்டத்தையும் மேற்கே பொலன்நறுவை மாவட்டத்தையும் எல்லைகளாகக் கொண்ட 2633.1 சதுர கிலோ மீற்றர் பரப்புடைய பிரதேசமாகும்.
மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியது. இம்மாவட்டத்தில் 169,874 குடும்பங்களை உள்ளடக்கிய 588,202 பேர் வாழ்கிறார்கள். தமிழர்களான இந்துக்களையும், கிறிஸ்தவர்களையும் (72.24%) பெரும்பான்மையாகக் கொண்ட இம் மாவட்டத்தில் முஸ்லீம் (26.28%), பறங்கியர் (0.83%)இ சிங்களவர் (0.59%) உம் வாழ்கின்றனர். தேசிய ரீதியாக வறுமையில் முதலிடம் வகிப்பதுடன் மதுபாவனை மூலம் அரசுக்கு மிகக்கூடிய வருமானத்தைக் கொடுக்கும் மாவட்டமாகவும் மட்டக்களப்பு உள்ளது. இதுமட்டுமன்றி தேசிய ரீதியான 25 மாவட்டங்களில் ஆரம்பப்பிரிவு கல்விப் பெறுபேற்றில் 24ம் இடத்தையும் , இடைநிலைக் கல்விக்கான பெறுபேற்றில் 22ம் இடத்தையும் வகிக்கின்றது.

பதின்னான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, ஏறாவூர் நகரம், காத்தான்குடி ஆகிய பகுதிகள் முஸ்லீம்களை மிக அதிகமாகக் கொண்ட பிரதேசசெயலகப் பிரிவுகளாகும். மாவட்ட முஸ்லீம்களில் (154,686) 62.23% (96,212) ஆனவர்கள் இந்த நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழ்கின்றார்கள். மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் கணிசமான முஸ்லீம்கள் உள்ளதுடன் மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கணிக்கத்தக்க எண்ணிக்கையினர் உள்ளனர். நாட்டுச் சூழ்நிலை, முஸ்லீம்களின் துரித இனப்பெருக்கம் காரணமாக மாவட்ட சனத்தொகையில் 26.28% ஐ வகிக்கும் இவர்கள் தமிழ் பிரதேசங்களை தம்வசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.



பெரும்பான்மை இனக்கட்சிகளில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதை அறிந்திருந்தும் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் பெற்றுக்கொடுத்த வாக்குகளால் இரு முஸ்லீம் அரசியல் பிரமுகர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கடந்த முறை பெற்றனர். இத்துடன் கடந்தகாலச் சூழ்நிலை காரணமாக அரசியலிலும் அரச பதவிகளிலும் செல்வாக்குச் செலுத்தும் முஸ்லீம்கள் அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களில் தமிழர்களை புறக்கணிப்பதுடன் தமிழ் பிரதேச அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவும் உள்ளனர். அரபு நாட்டு நிதி உதவியுடன் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து தமிழர் காணிகளை தமது உரிமையாக்கும் பல்வேறு சம்பவங்களும் வெகு கச்சிதமாக நடந்தேறுகின்றதாக சொல்லப்படுகிறது. தமிழர் காணிகள் பறிபோவதைப் பலர் முகநூலிலும், இணையத்தளங்களிலும் பதிவிடுகின்றனரே தவிர ஆக்கபூர்வமான காரியம் எதுவும் இடம்பெறுவதாக தெரியவில்லை. அரசியல்வாதிகளோ அல்லது புலம்பெயர் நாடுகளில் வாழும் வசதிபடைத்த தமிழர்களோ இதைக்கண்டும் வாளாவிருக்கின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுத்து அன்றில் இருந்து இன்றுவரை தமது பிரதேசத்தை பல சிரமத்தின் மத்தியில் கட்டிக்காத்துவரும் கிராமமே கட்டுமுறிவுப் பிரதேசம்.





கோறளைப்பற்று வடக்குப் பிரதேச செயலக பிரதேசம் எனப்படும் வாகரை 589 சதுர கீலோமீற்றர் பரப்பை உடையது. இது மாவட்டத்தில் பரப்பளவில் கூடிய இரண்டாவது பிரதேச செயலகமாகும். 16 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 47 கிராமங்களைக் கொண்டது. 23901 தமிழர்களும் 928 முஸ்லீம்களும் 162 சிங்களவர்களும் இங்கு வாழ்கின்றனர். (2016 புள்ளிவிபர அறிக்கை – மட்டக்களப்பு மாவட்ட செயலகம்). பொலநறுவை , திருகோணமலை மாவட்டங்களின் எல்லையில் இச்செயலகப்பிரிவு அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்த காலத்தில் சிரேஷ்ட போராளிகளின் மறைவிடமாகக் காணப்பட்ட இப்பகுதி பல அழிவுகளையும் இழப்புக்களையும் கண்டது. யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வளர்ச்சி கண்டிராத பகுதியாகவே இது இன்றும் காணப்படுகிறது.
வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள கட்டுமுறிவு எனப்படும் பிரதேசம் கட்டுமுறிவு , ஆண்டான்குளம் ஆகிய இரு கிராமங்களை உள்ளடக்கியது. மட்டக்களப்பு நகரில் இருந்து 90 km தரைவழித்தூரத்தையும் பொலன்நறுவை மாவட்டத்தில் இருந்து 5 km காட்டுவழித் தூரத்தையும் கொண்டது. கதிரவெளி கிராமத்தில் இருந்து நோக்கின் 19 km தரைமார்க்கத் தூரத்தில் கட்டுமுறிவு கிராமம் உள்ளது. இப்பாதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான ஒரேயொரு பேருந்து ஒரு நாளைக்கு ஒரு சேவையை மட்டுமே வழங்குகின்றது. முற்பகல் 6.30 மணிக்கு கட்டுமுறிவில் இருந்து புறப்படும் இப்பேருந்து வாழைச்சேனை சென்று மீண்டும் பிற்பகல் 3.00 மணிக்கு கதிரவெளியில் இருந்து கட்டுமுறிவுக்குச் செல்கிறது. இப்பாதையில் தனியார் போக்குவரத்துச் சேவை என்பதே கிடையாது.


கதிரவெளியிலிருந்து கட்டுமுறிவுக்கான தரைமார்க்க 'கிறவல்' பாதை சீரற்ற நிலையில் காணப்படுவதுடன் முழுப் பிரதேசமும் அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் , மழைக் காலங்களில் வீதியைக் கடந்து நீர்பாயும் தாழ்வான பகுதிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. பாதையில் இடைக்கிடை சில பத்து மீற்றர் 'கொங்கிரிட்' பாதை இடப்பட்டுள்ளது. வீதிகளில் உள்ள நீர்செல்லும் சில மதகுகள் உடைந்து அதனுள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வீதியில் செல்லும் வாகனங்களின் 'டயர்'களை சேதப்படுத்தத் தயார் நிலையில் காணப்படுகிறன. ஆங்காங்கே கிறவல் பாதையில் சேர்ந்துள்ள மணல் மோட்டார் வாகனச் சாரதிகளை வீழ்த்த கங்கணம் கட்டி காத்துக்கிடக்கின்றன. பாதையில் பயணிக்கும் வாகனத்தின் 'டயரி'லிருந்து காற்றுப் போனால் அதோகதிதான். இவ் வீதிகளில் பகல் வேளையில் கூட யானைகளின் நடமாட்டம் காணப்படுவதுடன் வீதியில் யானைகளின் நடமாட்டத்தைக் காட்டும் சுவடுகள் சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. ஆங்காங்கே யானைகளால் துவம்சம் செய்யப்பட்ட குடியிருப்புக்கள் சின்னாபின்னமாகக் காணப்படுகின்றன.







கட்டுமுறிவு பிரதேசத்தில் 267 குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 1100 மக்கள் வாழ்வதாக உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகிறார்கள். 1956 இல் சிங்கள மொழி மட்டும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிங்கள , தமிழ் இனக்கலவரத்தின் போது வடக்கு , கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழ் மக்கள் சொல்லொணா துன்பங்களையும் இழப்புக்களையும் கண்டனர். இவ்வாறு பாதிப்புற்ற மக்களே கட்டுமுறிவு பிரதேசத்தில் அதிகமாக வாழ்வதாக பிரதேசவாதி ஒருவர் குறிப்பிட்டார். இப்பிரதேசத்தில் உள்ள கட்டுமுறிவுக்குளம் எனும் நன்னீர்த்தேக்கம் 850 கனஅடி நீரைக்கொண்டதாக கூறப்படுகிறது. இது 25.5 சதுர கிலோமீற்றர் பரப்புக்கு நீர்ப்பாய்ச்சி பயிர்ச்செய்கைக்கு பயன்படுவதாகவும் அறியமுடிகிறது. இதன்காரணமாக இப்பிரதேச மக்கள் நன்னீர் மீன்பிடி, விவசாயம் என்பவற்றுடன் தேன் எடுத்தலையும் தமது பிரதான தொழில்களாக கொண்டுள்ளனர்.




கல்வி அறிவுமட்டம் மிகக்குறைவான இப்பிரதேசத்தில் அரச ஊதியம்பெறும் ஒருவரே உள்ளார். இவர் கூட ஒரு சிற்றூழியரே. கட்டுமுறிவு , ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள சிறார்களுக்கு கல்வியை வழங்கும் ஒரேயொரு பாடசாலையாக கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளது. ஒன்பது ஆண் ஆசிரியர்களுடன் ஒரு பெண் ஆசிரியையும் கொண்ட இப்பாடசாலை தற்காலிக அதிபரின் வழிநடத்தலில் செயல்படுகின்றது. ஆண்டு 01 தொடக்கம் 11 வரையிலான வகுப்புக்களைக்கொண்ட இப்பாடசாலையில் 96 ஆண்களும் 80 பெண்களுமாக 176 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.


ஐந்து வகுப்புக்களைக் கொண்ட ஆரம்பப்பிரிவில் இரு ஆசிரியர்களே கடமை புரிகின்றனர். இடைநிலைப் பிரிவில் கணிதம் , விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களையும் கற்பிக்க ஆசிரியர் அற்ற நிலை காணப்படுகின்றது. 'வெட்டவெளியில்' அமைந்து பதிவான கூரைகளைக்கொண்ட பாடசாலைக் கட்டிடங்கள் சித்திரை வெயிலில் அனல் பறக்கும் வகுப்புக்களாக காணப்படுகின்றன. அதிபர் அலுவலகத்தின் முன் உள்ள மாணவர் , பெற்றோர் தரிப்பிடம் வேயப்படாத கூரையுடனாக காட்சியளிக்கிறது. ஆங்காங்கே பல கட்டிடங்களின் கூரைகள் சிதைவடைந்து காட்சியளிக்கிறது. மொத்தத்தில் பெயரளவுப் பாடசாலையாகவே இது காணப்படுகின்றது.
கதிரவெளிப் பிரதேசத்தில் இருந்து கடமைக்குச் செல்லும் ஆண் ஆசிரியர்கள் 'கட்டுமுறிவுப் பாதையில் காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 3.00 மணி வரையிலான காலப்பகுதியே தமது பயணத்திற்கு பாதுகாப்பானது' எனக் குறிப்பிடுகின்றனர். 'இரவு வேளையில் யாருக்காவது திடீர் சுகவீனம் ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன?' என வினாவினேன். 'இவ்வாறான வேளைகளில் நான்கு ஐந்து மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ ஓசையை எழுப்பிக்கொண்டு சுகவீனமானவரை கதிரவெளி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதே தமது வழக்கம்' என்றனர். 'பாம்புக்கடிக்கு உள்ளானவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் இறந்து உள்ளதாகவும்' கவலையுடன் தெரிவித்தனர். மழை காலங்களில் தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்படுவதால் கிராமமானது வாரக்கணக்கில் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.


வாரத்திற்கு ஒருநாள் சில மணித்தியாலங்கள் மட்டுமே வைத்திய ஆலோசனை வழங்கும் ஒரு மருந்தகம் இங்கு காணப்படுகிறது. சரியான கல்வி வாய்ப்பின்மை , அத்தியாவசிய சுகாதார வசதி இன்மை , சீரிய போக்குவரத்து இன்மை , வனவிலங்குகளின் அச்சுறுத்தல் என்பவற்றின் மத்தியில் இக்;கிராம மக்கள் இங்கு வாழ்கின்றனர். வசதி வாய்ப்புக்களுக்காகவும் சௌகரியத்திற்காகவும் தமது இருப்பிடங்களை மாற்றினால் இப்பிரதேசம் மாற்றுச் சமூகங்களால் கபளீகரம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இது நூற்றுக்கு நூறு வீத உண்மையும் கூட.

பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கல்வி அதிகாரிகளிடம் வினாவிய போது பல்வேறு விடயங்கள் வெளிப்பட்டன. கட்டுமுறிவுப் பாதையில் தினமும் 'மோட்டார் சைக்கிளில்' பயணிக்கும் ஆசிரியர்கள் பலர் முள்ளந்தண்டு உபாதைக்கு உட்பட்டு உள்ளனர். இதன் காரணமாக ஏனைய ஆசிரியர்கள் இப்பிரதேசத்திற்கு செல்ல அஞ்சுகின்றனர். மேலும் கல்குடா கல்வி வலயத்தில் ஆசிரியர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதால் கட்டுமுறிவு போன்ற பகுதிகளுக்கு ஆசிரியர்களை அனுப்பும் பணி கடினமாக உள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் வலயப்பணிப்பாளரின் செயற்பாட்டுக்கு பெரும் சவாலாக உள்ளதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர். தமது வலயத்தில் உள்ள மாணவர்களின் கல்விக்கு சரியான பங்களிப்பை வழங்க அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் இடமளிக்காவிட்டால் தான் வலயக்கல்விப் பணிப்பாளர் பதவியிலிருந்து விலகுவேன் என கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் அண்மையில் ஓர் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கினார். இதன்மூலம் பல விடயங்களை நம்மால் ஊகிக்க முடிகிறதல்லவா!
கட்டுமுறிவு , ஆண்டான்குளம் எல்லையிலுள்ள குளக்கரையில் காணப்படும் ஆதியில் உருவான கட்டுமுறிவு பிள்ளையார் ஆலயம் யுத்த சுவடுகளை தாங்கியவாறு இன்றும் நிற்கிறது. இது அரசியல்வாதிகளின் அல்லது அதிகாரிகளின் கண்களில் இன்னும் படவில்லையா? என்ற வினா எம்முள் மேலோங்கி நிற்கிறது.

கட்டுமுறிவுக் குளத்திலிருந்து திறந்துவிடப்படும் நீர் செல்லும் வாய்க்கால் பாடசாலையின் நுழைவாயிலுக்கு அருகாக பாய்ந்து செல்கிறது. புற்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் அந்த வாய்க்காலில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் பல சிறார்கள் நீராடிக் குதூகலிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விரக்தியுடன் அவர்களைப் பார்த்து விலகிச் சென்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் காவலர்களாக வாழும் தம்மையும் தமது சமூகத்தையும் அரசியல்வாதிகளும் ஏனையவர்களும் கண்டுகொள்ளாத நிலையே நிலவுவதாக இப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்க (RDS) தலைவர் கதிரமலை விஸ்வநாதன் கவலையுடன் குறிப்பிடுகிறார். இவ்வாறான நிலைமையில் இருந்து எதிர்காலத்தில் தாம் விடுபட தமது பிரதேச சிறார்களின் கல்வியை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற திடமான எண்ணத்தில் இவர்கள் உள்ளனர். முதற்கட்டமாக தமது பிள்ளைகள் உயர்தரத்தில் கணிதம் , விஞ்ஞானம் கற்க வேண்டும் என்பது இவர்களின் அவா!




அண்மையில் வெளியான க.பொ.த (சா / த) 2018 பரீட்சைக்கு கட்டுமுறிவு பாடசாலையில் இருந்து 06 மாணவர்கள் தோற்றி 04 மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். பரீட்சைக்குத் தோற்றிய எவருமே கணித பாடத்தில் சித்தி பெறாமையால் உயர்தரத்தில் கணிதம் , விஞ்ஞானம் கற்பதற்கான தகுதியை இவர்கள் இழந்துள்ளனர். இது இம்மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் விரக்தியையும் அளித்துள்ளது. இந்நிலையை நிவர்த்திசெய்ய பாடசாலை நிர்வாகம், கல்வித் திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார்கள் என்பது புரியவில்லை.
மாவட்ட எல்லைக் காவலர்களாக உள்ள கட்டுமுறிவு , ஆண்டான்குளம் மக்களின் நியாயமான தேவைகளையும் கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்ய யார் வருவார்கள் என்ற ஏக்கத்துடன் பல ஆண்டுகளாக இம்மக்கள் காத்துக்கிடக்கின்றனர். யானைக்கான மின்வேலிக்குள் வாழும் இம்மக்களின் எதிர்பார்க்கைகள் நிறைவேறுமா? அவ்வப்போது அதிகாரிகளின் கைகளில் தமது தேவைகளை மனுக்களாக வழங்கிக்கொண்டு பல்வேறுபட்ட கனவுகளோடு காத்திருக்கும் கட்டுமுறிவு மக்களின் எண்ணங்களை நனவுகளாக்க யார் வருவார்கள்? என்ற நினைவுகளோடு மட்டக்களப்பை நோக்கி பயணிக்கலானோம்.














