பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடுகின்றது



ஏப்ரல் 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று (29ஆம் திகதி) காலை கூடவுள்ளது.

விசேட தெரிவுக்குழு இன்று காலை 9 மணிக்கு கூடவுள்ளதுடன், ஊடக சந்திப்பை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடக சந்திப்பை நடத்தவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதனிடையே, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் நேற்று பாராளுமன்ற விசேட நடவடிக்கை குழுவின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடரபில் ஆராய்வதற்காக குறித்த தெரிவுக்குழு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

ரவுப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன, ஆஷூ மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன, M.A. சுமந்திரன் மற்றும் டாக்டர். நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இதனிடையே, தாம் குறித்த தெரிவுக்குழுவில் இருந்து விலகுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சமீபத்தில் சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த விசேட தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க ​போவதில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது.

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இந்த தெரிவுக்குழு விடயங்களை ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.