மத ஒற்றுமையை கட்டியெழுப்ப ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்


நாட்டில் மத ஒற்றுமையை கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க் கட்சியும் கண்டிப்பாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பில் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் 4வது பிரதேச செயலமர்வு குருநாகலில் ​நேற்று (17) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிபோதே சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்ப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட, எதிர்க் கட்சியினர் வழங்கிய ஒத்துழைப்பையும் சபாநாயகர் பாராட்டியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது: அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பைத் தெரிவிப்பது எதிர்க் கட்சியின் செயற்பாடாகாது. பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளுக்கும் எதிர்க் கட்சி ஒத்துழைப்பு வழங்கும். 

பிரிவினைவாத செயற்பாடுகளை தடுப்பதற்கு, ஒன்றிணைந்த வேலைத் திட்டம் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார். தேவையான மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்தில் இருந்தே வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.