திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை தீர்த்தோற்சவம்



(வி.சுகிர்தகுமார் )

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலில் திருவருள் கொண்டு அருள் பாலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க தொன்மைமிகு நாகர்முனை கந்தப்பாணத்துறை என போற்றப்பட்டு வரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் இன்று  ஆயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தென்கிழக்குத் திசையில் திருக்கோவிலில் அமைந்துள்ள வரலாறுகள் பல கூறும் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடியமாவாசை திருவிழா கடந்த 14ந் திகதி கொயேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தடன் ஆரம்பமான ஆடியமாவாசை உற்சவமானது தினமும் 18நாட்கள் விஷேட யாகங்கள், கிரியைகள் கொடித்தம்ப பூஜைகள் இடம்பெற்று இன்று நண்பகல் வங்ககடலில் இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடனும் நாளை இடம்பெறும் பூங்காவனத்திருவிழாவுடனும் வைரவர் பூஜையுடனும் நிறைவுறவுள்ளது.

இன்று காலை ஆலயத்தில் பல அடியவர்கள் காவடி ஆட்டங்களில் கலந்து கொண்டு தமது நேர்த்திகளை நிறைவு செய்தனர்.

இதேவேளை ஆலயத்தில் இடம்பெற்ற கொடித்தம்ப பூஜையினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் பொற்சுண்ணம் இடிக்கும் கிரியைகள் ஆரம்பமானது. இடிக்கப்பட்ட பொற்சுண்ணம் மூலமூர்த்தவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு காப்பாக கட்டப்பட்டது.

தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் இடம்பெற்றதுடன் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளி ஆலயத்தில் உள் வீதியுலாவாக வந்தார்.

இதேவேளை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்ட விசேட பந்தலில் முருகப்பெருமானின் வேலிற்கு விசேட அபிசேகம் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா எனும் வேண்டுதலுக்கு மத்தியில் முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் நடைபெற்றது. 

கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் மற்றும் சிவஸ்ரீ நீ.அங்குசநாதக்குருக்கள் தலைமையிலான குருமார்கள் நடாத்தி வைத்தனர்.