
க.பொ.த (சா/த)-2019 பரீட்சைக்குத் தோற்றவுள்ள மட்டக்களப்பு கல்வி வலய மாணவர்களின் பெறுபேற்றினை எதிர்வு கூறும் ஆய்வினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், திருமதி சுஜாதா குலேந்திரகுமார் மேற்கொண்டுள்ளனர். இவ் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு வலயப் பெறுபேற்றினை உயர்த்தும் முகமாக வலயக் கல்விப் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலை ரீதியாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரை சந்தித்து தெளிவுபடுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு கல்வி, கலை, கலாசார, பண்பாடுகள் மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய சிவாநந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா, இக்னேசியஸ் வித்தியாலயம், பாரதி வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக எதிர்வு கூறும் ஆய்வு அறிக்கை இன்று 14-07-2019 கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் நடைபெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் சி.தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவருடன் பிரதேச ஆலயங்களின் தலைவர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், RDS அமைப்புக்கள், நம்பிக்கை நிதியங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், பெற்றார்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
க.பொ.த (சா/த) பெறுபேற்றை தேசியரீதியாக நோக்கும் போது வடக்கு கிழக்கு மாகாண பெறுபேறு கடை நிலையிலே காணப்படுகின்றது. மாவட்ட ரீதியாக நோக்கும் போது மட்டக்களப்பு மாவட்ட பெறுபேறு, வலயத்தின் பெறுபேறு என்பன பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் வலயப் பெறுபேற்றினை முன்னிலைக்கு கொண்டுவர கல்விப் பணிமனை மேற்கொள்ளும் பெறுபேறுகளை எதிர்வு கூறும் ஆய்வு நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என ஒன்றியத் தலைவர் குறிப்பிட்டார். கல்லடிப் பிரதேச மக்களும், ஆலயங்களும் கல்வி வளர்ச்சிக்காக நெடுங்காலமாக பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 120 வருடங்களுக்கு முன்னர் விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தையும், ஆங்கிலக் கல்விக்காக 90 வருடங்களுக்கு முன்னர் சிவாநந்தா வித்தியாலயத்தையும் உருவாக்கி நிரூபித்தார்கள். இதையொட்டியே பிரதேச கல்வி வளர்ச்சிக்காக ஒன்றியம் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்தது என ஒன்றியத் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கடந்த கால க.பொ.த (சா/த) பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்து வருவதை சுட்டிக் காட்டி அதை அதிகரிப்பதற்காக விஞ்ஞான ரீதியான தனது அணுகுமுறையை பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் விளக்கினர். மாணவர்கள் பரீட்சையில் பெற்ற புள்ளிகள், ஆசிரியர் சந்திப்பு, மாணவர்கள் சந்திப்பு என்பனவற்றின் மூலம் பெற்ற தகவல்களையும் தமது ஆய்வில் உட்படுத்தியிருந்தனர். வலய ரீதியாக பெறுபேற்றை உயர்த்துவதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்ளும் போது பாடசாலை ஆசிரியர்கள், பெற்றார்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என்றனர்.
மிகப் பயனுள்ள பெறுபேற்றை எதிர்வுகூறும் ஆய்வினை மேற்கொண்ட திணைக்கள அதிகாரிகளை மாநகர முதல்வர் பாராட்டினார். எனினும் ஆலயங்கள், பிரதேச அமைப்புக்கள், கல்வி அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்கள் போன்ற பிரதேச சமுகங்கள் ஒன்று கூடியுள்ள வேளையில் அழைப்பு வழங்கியும் சிவாநந்தா தேசிய பாடசாலை, விவேகானந்தா மகளிர் பாடசாலை அதிபர்கள் பங்கு கொள்ளாதது கவலை தரும் விடயம் என மேலும் தெரிவித்தார். கல்வித் திணைக்கள அதிகாரிகள் விடுமுறை தினம் என்றும் பாராது சமூகத்திற்காக பணியாற்றும் போது அதிபர்கள் பாடசாலை வளர்ச்சியை முதன்மைப் படுத்தாமல் தமது வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவது ஆரோக்கியமான செயலல்ல. பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பூரண ஒத்துழைப்பை வழங்க முடியாத அதிபர்கள் பாடசாலையை விட்டு வெளியேறுவது மிக நன்று என மாநகர முதல்வர் தெரிவித்தார்.
தேசிய பாடசாலைகளின் மீது வலயப் பணிமனையும், வலயத் திணைக்கள அதிகாரிகளும் மேற்பார்வை, கண்காணிப்பு என்பனவற்றினை செய்ய முடியாது என்ற ஆசிரியர்களின் எண்ணம் மிகப் பாரதூரமானது. தேசிய பாடசாலையாக இருந்தாலும் மாகாணப் பாடசாலையாக இருந்தாலும் அங்கு கல்வி பயில்வது எமது பிள்ளைகளே. இவ்வாறான மனப்பாங்கு கொண்ட அதிபர்கள் ஆசிரியர்களிடமிருந்து மாணவர் சமூகத்தை மீட்க மக்கள் பிரதிநிதிகள் ஆவன செய்ய வேண்டும் எனப் பெற்றோர்கள் தெரிவித்தனர்.













































