(ஏ.எம் .றிகாஸ்)
முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பொறுப்புக்களை மீள ஏற்றிருப்பது தொடர்பாக மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபையில் 30.07.2019 நடைபெற்ற உறுப்பினர் அமர்வில் சிலாகித்துப் பேசப்பட்டது. அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றிருப்பது நல்லது ஆனபோதிலும் மீள ஏற்காதிருப்பது அதைவிட நல்லது என்று இங்கு கருத்துரைக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையின் 16 ஆவது அமர்வு முதல்வர் ஐ. அப்துல் வாஸித் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டும் வண்ணம் களியாட்ட நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு வரையறைகளுக்கு உட்பட்ட வகையில் அனுமதியளித்தல். பாடசாலை மாணவர்களது நலன்கருதி எதிர்வரும் 12 ஆந்திகதி தொடக்கம் 19 ஆந்திகதி வரை பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதற்கு தடைவிதித்தல்.
மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது விளம்பரப்பலகையில் குறித்த வட்டார உறுப்பினர்களது புகைப்படங்களையும் பிரசுரிக்க வேண்டுமென வலியுறுத்துதல் போன்ற விடயங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சபை முதல்வர் ஐ. அப்துல் வாஸித் இங்கு பேசுகையில்- நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலையினால் முஸ்லிம் மக்கள் மனஉளைச்சலில் இருக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப்பதவிகளை மீள ஏற்றிருப்பது நல்லது ஆனபோதிலும் இப்பதவிகளை ஏற்காதிருந்தால் மிகவும் நல்லது. குறிப்பாக மக்களின் பிரச்சினைகளை பேசித்தீர்க்கும் அதிகாரத்திற்காக முஸ்லிம் காங்கிரஸ் கெபினட் அமைச்சப்பதவியை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஏனைய பதவிகளை தவிர்த்திருப்பதும் அரசியல் ராஜதந்திரமாக இருக்கலாம். இந்நிலையில் வெறுமனே சரணடைந்துவிடாமல் முஸ்லிம் மக்களது அபிலாசைகளை நிறைவேற்றும் ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பிரதி முதல்வர் எம்எல். றெபு பாசம் உரையாற்றுகையில்- நாட்டில் பங்கரவாத தடுப்பு மற்றும் அவசரகால சட்டம் என்பன அமுலில் இருப்பதனால் தொடர்ந்தம் அப்பாவி முஸ்லிம்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த நிலையில் அப்பாவி முஸ்லிம்களது கைதுகளுக்கான காரணங்களை மூடிமறைத்து பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடித்துச் சென்றிருப்பதை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாது. எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் அவசரகாலச் சட்டத்தை நீக்கம்செய்யும் கோரிக்கையையாவது முன்வைத்திருக்கவேண்டும் என்றார்.
உறுப்பினர் என். சுதாகரன் பேசுகையில்- நல்லாட்சி அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவினால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்கள் கேள்விக்குறியாகவே உள்ளன. பொதுவாக இந்த நாட்டில் பின்தள்ளப்பட்ட சமூகமாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் காணப்படுகின்றனர். எனவே எதிர்காலத்தில் வாக்குகளை சேகரிக்கவரும் தமிழ்த் தலைமைகள் அடிப்படை உரிமை விடயத்தில் கரிசனை செலுத்தியவர்களாகவே பெரும்பான்மை கட்சிகளுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும் என்றார்.
உறுப்பினர் எஸ்எம். ஜப்பார் பேசுகையில்- முஸ்லிம் சமூகம் தமது பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தபோதிலும் தற்போதைய நிலையில் ஏமாற்றமே கிடைத்துள்ளது. வெறுமனே பதவிகளுக்காக ஆலாய்ப்பறந்துள்ளனர்.
குறிப்பாக கடந்தகால அசாதாரண சூழ்நிலையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி- பதுளை வீதியை அண்மித்த பகுதிகளில் அமைந்துள்ள வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பக்காணிகளிலிருந்து அனைத்தையும் கைவிட்டு வெளியேறிய முஸ்லிம்கள் போர் முடிவடைந்த பின்னர் மீளக்குடியேறுவதற்குச் செல்கின்றபோது அதிகாரிகள் காணி ஆவணங்களைக்கோருவது மனிதாபிமானமற்ற செயற்பாடாகவே நோக்கப்படுகிறது. இந்த விடயங்கள் அரசியல் மட்டங்களில் பேசித்தீர்க்கப்படவேண்டும் என்றார்.
உறுப்பினர் எஸ். சுதாகர ராஜா பேசுகையில் - நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு தமிழ் மக்கள் பெரும் வி;டுக்கொடுப்புடன் செயற்பட்டனர். ஆனபோதிலும் தமிழ் மக்கள் பிரதிபலன்களை அனுபவிக்கவில்லை. இதனால் தமிழ்த் தலைமைகள் இறுக்கமான உடன்படிக்கைகளின் பிரகாரமே பெரும்பான்மை கட்சிகளுக்கு ஆதரவினைத் தெரிவிக்க வேண்டும் என்றார்.
உறுப்பினர் யு.ஏ.றஷீட் இங்கு உரையாற்றுகையில்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகள் கிடைத்தபோது முஸ்லிம் சமூகம் அடைந்த சந்தோசத்தைவிடஇ எமக்கு ஏற்பட்ட பாதிப்பின்போது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் பதவி துறந்ததற்கான காரணங்களையும் அவர்களே கூறினார்கள் . மக்கள் எதனையும் கூறவில்லை. ஆனால் அன்று சொன்ன காரண காரியங்கள் எதுவும் நிவர்த்தி செய்யப்படாத நிலையில் அனைத்தையும் மறந்தவர்களாக மீண்டும் பதவிகளை பாரமெடுத்திருப்பதனால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
இந்த நாட்டிலே முஸ்லிம்கள் செய்கின்ற அதே தவறை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் செய்துவிட்டால் அரசாங்கமோ சட்டமோ கண்டுகொள்வதில்லை. இனவாத்தை, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து வெளியிடுபவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி தெரிவித்துள்ள கருத்தைக்கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. பௌத்த மதகுருக்கள் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்.
எனவே குறைந்தபட்சம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சொத்து இழப்புக்களுக்கு அரசாங்கத்தினால் முழுமையான நட்டஈடு வழங்கச்செய்திருந்தால் அரசாங்கத்திற்கு பெரும் சுமையாக அமைந்து இனிமேல் அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் அரசாங்கம் கவனிக்கும்நிலை ஏற்படும் என்றார்.












