யுத்தத்தின் பின் தமிழ் பிரதேசப் பாடசாலைகளில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் இன்னும் நிவர்த்தி செய்யப்படாத நிலைமையே காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு தமிழ் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் யுனிசெப் நிறுவனமானது முழுமையான கரிசனைகளைக் கொள்ள வேண்டும். என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையானது, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து மட்டக்களப்பு மாநகரினை சிறுவர் சினேகபூர்வ மாநகரமாக மாற்றியமைக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் செயற்றிட்ட அமர்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையிலான குழுவினர் தென்கொரியாவின் சீயோல் நகருக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். அங்கு கருத்துரைத்த போதே மாநகர முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.
சிறுவர்களின் பாதுகாப்பு அவர்களின் சுகாதாரமும், சுதந்திரமும் நிறைந்த வாழ்வு என்பவற்றினைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாநகரமானது யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து சிறுவர் நேய மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. பல வளர்முக நாடுகளில் மேற்படி சிறுவர் நேய மாநகரங்கள் அமையப் பெற்றிருந்தாலும், இலங்கையில் முதல் முறையாகவும் ஏனைய மாநகர சபைகளுக்கு எடுத்துக்காட்டாகவும் இத்திட்டத்தினை நிறைவேற்ற யுனிசெப் நிறுவனமானது முன் வந்தமையையிட்டு நான் மனம் நெகிழ்கின்றேன்.
அதே போல பெண்கள் நேயமான மாநகரமாக மாற்றியமைக்க எம்மோடு கைகோர்க்க சீயோல் நகர சபையும் சம்மதம் தெரிவித்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக தொழிநுட்ப மற்றும் கட்டமைப்பு ரீதியான உதவிகளுக்காக தொண்டரடிப்படையிலான உத்தியோகத்தர்களையும் எமது மாநகருக்கு அனுப்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே பெண்கள் நேய மாநகருக்கான எமது கனவும் நிறைவேறவுள்ளது.
மட்டக்களப்பு மாநகருக்குள் வாழும் சிறுவர்களின் திறன் விருத்தி சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதன் ஊடாக அவர்களை எதிர்காலத்தில் சமுகப் பொறுப்பு மிக்க நற்பிரஜைகளாக வளர்த்தெடுக்க முடியும். அதேவேளை தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துணிச்சல் மிக்கவர்களாக உருவாக்கவே நாம் விரும்புகின்றோம்.
அத்தோடு இந்த யுனிசெப் அமைப்பின் பங்குதாரர்கள் பலர் இங்கு உள்ளமையினால் எமது பொதுவான சில விடயங்களையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். யுத்தத்தின் பின் எமது மக்களுக்கான அடிப்படை வசதிகளோ, வாழ்வாதார மற்றும் சமுக மேம்பாட்டுக்கான ஏற்பாடுகளோ அரசாங்கத்தினாலும் பொறுப்பு வாய்ந்த சர்வதேச நிறுவனங்களினாலும் மேற்கொள்ளப்படாமல், எமது மக்கள் யுத்தம் முடிவடைந்த அதே இடத்திலேயே தரித்து நிற்கின்றார்கள்.
குறிப்பாக மாணவர்களின் கற்றலுக்கான வசதி வாய்ப்புகள், தமிழ் பிரதேசப் பாடசாலைகளில் காணப்படும் வளப் பற்றாக்குறைகள் என்பன இன்னும் நிவர்த்தி செய்யப்படாத நிலைமையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. கஸ்ட, அதிகஸ்ட பிரதேச கல்வி வலயங்களில் இன்னும் எமது பிள்ளைகள் அடிப்படை வசதிகள் இன்றியே தமது கல்வியைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இதில் பல மாணவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக தமது கல்வியை இடைநிறுத்தி சிறுவர் தொழிலாளிகளாக மாறும் அவலநிலையும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
இத்தகைய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திலும் இந்த யுனிசெப் நிறுவனமானது முழுமையான கரிசனைகளைக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எமது தமிழ் மாணவர்களும் இலங்கையில் உள்ள ஏனைய இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு இணையாக பாரபட்சமற்ற கல்வி வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள கூடியதாகவும் ஏனையவர்களைப் போலவே சம அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.













