அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு



(வி.சுகிர்தகுமார் )


அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க தலைவர் ஐ.எச்.வஹாப் மற்றும் அம்பாரை மாவட்ட செயலக சமுர்த்தி முகாமையாளர் கே.நேசராஜா மற்றும் சங்கத்தின் சிங்கள தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக எஸ்.எம்.சப்றாஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் சிநேகபூர்வமாக முறையில் முதல் தடவையாக இடம்பெற்ற இச்சந்திப்பில் மாவட்ட பணிப்பளாருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அம்பாரை மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினை தொடர்பில் சங்கத்தின் உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இக்கருத்துக்களையும் பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்ட சமுர்த்தி பணிப்பாளர் அதற்கான தீர்வுகளையும் விரைவில் பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்;.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரயாண கொடுப்பனவிற்காக உத்தியோகத்தர்கள் களசேமிப்பு இலக்கினை அடைய வேண்டும் எனும் கட்டாயப்படுத்தலை இல்லாதொழித்தல், உத்தியோகத்தர்களின் கடமை தினங்களை மாவட்ட மட்டத்தில் ஒரேவகையில் வரையறை செய்தல், கள மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களின் கடமை பட்டியலை வழங்கல் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கான தளபாட வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் மகாசங்க உத்தியோகத்தர்களுக்கான மேலதிக கொடுப்பனவை உரிய மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக இக்கூட்டத்தில் சமுர்த்தி பணிப்பாளர் உறுதியளித்தார்.

மேலும் அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தினை சிறந்த முறையில் முன்னெடுத்து மாவட்டத்தினை முதல் தரத்திற்கு கொண்டு செல்வது தொடர்பான தனது எதிர்கால நடவடிக்கை தொடர்பிலும் தெளிவூட்டினார்.

இதற்காக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தேவைப்பாட்டினையும் உணர்த்தினார்.