
இயற்கைச் சமநிலையினைப் பேணும் வகையிலும் மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கிலும் மட்டக்களப்பின் வாவிகளை அண்டிய சூழலில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரக் கல்லூரியின் சாரணிய மாணவி பா.சுவேக்கா அவர்களினால் ஜனாதிபதி உயர் சாரண விருதினை பெறும் பொருட்டு ஓர் சமூக சேவைச் செயற்றிட்டமாக இத்தாவரங்கள் நடப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாநகர முதல்வரின் வழிகாட்டலில் மேற்படி கண்டல் தாவரங்களை நடும் செயற்றிட்டமானது புளியந்தீவு வட்டாரத்திற்குட்பட்ட சுமைதாங்கியடிப் பாலத்திலிருந்து வாவிக்கரை வீதி - 02 வரையான கரையோரச் சூழலில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்களான அந்தோனி கிருரஜன், பு.ரூபராஜ் ஆகியோருடன் உதவி மாவட்ட சாரண ஆணையாளர் கிருஸ்டி மற்றும் மட்/வின்சன் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் சாரண மாணவர்கள், ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களை நட்டு வைத்தனர்.
மண்ணரிப்பைத் தடுக்கும் அரணாகவும், மீன்கள் இரைகொள்ளிகளில் இருந்து தம்மைத் தப்பித்துக் கொள்வதற்கும் ஏனைய பெரிய உயிரினங்களிடமிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்குமான இடமாகவும் கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.