தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை தொடக்க விழா

  (வி.ரவீந்திரமூர்த்தி)                                      
பன்நாட்டு அமைப்பாக இயங்கிவரும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கிளையின் தொடக்க விழா (19.10.2019) சனிக்கிழமையன்று களுதாவளை கலாசார மண்டபத்தில் கிளையின் தலைவர் சின்னத்தம்பி மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மா.உதயகுமார் கலந்து சிறப்பித்தார்;. மற்றும் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முல்லை நாச்சியார், தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ், நுவரெலியா மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.சுமதி அன்பரசு போன்றோருடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என மண்டபம் நிறைந்த அவையோருடன் இத் தொடக்கவிழா நடைபெற்றது.

தேத்தாத்தீவு மகாவித்தியாலய மாணவிகளின் இறைவணக்கத்துடனும் களுதாவளை மகாவித்தியாலய மாணவிகளின் தமிழ்மொழி வாழ்த்துடனும் கிளையின் உப தலைவர் க. குணசேகரத்தின் வரவேற்புரையுடனும் களுதாவளை மகாவித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்துடனும் ஆரம்பமாகிய இவ்விழாவில் தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் நோக்கம் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தினை தலைவர் தமது தலைமையுரையில் விரிவாக எடுத்துக்கூறினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் நிறுவனர் சேக்கிழார் அப்பாசாமி அவர்கள் இந்தியாவில் இருந்து அனுப்பிவைத்திருந்து வாழ்த்துச் செய்தியை டென்மார்க்கில் இருந்து வருகைதந்திருந்த கவிஞர் முல்லை நாச்சியாரினால் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களின் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. இதில் வெல்லவூர் த.விவேகானந்தம், கதிரவன் த. இன்பராசா, த.உருத்திரா, களுவாஞ்சிகுடியூர் அனோஜா பவளேந்திரன், ஆழிவேந்தன், அரசையூர் பகீ ஆகியோர் கவிபாடினர்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்வுகளில் திருமதி பரமேஸ்வரி பேரின்பராசா குழுவினரின் வில்லுப்பாட்டு நடைபெற்றதுடன் கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களின் தலைமையில் மாணவர் கவியரங்கமும் நடைபெற்றது. இதன் இடைஇடையே அதிதிகள் உரையும் கௌரவிப்புக்களும் இடம்பெற்றன. இதன்போது ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா மற்றும் கவிஞர் முல்லை நாச்சியார் ஆகியோர் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையினரால் கௌரவிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவையின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோரை அருட்கவி அக்கரையூர் அப்துல் குத்தூஸ் அவர்கள் கௌரவித்தமை நிகழ்ச்சி நிரலில் இல்லாத எதிர்பாரத நிகழ்வாக அமைந்திருந்தது. கவிஞர் முல்லை நாச்சியார் பேசுகையில் 'தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை அது நன்கு வளர்ந்த மொழியே. இதனைப் பேணிப் பாதுகாத்து சந்ததியினருக்கு ஒப்புவிப்பதே எமது கடமை. அதற்கு முக்கியமாக மாணவர்களுக்கு களம் அமைத்து அவர்களை மேடையேற்றுவதே இந்த தமிழ்ப் பட்டறையின் முக்கிய நோக்கம். இது எமது நிறுவனர்  சேக்கிழார்அப்பாசாமி அவர்களின் கருத்து' எனக் குறிப்பிட்டார்.


அரசாங்க அதிபருக்கு இறுதியாக பிரதம அதிதி உரை வழங்கப்பட்டிருந்த போதும் அரச கடமை காரணமாக நிகழ்வின் இடையில் தனதுரையினையும் கௌரவிப்புக்களையும் நிகழ்த்திச் சென்றிருந்தார். அவரின் உரையினைக் கேட்ட அவையோர் அவரின் தமிழ்ப் புலமையை மெச்சி வாழ்த்தினர். இறுதியாக  சபையில் சமரசம் உலாவச்செய்த தேத்தாத்தீவு கணேசா கலா மன்றத்தினரின் 'மயான காண்டம்' நாடகத்துடனும் செயலாளர் த.யுவராஜன் அவர்களின் நன்றியுரையுடனும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.

 விழா முடிவடைய சற்று நீண்ட நேரம் எடுத்திருந்தாலும் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தினர் அனைவரையும் தமிழர் பண்பாட்டுடன் வரவேற்று மதிய போசனம் வழங்கி உபசரித்தமை இன்னுமொரு சிறப்பம்சமாக அமைந்திருந்தது.