இன்றைய மட்டக்களப்பு !


ஆர்.சயனொளிபவன் & TEAM 

  • கல்வி 
  • பொருளாதாரம் 
  • அரசியல் 
  • கட்டுமானம்  
மட்டக்களப்பு நகரப்பகுதி வளர்ந்து வருகின்ற நகரை போல் ஒரு தோற்றத்தை தந்தாலும் நகர் பகுதி தவிர்ந்த  தமிழ் மக்கள் வாழுகின்ற ஏனைய பகுதிகள் யாவும் இன்றும் போரின் வலியை சுமந்து கொண்டு இருக்கின்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றது. போர் முடிவிற்கு வந்து 10 ஆண்டுகள் கடந்தும் போரின் தாக்கம் இப் பகுதிகளில் வாழும் 74% தமிழ் சமூகத்தில் பெரும்பகுதியினரை விட்டு அகலவே  இல்லை என்பதே உண்மையான நிலைமையாகும். குறிப்பாக தமிழ் சமூகம் 1980கள் வரை தமது சகோதர சமூகத்தை விட கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல், கட்டுமானம், அரச  நிர்வாகம் போன்ற துறைகளில் முன்னிலையில் இருந்ததும் தெரிந்ததேஆனால் இன்று எமது சமூகம் சகல துறைகளிலும்  பாரிய அளவில் பின் அடைவுகளை சந்தித்த நிலையிலேயே உள்ளது. 


இன்றைய கல்வியின் நிலைமை


கல்வியை பொறுத்தளவில் குறிப்பாக உயர்தர கல்வியை எடுத்துக்கொள்வோமாயின் 1980கள் வரையும் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்பு மையங்களுமே இருந்தன. மேலும் ஒப்பீட்டு அளவில் பார்க்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் சமூகம் கல்வியில் பெரும் முன்னேற்றம் காட்டிய ஒரு சமூகமாகவும் அவ்வேளையில் விளங்கியது அதாவது பல்கலைக்கழக கல்வியை பொறுத்த வரையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் தொகையில் 90% விகிதத்திற்கும் அதிகமானவர்கள் தமிழ் மாணவர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் நீண்ட போரின் தாக்கம் இந்த நிலைமையை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. குறிப்பாக தற்போது காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகளில் இருந்து சகல துறைகளுக்கும் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாவதும் மேலும் இந் நிலைமை தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக தெரிவு விகிதத்தை 70%திற்கும் குறைவான விகிதமாகவும் மாற்றம் அடைய செய்துள்ளது.

1980களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் முஸ்லீம் இனக்கலவரங்களை  தொடர்ந்து இலங்கையில் தொடர்ந்த போர் சூழல் 2009 வரை நீடித்ததுஇதன் தாக்கம் குறிப்பாக நகர் பகுதிகளை விடுத்து மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம் (படுவான் கரை) முழுமையாகவும்கல்குடா கல்விவலயம், பட்டிருப்பு கல்விவலயம் போன்ற பகுதிகளில் உள்ள அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் ஆசிரியர் வளம் பௌதீக  வளம் என்பன முற்று முழுதாக புறக்கணிக்கப்பட்டதாலும் இங்கு உள்ள மாணவர்களின் கல்வியிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய வண்ணமுமே உள்ளது. 

இவ் நிலைமைகளால் அரச கட்டுப்பாடற்ற பகுதியாககருதப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களில் பெரும் தொகையானோர் தமது ஆரம்பக்கல்வியை மட்டும் ஓரளவிற்கேனும் தொடரக்கூடிய நிலையே  இருந்ததாலும் மேலும் இவர்களில் பெரும்பாலானோர் தமது இடைநிலை கல்வியை தொடர்வதற்குரிய வயதெல்லையை அடைந்தவேளை, கல்வியை மேலும் தொடர்வதற்குரிய வளங்கள்   அரிதாக காணப்பட்டதாலும் இவர்களில் பெரும்பாலானோர்   சிறு வயது போராளிகளாக போராட்டத்திலும் இணைக்கப்பட்டனர். குறிப்பிடப்பட்ட இப் பகுதிகளில் இருந்த மாணவர்களின் தொகையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மொத்த தமிழ் மாணவர்களின் தொகையில் அண்ணளவாக 40%மாகவும்  இருந்தது.

போர் முடிவுற்று  வருடங்கள் 10 கடந்தும் போரின் தாக்கம் தமிழ் மாணவர்கள் வாழுகின்ற இப் பகுதிகளில் இன்றும் எதிர்மறையான தாக்கங்களை  ஏற்படுத்திய வண்ணமே உள்ளது.  மட்டக்களப்பு கல்விவலயம் தவிர்ந்த ஏனைய கல்வி வலயங்களில்  உள்ள அரச கட்டுப்பாடற்ற பகுதியாககருதப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இன்றும் ஆசிரியர் வளத்தில் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. குறிப்பாக இப்பகுதிகளில் உள்ள பல பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை  கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாத துர்ப்பாக்கிய  நிலை இன்றும் தொடர்வதனால் பெருமளவு திறமையுள்ள மாணவர்களுக்கு  முறையான கல்வியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுவதாகவே கருதவேண்டியுள்ளது. மேலும் இம் மாணவர்களுக்கு திறமை இருந்தும் கல்வியை உரிய துறையில் முன்னெடுப்பதற்கான வளங்கள்  இல்லாத காரணங்களால்  தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்ற கற்கைநெறிகளையே தெரிவு  செய்யவேண்டிய துரதிஷ்டசாலிகளாகவும் காணப்படுகின்றனர். இந்த நிலமை மாற்றப்படாவிடில் எமது மாகாணம் தொடர்ந்தும் கல்வி தரவரிசையில் இறுதி நிலையிலேயேஇருக்கும் என்பதும் திண்ணம் . இவை யாவற்றிற்கும்  மேலாக கிழக்கில் உள்ள தமிழ் சமூகம் தொடர்ந்தும் கீழ் நிலையிலேயே இருப்பதற்குமான சந்தர்ப்பத்தையே  உருவாக்கும் .

தமிழ் மக்களின் பொருளாதாரம் 


பொருளாதாரத்தை பொறுத்த வகையில் இலங்கையில் உள்ள வளமுள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணமும் ஒன்றாகும். போதியளவு நீர் வளம்,  நில வளம் மற்றும் கடல் வளங்களை  கொண்ட மாகாணமாகவும் எமது மாகாணமும் மாவட்டமும் விளங்குகின்றது. இங்கு வாழுகின்ற தமிழ் சமூகம் பெரும் நிலவந்தர்களாகவும் பொருளாதாரரீதியாக மற்றைய இரு சமூகங்களையும்  விட உயர் நிலையிலும் 1980களின் நடுப்பகுதி வரையும் இருந்தனர். ஆனால் போரின் தாக்கம் தமிழ் சமூகத்தை பொருளாதாரரீதியிலும் பெரும் பின்னடைவுகளுக்கு உள்ளாக்கியுள்ளது  .  குறிப்பாக இத் தாக்கம் மாகாண, மாவட்ட ரீதியாக ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் பாரியளவில் பொருளாதார ரீதியாக நலிவடையவும்  செய்துள்ளது. இந்த நிலைமையானது எமது மாவட்டத்தை  வறுமை சுட்டெண் நிலையில் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில்  22வது நிலைக்கு தள்ளி  உள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பிற்கு மேற்கே வாழுகின்ற தமிழ் மக்களில் 95% திற்கும்  மேற்பட்டோர் விவசாயத்தை வாழ்வாதாரமாகவும் கொண்டிருந்தனர். மேலும் இப் பகுதிகளில் கிராமிய ரீதியில் தனவந்தர்களான  போடிமார்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்து கிராமிய விவசாயத்தை திறம்படவும்  எடுத்து சென்றது. மட்டுமல்லாது கிராமிய பொருளாதாரத்தை உயர்ந்த  நிலையிலும் வைத்து கட்டிக் காத்தனர். ஆனால் போரின் தாக்கம் போடிமாரையும் மற்றும் கிராமிய பொருளாதாரத்தையும் முற்றாக அளித்தது மட்டுமல்லாது மேலும் இப் பகுதிகளில் உள்ள மக்களை  பொருளாதாரத்தில் நலிவுற்ற தன்மைக்கு இட்டும்  சென்றுள்ளதுஇக் காரணங்களினால்  இம் மக்களில் பெரும்பாலானோர் கடன் கலாச்சாசரத்திற்கும்  உள்ளாக்கப்பட்டுள்ளனர். சகோதர சமூகத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இம் மக்களுக்கு இலகுமுறையில் கடன் வசதிகளை வழங்குவதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியை தமது முழு கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டுவந்துள்ளனர்.

இதே போன்று தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த அரிசி ஆலைகள், தொழிற்சாலைகள், சிறு கைத்தொழில் மையங்கள்  என்பன விளை  பொருட்களை சந்தை படுத்தலில் இருந்த தடைகள் மற்றும் போர் காலத்தில் தமிழ் வர்த்தகர்களுக்கு போக்குவரத்தில் இருந்த கெடுபிடிகள் போன்ற  காரணங்களால்  தமிழ் சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் காலப்போக்கில் காணமலே போய் விட்டனர்மாறாக சகோதர சமூகத்தை பொறுத்தளவில் அவர்களுக்கு இவ்வாறான இடர்பாடுகள் குறைவாக காணப்பட்டதால் அவர்கள் இத் துறைகளில் முதலிட ஆரம்பித்தது மட்டுமல்லாது பெருமளவில் வெற்றியும்காணத்துவங்கினர்அத்தோடு இத்துறைகளில் தொழில்புரிந்த தமிழ்சமூகத்தை சேர்ந்த தொழிலாளிகளும் சகோதரசமூகத்திடம் வேலை வாய்ப்பு பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.



தமிழ் பகுதிகளில் உள்ள கட்டுமானம்

1980கள்  வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும் நகரமாக இருந்த மட்டுநகர் 2009வரை பெருமளவு வளர்ச்சியை அடையாத  நிலையிலேயே இருந்தது. இதே போன்றுதான் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய தமிழ் பகுதிகளும் இன்றும்  தோற்றமளிக்கின்றன. மாறாக சகோதர சமூகத்தை பொறுத்தளவில் குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர்களுடைய  வியாபார நடவடிக்கைகளுக்கு பாரியளவில் இடையூறுகள் அற்ற நிலை காணப்பட்டதால் அவர்களுடைய பகுதிகளான காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற பகுதிகள் பெரும் நகரங்களாகவும்  மாற்றம் கண்டன. மாவட்ட  சனத்தொகையில் 74%  தமிழர்களாக இருந்தும் தமிழ் மக்களுக்கு என ஒரு தனி தமிழ் நகரம் இல்லாத அளவிற்கு தமிழ் மக்களின் பொருளாதாரமும் நலிவடைந்துள்ளது.

போரில் தோல்வி மற்றும் அரசியல் தீர்விற்கான சாத்தியக்கூறுகள் மிக அருகிவரும் சந்தர்ப்பத்தில் யதார்த்தபூர்வமாக பார்ப்போமாயின் எமது அரசியலும் அபிவிருத்தியிற்கு  முக்கியத்துவம் கொடுக்க கூடிய வகையில் மாற்றங்கள்  ஏற்படுத்தப்படவும்  வேண்டும். ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் அச் சமூகத்தின் அரசியல் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த வகையில் 1980கள் வரை தமிழ் சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளும் தொடர்ந்து வந்த அரசாங்கங்களில் அங்கம் வகித்தாலும் , மேலும் தமிழ் அரசியலில் இருந்தவர்களில் கூடுதலானோர்  மேலும் சகோதர சமூகத்தினுடைய அரசியலில் இருந்தவர்களைவிட ,ஆளுமையும் செய்திறனும் உடையவர்களாக இருந்ததனாலும் அக் காலப்பகுதியில் எமது பகுதிகளில்  சிங்களப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட  அளவு அபிவிருத்தியை அடையாவிட்டாலும், சகோதர சமூகம் வாழுகின்ற பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட அளவு அபிவிருத்தி எமது தமிழ் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. 

1980களின் இறுதியில் இருந்து தமிழ் சமூகத்தை பொறுத்தளவில்  போர் மற்றும் அரசியல் தீர்வை நோக்கியே எமது முழு அரசியல் சக்தியையும் நகர்த்தினோம்ஆனால் அம் முயற்சியில் இன்றுவரை வெற்றியும் பெறவில்லை. மாறாக இதே காலப்பகுதியில் சகோதர சமூகம் தனித்துவமான அரசியலை ஆரம்பித்து அரசியலில் பல பரிணாமங்களை  கடந்து பெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றம் கண்டுள்ளது. இம் மாற்றமானது  1990களின் ஆரம்பத்தில் இருந்து  இவர்களுடைய பகுதிகளில் பாரிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்தது. இந்த வகையில் மாவட்ட அளவில் 24% அளவிலான சனத்தொகையை கொண்ட இச் சமூகம் இலங்கையில் உள்ள 42நகரசபைகளில் தம் வசம் இரு நகர சபைகளையும் கொண்டுள்ளனர், இதனை தொடர்ந்து ஓட்டமாவடியிலும் மேலும் ஒரு சபையை உருவாக்கும் பட்சத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்கள் வாழுகின்ற  அனைத்து பகுதிகளிலும் நகரசபைகளை கொண்டுள்ள ஒரு சமூகமாகவும்மாற்றம் காணும். மேலும் இவை அவர்களுடைய அரசியலில் உள்ள வலுவான தன்மையையும் எடுத்தும் காட்டுகின்றது.


தமிழ் அரசியலின் தன்மை 

கிழக்கில் உள்ள தமிழ் சமூகத்தை பொறுத்தளவில் தமது இருப்பை கிழக்கு மாகாணத்தில் தக்கவைத்து கொள்ளவேண்டுமாயின் அரசியல் ரீதியாகவும்  செய்திறன் உள்ள முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டிய நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 30ஆண்டுகளில் அடிப்படை கட்டுமானம்கள் , கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் கிழக்கில் உள்ள தமிழ் பகுதிகள் விடுபட்ட நிலை காணப்படுவதாலும், அதிலும் குறிப்பாக போர் காலத்தில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகள் முற்று முழுதாக அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டதாலும் தமிழ் சமூகத்தை பொறுத்தளவில் இனிவரும் காலம்களில்  தமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சமூகத்தில் உள்ள பாரிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அனுபவம், திறமை, நிபுணத்துவம், பல்  மொழி ஆற்றல் உள்ள வகையில் மாற்றமடைய வேண்டிய நிலையில் உள்ளது. இம்மாற்றமானது இப் பகுதியில் வாழும் தமிழ் சமூகத்தின் குறைபாடாக நிலவும் வாக்களிப்பு விகிதத்தையும் 60% தில்   இருந்து 80%திற்கு உயர்த்தும் என்பதிலும்  ஐயமும் இல்லைமேலும் இவ்வாறான ஒரு மாற்றம்  எமது சமூகத்தின் பிரதிநிதித்துவதையும் மற்றைய சமூகங்களின் பிரதிநிதித்துவதிற்கு சமமான நிலைக்கு இட்டும்  செல்லும்.

மிகவும் கீழ் நிலையில் உள்ள எமது சமூகம் மீண்டும் பழைய நிலையை அடைவதற்கு கல்வி,பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டுமானம் போன்ற துறைகளில் பாரிய முன்னேற்றதை வேண்டிநிற்பதோடு இவை யாவற்றிக்கும் அச்சாணியாக செய்திறன் உள்ள அரசியலின் பங்கும் இன்றியமையாத தாகவும்  உள்ளது.

நாட்டின் புதிய தலைமை வடக்கு கிழக்கு அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பிற்கு முக்கியத்தும் வழங்கவுள்ள நிலையில் தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளிலும் இந்த சந்தர்ப்பத்தை  பயனுள்ளதாக பயன்படுத்தக்கூடிய மனப்பக்குவத்தை தம்மகத்தே கொள்ளவேண்டும். குறிப்பாக கிழக்கை பொறுத்தமட்டில் போரால் புரையோடிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவருவதற்கு ஏற்றால் போல  அபிவிருத்தியை முன்னிலை படுத்தியும்  அரசியல் செய்திறனும் அனுபவமும் ஆளுமையும் கொண்ட அரசியல் வாதிகளை கொண்ட அமைப்பாகவும்  மாற்றம் காண வேண்டிய கட்டாய தேவை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ளது. இக் கொள்கைக்கு வலுச்செயற்கும் வகையில் இப் பகுதிகளில் இயங்கும் சகல சமூக அமைப்புகளும் தமது பகுதிகளின் நிலைமைகளையும் மற்றும் தமது பகுதிகளில்  வாழும் மக்களின் எண்ணப்பாடுகளையும்  தமிழ் தலைமைகளுக்கு தெளிவாக எடுத்து கூறவேண்டிய தார்மிக கடமைப்பாட்டிலும் உள்ளனர் என்பதும் எமது கருத்தாகும் .

ஆர்.சயனொளிபவன் & TEAM