எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் சட்டவிரோதமாக 15 ஏக்கர் அரச காணியை தன்வசப்படுத்திக்கொண்டுள்ளார் - சீ.ஐ.டி விசாரணையில் அம்பலம்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் சட்டவிரோதமாக 15 ஏக்கர் அரச காணியை தன்வசப்படுத்தி கொண்டிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பற்றி கம்பஸ் நிர்மாணிப்புக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கிக்கொடுக்கப்பட்ட மகாவலிக்குச் சொந்தமான காணிக்குப் புறம்பாக மேலும் 15 ஏக்கர் காணியை சட்டவிரோதமாக கைப்பற்றியிருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மகாவலி அதிகார சபைக்குச் சொந்தமான காணித்துண்டு 2013ஆம் ஆண்டில் ஹிரா பௌன்டேசன் அமைப்புக்காக அரசால் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்காக இலவச தொழிற் பயிற்சி பாடநெறியை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி நிறுவனமொன்றை ஆரம்பிப்பதாக கூறியே இந்த மகாவலி காணி பெற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கமைய 2013 ஜுலை மாதம் 24 ஆம் திகதி மட்டக்களப்பு வடக்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 35 ஏக்கர் காணி ஒரு ஏக்கருக்கு 14,340 ரூபா குத்தகை அடிப்படையில் 35 வருடகாலத்துக்கு ஹிராபெளன்டேசனுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளின்போது கண்டறியப்பட்டுள்ளது.

தொழிற் கல்வி நிலையத்துக்காக அரசிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த காணியில் பற்றி கம்பஸ் என்ற பெயரில் அரபுப் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதே சமயம் ஹிரா பௌன்டேசனுக்கு ஒதுக்கப்பட்ட காணிக்குப் புறம்பாக 15 ஏக்கர் காணி சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்கள உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில் நுட்பக்கல்வி நிலையம் அமைப்பதற்காகவென பெறப்பட்ட காணியில் கூட அரபு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு 2018ல் மோசடியான முறையில் அனுமதி பெறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா கடநத வாரத்தில் மூன்று தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டு விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டபோதே இந்த சட்டவிரோதச் செயற்பாடுகளை கண்டறிய முடிந்துள்ளதாக திணைக்கள உயரதிகாரி தெரிவித்தார்.

தற்போதைய சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைப் பயன்படுத்தியே ஹிஸ்புல்லா இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் இது ஒரு மோசடியான செயல் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லாவை தொடர்ந்து விசாரிப்பதற்கும் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா பற்றிகம்பஸ் தீர்மானிப்புக்காக 4.5 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டிருப்பதாகவும் இதில் 3.6 பில்லியன் சவுதி அரேபிய அமைப்பொன்றிலிருந்து பெறப்பட்டிருப்பதாகவும் அறியவந்துள்ளது.

இந்தப் பணம் 07 வங்கிகளூடாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அது நாட்டில் நடைமுறையில் உள்ள செலாவணிச் சட்டத்துக்கு முரணாகவே பெறப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது