Albert Einstein உம் அவரது மூளையும் !



அறிவியல் உலகை பற்றி ஆர்வமுள்ள எவரும் அல்பேர்ட் ஐன்ஸ்டின் என்ற பெயரை அறியாதிருக்க சாத்தியம் இல்லை. அல்பேர்ட் ஐன்ஸ்டின் என்ற பெயரை கேட்டதுமே நம்மில் பலபேருக்கு அகன்ற முன் நெற்றியும், பஞ்சு போன்ற பரட்டை தலை முடியுடனும் கூடிய ஒரு தலை மூளையின் மூலையில் எட்டி பார்க்கும். நமது மூளையில் எட்டி பார்க்கும் அந்த தலைக்குள்ளே இருந்த மூளையை பற்றி அறிந்தால் கொஞ்சம் ஆடித்தான்
போவோம்.

1879ஆம் ஆண்டு PI DAY யில் - 03 ஆம் மாதம் 14ஆம் திகதி (π=3.14) - ஜெர்மனியில் உள்ள உல்ம் என்னுமிடத்தில் பிறந்த ஐன்ஸ்டின் பிறக்கும் போதே சற்று பெரிய தலையுடன் தான் பிறந்தார். அப்போ ஆண்டவன் படைக்கும்போதே இவர் அறிவாளி என்று படைத்துவிட்டார் போல ! என்று நீங்கள் எண்ணினால் காரணம் அது இல்லை. அதற்கு காரணம் Attention
Deficit Hyperactivity Disorder (ADHD) என்ற நரம்பியல் சார் குறைபாடு அவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது.

வளர வளர தலை பெரிதாக இருந்தது எல்லாம் மறைந்து சாதாரண குழந்தை போல் தோன்றினாலும், 3 வயது வரை பேச்சு வரவில்லை ஐன்ஸ்டீன்க்கு. இதனால் கற்றலில் குறைபாடு உடையவராக இருப்பாரோ என்று பெற்றோர்கள் அஞ்சினாலும், கால போக்கில் ஆசிரியர்களிடம் இவர் கேட்ட சந்தேகங்களை கண்டு ஆசிரியர்களே அஞ்சினார்கள். பேச்சாற்றல் குறைவாக இருந்ததனாலோ என்னவோ நண்பர்கள் என்று பெரிதாக இல்லாதது போனதால் எப்போதும் தனிமையில் இருந்து சிந்திக்க தொடங்கினார். 

இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் காட்டினார். இதனால் இயற்கை பற்றிய கேள்விகளும் இயற்கையாகவே எழ, அப்போதிருந்தே அவரது தேடல்கள் ஆரம்பித்தன. தந்தை Hermann, ஐன்ஸ்டீன்க்கு 5 வயதாக இருக்கும் போது சட்டை பையில் வைக்க கூடிய திசையறி கருவி ஒன்றை பரிசளித்தார். எங்கே எப்படி வைத்தாலும் வடக்கு தெற்காக காட்டி நிற்கும் அந்த திசைகாட்டி அதிசயம் ஐன்ஸ்டீன்க்கு கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒன்றை நோக்கி சிந்திக்க திசை காட்டியது.

அம்மாவின் வற்புறுத்தலால் வயலின் கற்க துவங்கி இருந்தாலும், பிற்காலத்தில் “நான் இயற்பியல் அறிஞராக மாறியிருக்காவிட்டால் ஒரு இசைக் கலைஞராக உருவாகியிருப்பேன். நான் இசையாகவே சிந்திக்கிறேன்… என்னுடைய பகல் கனவுகளை இசை வடிவில் காண்கிறேன்... என்னுடைய வாழ்வை நான் இசையாகவே உணர்கிறேன்....
என்னுடைய மகிழ்ச்சியின் பெரும் பகுதியை இசை மூலமாகவே அனுபவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். 

16ஆவது வயதில் “ஒளியின் வேகத்தில் நானும் பயணித்தால் இந்த பிரபஞ்சம் எப்படி தோற்றமளிக்கும் ? என்ற சந்தேகம் எழ அதுவே இவரது வாழ்க்கைத் தேடல் ஆனது. 10 வருடங்கள் கழித்து 1905ஆம் ஆண்டில் பிரபல இயற்பியல்
விஞ்ஞானியான Max Planck இன் கைகளுக்கு ஒரு அரிய ஆய்வுக் கட்டுரை
கிடைத்தது. அதில் விளக்கப்படிருந்த சார்பியல் கோட்பாடு அவ்வளவு
காலமும் நம்பப்பட்டு வந்த நியூட்டன் எனும் மாமேதையின் கோட்பாடுகளில்
சிலவற்றை மறுப்பதாக இருந்தது. 

இருப்பினும் அந்த கட்டுரையை பிழை என கூற முடியாதவாறு நிரூபிக்கப்பட்டு இருந்தது. உலகுக்கு இன்னும் ஒரு இயற்பியல் வல்லுநர் கிடைத்த சந்தோஷத்தில் Max Planck அக்கட்டுரையை எழுதிய அல்பேர்ட் ஐன்ஸ்டீனை தேடி இருவரை அனுப்ப, அவர்களோ இத்தனை பெரிய அறிவாளி ஒரு பேராசிரியராக தான் இருப்பார் என எண்ணி சுவிசர்லாந்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகங்களாக தேடினர்.

அப்போது 26 வயதாக இருந்த ஐன்ஸ்டீன், இதற்கிடையில் தந்தைக்கு
தொழில் நட்டம் ஏற்பட்டதால் குடும்பம் இத்தாலிக்கு குடிபெயர, கல்வியை
தொடர்வதற்கான இவர் ஜெர்மனியிலேயே தனித்து தங்கி பின் முடியாமல்
போகவே இத்தாலிக்கு வந்து, பாடசாலை கல்வியை முடிக்க சுவிசர்லாந்து
சென்றதனால் ஜெர்மனியின் குடியுரிமையை இழந்து, பல்கலைகழகத்தில்
தலைமை ஆசிரியரின் விரோதத்தை சம்பாதித்தால் படிப்புக்கு ஏற்ற வேலை
கிடைக்காமல், நிரந்தர வேலையை பெறும் முன்னரே பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகி, சொற்ப சம்பளத்தில் சுவிஸில் இருந்த காப்புரிமை அலுவலகம் ஒன்றில் 3ஆம் நிலை குமஸ்தாவாக தற்காலிகமாக வேலை
செய்துகொண்டிருந்தார். 

இயற்பியலாளர் Max Planck இனால் Albert Einstein உலகுக்கு அறிமுகப்படுத்தபட்ட பின்னர் அவரது வளர்ச்சி அபாரமானது. அந்த கட்டுரைகள் வாயிலாக, காலம் - வெளி என்ற இரண்டும் எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியானதோ, அறுதியானதோ இல்லை. அவரவர்
இயக்கத்தை சார்ந்து அது வேறுபடும். ஆற்றலுக்கும் திணிவுக்குமான
தொடர்பு E= MC 2 என்ற சமன்பாட்டின் மூலம் அமைகிறது. எனவே திணிவை
சக்தியாக மாற்ற முடியும். ஒளி நுண்மையான துகள் வடிவிலேயே
பயணிக்கிறது. இவற்றுடன் அதுவரை காலமும் கருதுகோளாக நம்பப்பட்டு
வந்த அணுவின் இருப்பை மிகத் தெளிவாக நிரூபித்தார். 

இருப்பினும் புவியீர்ப்பு விசை பற்றிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கருதிய அவர், 1915ஆம் ஆண்டு சார்பியலின் புது கோட்பாடு மூலம் வெளி மற்றும் காலத்தின் வளைவால் ஏற்படும் விளைவே புவியீர்ப்பு விசை என
விளக்கினார்.  அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் மேதமையை பாராட்டி நோபல் பரிசு வழங்க உத்தேசித்த குழுமம் சார்பியல் கோட்பாடு தொடர்பாக அக்காலத்தில்
சர்ச்சைகள் நிலவியதால் அதற்காக அல்லாமல் ஒளிமின் விளைவை
(photoelectric effect) விளக்கியமைக்காக 1921ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கியது. 

இதன் பின்னர் ஐன்ஸ்டின் 25 வருடங்களுகளாக குவாண்டம் கோட்பாடுகளை மறுப்பதற்காக ஆய்வுகளில் இறங்கினாலும் அது அனைத்துமே குவாண்டம் கோட்பாட்டை நிருபிப்பதாக அமைந்ததால் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஒரு கலந்துரையாடலில் "நீங்கள் இன்னும் எதை கண்டுபிடிக்க ஆசைப்படுகிறீர்கள் ?" என கேட்ட போது "இந்த பிரபஞ்சத்தை இறைவன் எப்படி படைத்தார்.. என்பதை என் வாழ்நாளில் எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும்." என்று பதிலளித்தாராம் அந்த மேதை. அவரது இறுதி ஆய்வுகளும் அதை நோக்கிய பயணமாகவே (The theory of everything) அமைந்தது. இருப்பினும் அதன் முடிவை அவரால் எட்ட முடியவில்லை.
இத்தனை பெரிய விஞ்ஞானி கடவுள் நம்பிக்கை உடையவரா? என சிலருக்கு சந்தேகம் எழலாம்.. ஆம் ஐன்ஸ்டீனுக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால் அவரது கடவுள் மதங்களை கடந்த கடவுள். இந்த பிரபஞ்சத்தை இயக்கும் மாபெரும் சக்தி வடிவான கடவுள் என்று விளக்கியிருக்கிறார்.
20ஆம் நூற்றாண்டின் தன்னிகரற்ற நபராக விளங்கிய அல்பேர்ட் ஐன்ஸ்டின் அவர்கள், 300 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளையும், 150 பொதுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வயலின் வாசிப்பதில் நாட்டமுள்ள இவர், இசை மேதை மொசாடின் தீவிர ரசிகர் ஆவார். 

யூத இனத்தவரான இவரை இஸ்ரேல் தமது நாட்டுக்கு அதிபராக இருக்குமாறு
அழைப்பு விடுத்த போது "நான் அரசியலுக்கு லாயகில்லதாவன்" என கூறி
மறுத்து விட்டார். பரிசோதனை ரீதியான ஆய்வுகளை இவர் மேற்கொண்டதில்லை. கடதாசிகளும், பேனாக்களும், சமன்பாடுகளையும்
வைத்து கொண்டு கற்பனையிலேயே கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

ஒருமுறை பெர்ன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியேற்க சென்ற
போது அவருக்காக ஒதுக்கப்பட அறையில் எல்லாம் சரியாக உள்ளதா என
கேட்ட போது "எனக்கு இதை விட சற்று பெரிய குப்பை தொட்டி வேண்டும்"
என்று கேட்டாராம். அது எதற்கு என்று கேட்க "நான் கணக்கு போடும்
போது அதிகமாக தவறுகள் விடுவேன். அதனால் அதிக தாள்கள் குப்பையாக
சேரும். இந்த குப்பை தொட்டி சிறியதாக இருக்கிறது" என்று சொன்னதாக
ஒரு தகவலும் இருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது யூதர்களுக்கு எதிரான செயற்பாடுகள் வரலாம் என கருதி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் ஐன்ஸ்டீன். 

அப்போது இன்னும் சில இயல்பியல் வல்லுனர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார். ஜெர்மனிக்கு அணு குண்டு தயாரிக்கும் வல்லமை உள்ளதாகவும், அவர்கள் வெகு விரைவில் அணு குண்டு தயாரிக்கும் முயற்சியில் இறங்கலாம் எனவும் அதை தடுக்கும் நோக்கில் கடிதம் எழுதினார். இருந்தும் கிணறு வெட்ட பூதம் புறப்பட கதையாக ரூஸ்வெல்ட் நிர்வாகம் அல்பேர்ட் ஐன்ஸ்டினுக்கு தெரியாமல் அணு குண்டுகளை உற்பத்தி செய்து ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் வீசியது. ஐன்ஸ்டீனின் E=MC 2 என்ற சமன்பாடே அணு குண்டு தாரிப்புக்கு தாரக மந்திரமாகும். 

இதனால் ஏற்பட்ட மனவேதனை அவரை இறுதி வரை உலக சமாதானத்திற்கு குரல் கொடுக்க வைத்தது. 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ஐன்ஸ்டினுக்கு உடல் உள்ளுறுப்புகளில் இரத்த கசிவு ஏற்பட்டது. மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள ஐன்ஸ்டினை  வற்புறுத்தினர், ஆனால் அவர் “நான் விரும்பும் நேரத்தில் விடைபெற்றுச் செல்ல விரும்புகிறேன். செயற்கையாக என்னுடைய வாழ்வை நீட்டிப்பதில் சுவராஸ்யம் இல்லை. என்னுடைய பங்களிப்பைச் செய்துவிட்டேன். இது செல்வதற்கான நேரம். அதனை நான் நேர்த்தியாக நிறைவேற்றுவேன்" என்று சொன்ன ஐன்ஸ்டின் அடுத்த நாள் காலை, 1955 ஏப்ரல் 18 ஆம் திகதி பிரபஞ்சத்தில் கலந்தார்.

செயற்கையாக சத்திர சிகிச்சை மூலம் ஆயுளை நீடிக்க விரும்பாதது போலவே, தனது உடல் ஆராய்ச்சிக்கு உட்படுத்த படுவதையோ,                            ஆராதிக்கப்படுவதையோ ஐன்ஸ்டீன் விரும்பவில்லை. இருப்பினும்
ஐன்ஸ்டின் இறந்து 20 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட நிலையில் 1978ஆம் ஆண்டில் Thomas Harvey என்ற pathologist, Einstein அவர்களது மூளை தன்னிடம் இருப்பதாகவும், வேண்டியவர்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பொன்றை வெளியிட உலகம் அதிர்ந்தது. 

இந்த Thomas Harvey தான் ஐன்ஸ்டீனின் உடலை பிரேத பரிசோதனைக்கு
உட்படுத்தியவர். இத்தனை பெரிய ஒப்பற்ற மேதையின் மூளையை தன்வசம்
வைத்திருக்க அடங்காத ஆர்வம் எழ அதை திருடி கொண்டார். இந்த மூளையை 246 துண்டுகளாக வெட்டி ஜாடிகளில் போட்டு பாதுகாத்து
வைத்திருந்த அவர், தான் இடமாற்றம் பெற்று செல்லுமிடமெல்லாம்
அவற்றை கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பல நிபுணர்களும் ஆராய்ச்சிக்காக அவரிடமிருந்து ஐன்ஸ்டினின் மூளையின் பாகங்களை வாங்கிச் சென்றனர். 

ஐன்ஸ்டீன் இன் மூளையை ஆய்விற்கு உட்படுத்திய விஞ்ஞானிகள் சொன்ன விஷயங்கள்: ஐன்ஸ்டீனின் மூளை சராசரியான ஆணின் மூளையைவிட நிறை குறைந்தது. ஆனால் Inferior parietal region எனப்படும் பகுதி சராசரியான மூலையில் இருப்பதை விடவும் 15% பெரியதாக இருந்தது. அத்துடன் சாதாரணமான மூளையில் காணப்படும் கலங்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அதிகளவு பசை கலங்கள் இருந்தன. பிரபஞ்சத்தின் பல்வேறு புதிரான பாகங்களையும் தன் கற்பனை வளம் கொண்டே உலகுக்கு வெளிக்காட்டிய மாமேதை அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் மூளை துண்டுகளில் ஒன்றை Mütter Museum என்ற அரும் பொருள் காட்சியகம் இன்றும் தனகத்தே கொண்டிருக்கிறது. 

பின்தங்கிய பொருளாதார நிலை, சொந்த நாட்டில் பாதுகாப்பற்ற நிலை, முதல் மணம் விவாகரத்து, இரண்டாம் மனைவி மணமாகி சில காலத்திலேயே இறந்தமை போன்ற பிரச்சினைகள் சொந்த வாழ்க்கையில் இருந்திருந்தாலும், அதுவரை காலமும் நம்பப்பட்டு வந்த சேர் ஐசக் நியூட்டனின் கொள்கைகளில் இருந்து மாறுபட்ட கோட்பாடுகளை துணிவாக முன்வைக்க இந்த தனிகரற்ற விஞ்ஞானி கொண்டிருந்த அளப்பரிய சொத்து இயற்கை பற்றி அறிய வேண்டும் என்ற அளவிடமுடியாத தாகமே! 16ஆம் வயதில் எழுந்த கேள்விக்கு விடை காண வேண்டும் என்ற தேடலே! ஓளியின் வேகத்தில் ஒருவர் பயணித்தால் அவருக்கு இந்த பிரபஞ்சம் உறைந்துவிட்டது போல் தோற்றமளிக்கும். ஒளி உள்ள காலம் வரை இந்த உலகுக்கு இவரது கோட்பாடுகள் ஒளியூட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

என் அனாமிகா,
தகவல் தொழில்நுட்ப பீடம்,
மொறட்டுவை பல்கலைக்கழகம்.