பட்டிருப்பு கல்வி வலயத்தின் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் (வணிகம்) எஸ்.யோகராசா 35 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.


பட்டிருப்பு கல்வி வலயத்தின் வணிகப் பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகர் சாமித்தம்பி யோகராசா தனது 60 வது அகவையினை பூர்த்தி செய்து இன்று (06.06.2020) சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். களுதாவளை மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி வரை கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா (PGDE) மற்றும் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணி (MA Te.Ed  ) என்பவற்றையும் பூர்த்தி செய்து கொண்டார்.

மட்/செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 26.12.1985 இல் ஆசிரியராக முதல் நியமனத்தைப் பெற்றுக் கொண்ட இவர், தொடர்ந்து மட்/களுதாவளை மகா வித்தியாலயம் என 11 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் வணிகக்கல்வியில் மாணவர்கள் 100% சித்தியைப் பெற்றமைக்காக மட்டக்களப்பு மாவட்ட கல்வித்திணைக்கள கல்விப்பணிப்பாளரால் இவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  01.01.1997 முதல் பட்டிருப்பு கல்வி வலயத்தில் வணிகக் கல்விக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராக கடமையைப் பொறுப்பேற்று இன்று வரை 24 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இவர் தனது சேவைக் காலத்தின் போது இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தேசியகல்வி நிறுவகம் என்பவற்றில் பட்டப்பின் கல்வி  டிப்ளோமா பயிலும் மாணவர்களுக்கான விரிவுரையாளராகவும், முதன்மை ஆசிரியராகவும் (Master Teacher), மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் வணிகக்கல்வி மாணவர்களுக்கான பகுதிநேர விரிவுரையாளராகவும் சுமார் 12 வருடங்கள் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய சேவைக் காலத்தில் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் என்பவற்றில் வணிகக் கல்வித் துறையைச் சார்ந்த மாணவர்கள் விசேட, அதிவிசேட சித்திகளை கணிசமான அளவில் பெற்று வந்துள்ளமையும், பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான மாணவர்கள் சென்றுள்ளமையும் அறிய முடிகின்றது. மேலும்  மாவட்ட, மாகாண மட்டத்திலான தரப்படுத்தலில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் உயர்தர வணிகப் பிரிவானது தொடர்ந்து 5 வருடங்கள் முதல் நிலையை ஈட்டி வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் மாகாண மட்டத்தில் நடாத்தப்படும் வர்த்தக விஞ்ஞானப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மாணவர்கள் இவரின் வழிநடத்தலின் கீழ் பல தடவைகளில் முதலாம் இடத்தினைப் பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்று வலய மட்டத்தில் நடாத்தப்படும் வர்த்தகப் போட்டிகள், வணிக முகாங்கள் என்பவற்றினை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடாத்தி முன்மாதிரியாகச் செயற்பட்டு வந்துள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது.

இவர் தனது கல்விச் சேவைக்கு அப்பால் களுதாவளை 1, 2 பிரிவிற்கான கிராம அபிவிருத்திச் சங்கத்தின்  பொருளாளராக சுமார் 10 வருடங்கள் சேவையாற்றியதுடன், களுதாவளை மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கப் பொருளாளர், களுதாவளை திருஞானசம்பந்தர் குருகுலத்தின் கணக்காய்வாளர் என நீண்ட காலம் சேவையாற்றிய ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.