சகல இன மக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை கொடுப்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் - எஸ்.வியாழேந்திரன்


(மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்)
இந்நாட்டில் வாழும் சகல இனமக்களுக்கும் பாரபட்சமற்ற சேவைகளை பெற்றுக்கொடுப்பதே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் எதிர்பார்ப்பாகும். இந்த வகையில் சகல பிரதேசங்களிலும் பாகுபாடற்ற சமமான சேவையை பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும் இன்று இனமத வேறுபாடுகள் இன்றி சுமார் 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதே போல் இன்னும் சில தினங்களில் வறுமையான குடும்பங்களைச்சேர்ந்த க.பொ.த.சாதாரண சித்தி பெற்றிராத இளைஞர் யுவதிகள் ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இவ்வாறு தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இன்று (30) மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தபால் திணைக்களத்தின் விசேட நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் கூறினார்

தபால் தினைக்களத்தின் கிழக்கு பிராந்திய பிரதி தபால்மா அதிபர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், தலைமையில் மட்டக்களப்பு பிரதம தபாலகத்தில் ராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட விசேட கௌரவிப்பு நிகழ்வில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் செயல்படும்தபாலக அதிகாரிகள் மற்றும் தபால் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் பங்கு கொண்டு மலர்மாலைகள்அணிவித்தும் போன்னாடைபோர்த்தியும் வாழ்த்து மடல்கள் வழங்கியும் கௌரவிப்பு செய்தனர்.

மலையகப்பகுதி மக்கள் தொழில் நேர்முப்பரீட்சைகளின் கடிதங்கள் மற்றும் அவசர தபால் சார்ந்த கடிதங்களை பெற்றுக்கொள்ள எதிர்நோக்கும் கடும் அசௌகரியங்களை போக்க விரைவில் அப்பிரதேசத்துக்கு களவிஜயம் மேற்கொண்டு ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் இணைந்து விரைவில் அப்பிரச்சினையை தீர்த்து வைக்கவிருப்பதாக தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இந்த விசேட நிகழ்வில் மேலும் சிறப்புரையாற்றுகையில் கூறினார்.

சிரேஷ்ட நிருவாக செயலாளர் திருமதி.வினோதினி கார்த்திகேசு, பிராந்திய கணக்காளர் சந்திரகலா ஜெயந்திரா, உட்பட பல உயரதிகாரிகளும் இங்கு பிரசன்னமாகியிருந்தனர்.