மட்டக்களப்பு மாவட்ட கிராமமட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்கும் விசேட திட்டம் ஆரம்பிப்பு


(எம்.ஜி.ஏ நாஸர்)
வெள்ள அனர்த்தத்தில் மூழ்கும் மக்களை பாதுகாப்பது தொடர்பாக கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு பிரதிநிதிகளுக்கு பயிற்சி வழங்கும் விசேட திட்டமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ளவர்களுக்கான பயிற்சிகள் இன்று நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்.ஜி.ஏ நாஸர் அறிவித்துள்ளார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.ம். சியாத் தலைமையில் ஏறாவூர் வாவியில் நடைபெற்ற இப்பயிற்சியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக அதிகாரிகள் பலர் கலந்துகெண்டனர்.

பாசிக்குடாவிலுள்ள பொலிஸ் உயிர்பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கந்தளாய் பொலிஸ் அதிகாரிகளும் இப்பயிற்சியினை வழங்கினர். சுழியோடுதல், நீந்துதல், நீரில் தேடுதல் மற்றும் மீட்பு போன்ற துறைகளில் இங்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் மற்றும் வெல்லாவெளி போன்ற பகுதிகளிலும் இப்பயிற்சி நெறிகள் நடாத்தப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் வருடந்தோறும் இறுதி மாதங்களில் அல்லது அசாதாரண காலநிலையின்போதும் ஏற்படும் பாரிய மழைவெள்ளத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்குடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் ஏஎம்எம். கஸீர் தெரிவித்துள்ளார்.

வீடியோ
https://www.facebook.com/watch/?v=1155516398153500&extid=ez7ftenUxUt2VmLW