நிலக்கீழ் நீர் மட்டம் குறைவடைதல்: தீர்வுக்கோரி வாழைச்சேனையில் கவனயீர்ப்பு போராட்டம்


(ருத் ருத்ரா)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் பல்வேறுபட்ட இடங்களில் நிலக் கீழ் நீர்மட்டம் குறைவடைவதனால் சமூக நீர் வழங்கல் பிரச்சினை ஏற்படுவதாகவும் இதற்க்கான தீர்வு கோரி பிரதேச மக்களினால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனையில் பிரதேச சபைக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.


சோரம் போகாதே, பாலைவனம் ஆக்காதே, உறிஞ்சாதே உறிஞ்சாதே நிலத்தடி நீரை உறிஞ்சாதே, ஜஸ் ஆலையை முடு, வாழ்வதா? நீரின்றி சாவதா? நீரை விற்று ஆதாயம் தேடாதே, தவிசாளரே தயக்கம் ஏன் ? குடிப்பதற்கு நிரில்லை என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டோர் கோஷங்களை எழுப்பினார்கள்.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி வாழைச்சேனை பிரதான வீதி வழியாக கோறளைப்பற்று பிரதேச சபையை சென்றடைந்து அங்கு தமது கோரிக்கை அடங்கிய மகஜரை தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்த்திடம்  கையளித்தனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஒழுங்கான முறையில் பதில் வழங்க முடியாமல் தவிசாளர் அவ்விடத்தினை விட்டு விலகிச் சென்றதுடன் தமக்கு சரியான பதிலை வழங்கவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டோர் கவலை தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து பிரதேச செயலகம் சென்று தமக்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பினார்கள். இதன்போது பிரதேச செயலாளர்  எஸ்.தனபாலசுந்தரத்திடம் குறித்த விடயம் தொடர்பாக மகஜர் கையளிக்கப்ட்டது. மகஜரை பெற்றுக்கொண்டவர் குறித்த நிலக் கீழ் நீர் வற்றுதல் தொடர்பான விடயமானது பொது மக்களுக்கு பெரிதும் தீங்கானதாகவுள்ளதால் பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் குறித்த விடயத்திற்கு சம்பந்தப்பட்டோர்கள் மற்றும் பொது அமைப்புக்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டு தீர்வு பெற்றுத் தருவதாகவும் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோறளைப்பற்று பிரதேசத்தில் கடந்த சில வருடங்களாக நிலக்கீழ் நீரானது குறைவடைந்து வருகின்றது. எனினும் இவ்வருடத்தின் மே மாதத்த்தில் இருந்து வழமைக்கு மாறாக கிணற்று நீரானது வற்றிபோகின்றது. இதனால் பொதுமக்கள் தமக்கு போதியளவு நீரின்றி சிரமப்படுகின்றனர்.

இதற்கு காரணமாக பிரதான வீதி புதுக்குடியிருப்பு, வாழைச்சேனையில் அமைக்கப்பட்ட இரண்டு பனிக்கட்டித் தொழிற்சாலைகள், சுத்திகரிப்பு நீர் விற்பனை நிலையம்,பிரதான வீதி கறுவாக்கேணியில் அமைந்துள்ள பனிக்கட்டி தொழிற்சாலை, பிரதான வீதி கிண்ணையடியில் அமைக்கப்பட்டுள்ள மற்றுமொரு பனிக்கட்டி தொழிற்சாலை மற்றும் சபையின் நூலக வளவினுள் அமைந்துள்ள நீர் வினியோக தள அமைவிடம் போன்றனவாற்றால் நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்படுவதனால் பிரதேசத்தில் நீர்மட்டம் வற்றி குடி நீர் வசதியின்றி போவதாகவும் பிரதேச மக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.