கிழக்கிலங்கை மண்டூர் கந்தனின் மாட்சி



தேசத்துக் கோயிலும் சின்னக்கதிர்காமம் என்றும் போற்றப்படும், மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் இன்று(02) புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
நீண்ட பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களையும், இயற்கையோடு இயைந்த வழிபாட்டு முறைகளையும் கட்டிக்காக்கின்ற கிராமங்களை உள்ளடக்கியதே மட்டக்களப்பாகும். மட்டக்களப்பின் தெற்கே சுமார் 20 மைல்கள் தொலைவில் பரந்த வாவிக்கரையில் வாவி நீர்ப்பரப்பை ஒட்டியமைந்துள்ள தொன்மை வாய்ந்த ஆலயமே தேசத்துக்கோயிலென்றும் சின்னக் கதிர்காமம் என்றும் போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயமாகும். கிழக்கிலங்கையிலுள்ள கந்தசுவாமி ஆலயங்களில் மண்டூர் முருகன் ஆலயமே தனிச்சிறப்பும் தனித்துவமாயும் விளங்குகிறது.


இந்தியாவிலிருந்து சீர்பாததேவியுடன் வந்த பரிவாரங்கள் வீரமுனை கிராமத்தில் வந்திறங்கி, வீரமுனையில் விநாயகர் ஆலயம் அமைத்த போது, அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த தங்கவேலினை (வேல்) அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்களிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலினை எடுத்து வந்து மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து வைத்து விட்டு, துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான்.

தில்லை மரத்தடியில் வேலைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டனர். இதன் பின்னர் சிந்தன் தான் கொண்டு வந்த தங்கவேலுக்கு, கொத்துப்பந்தலிட்டு வழிபடுவதை அறிந்து, தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான். பின்னர் துறைநீலாவணை மக்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு 'தில்லைமண்டூர் முருகன் ஆலயம்' என நாமம் சூட்டி வழிபட்டனர்.

இயக்கர், நாகர் வேடர் வாழ்ந்த காலப்பகுதியில் வேடர்கள் காட்டு வழியினால் வேட்டையாட வரும் போது தில்லை மரத்தில் தங்கவேலாயுதம் ஒன்றைக் கண்டு வேல் இருந்த இடத்திலேயே வைத்து கொத்துப் பந்தலிட்டு தேன்வதை, சர்க்கரை, நீறு கொண்டு முறையான ஆலயத்தை அமைத்ததாக ஐதீக கதைகளூடாக அறிய முடிகிறது. முருகப் பெருமான் குறப் பெண்ணான வேடுவிச்சியினை மணந்ததனால் இயற்கையாகவே வேடர்கள் முருக பக்தர்களாக காணப்பட்டனர். வேடர்கள் வேட்டையாடுவதன் மூலம் பெற்ற தேன்வதைகளை முருகனுக்கு அமுது பூசித்து வழிபட்டதாக அறியமுடிகிறது. நாகர்களுக்குள் இருந்த மண்டூநாகன் எனும் தலைவன் இவ் ஊர் மக்களை, ஆலயத்தை நெறிப்படுத்தியதாலும், இப் பிரதேசம் மண்டு மரங்கள் நிறைந்திருந்ததனாலும் இவ்வூர் மண்டூர் என அழைக்கப்படலாயிற்று.

சூர­பத்­மனை சங்­காரம் செய்த வேலானது உக்­கிரம் தாங்க முடியாமல் வாகூர மலையைப் பிளந்து கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்­டூர் தில்லை மரத்தில் பதிந்து திருத்­த­ல­மா­னது என்று மட்­டக்­க­ளப்பு தமி­ழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்களுக்கூடாக அறிய முடிகிறது. தில்லையில் உதித்ததனால்(வேல் தங்கியதனால்) தில்லை மண்டூர் முருகன் என அழைக்கப்படுகிறது. ஏனையவை உகந்தை மற்றும் திருக்கோயில் ஆகிய பதிகளில் உதித்ததாகவும் சொல்லப்படுகிறது. திருக்கோயில் வெள்ளை நாவல்மரம், சித்தாண்டி, வெருகல், உகந்தை உட்பட ஆறு இடங்களில் முருகவேல் இருந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதை ஊடாக அறியமுடிகிறது.

மேலைத்தேய ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தை உடைப்பதற்காக ஒல்லாந்தர் குழுவினர் ஆலய வளாகத்தில் பாசறை அமைத்து தங்கியிருந்த தருணத்தில், ஆலயம் இடிக்கப்படவுள்ளதாக முருகன் கப்புகனாருக்கு பணி விடையாகியதை தொடர்ந்து, கப்புகனார் முருகப் பெருமானை மனம் இரங்கி வேண்ட கோவிலுக்குள் இருந்த குளவிப் படைகள் கோயில் உடைக்க வந்த ஒல்லாந்தர் குழுவினரை தாக்கியதாக(குத்த) கூறப்படுகிறது. அவர்கள் தம்மோடு கொண்டு வந்த வாள், துவக்கு போன்றவை இன்றும் ஆலயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மண்டூர் கந்தசுவாமி ஆலயம் தோன்றியதாக சொல்லப்படும் ஒவ்வொரு புராண இதிகாச ஜதீக மற்றும் வாய்மொழி ஆதாரங்களும் ஒன்றொடொன்று தொடர்புபட்டதாகவும், தங்க வேலினை மையமாக கொண்ட மண்டூர் தில்லை கந்தனின் வரலாற்று மாட்சி பேசப்படுகிறது.

வன்னியர்களின் நிர்வாகத்திற்குட்பட்ட ஆலயமாகவும் மண்டூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது. அரசர்களின் காலத்தில் வன்னியர்கள் பிரதானிகளாக நியமிக்கப்பட்டதுடன் குளக்கோட்டனின் மனைவியான ஆடகசெளந்தரி காலத்தில் மண்டூர் முருகன் ஆலய வழிபாடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. திருக்கோயில், வீரமுனை பிள்ளையார், போரதீவு சித்திரவேலாயுத சுவாமி, கொக்கட்டிச்சோலை, அமிர்தகழி பிள்ளையார், மண்டூர் ஆகிய கோயில்களை ஆடகசவுந்தரி தரிசித்ததாக வாய்மொழி உரையாடலுக்கூடாக அறியக்கூடியதாகவுள்ளது.

1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டதாகவும் வன்னிமைக் காலத்திற்கு முற்பட்ட 14 ஆம் நூற்றாண்டுக்குரியதெனவும், கந்தன் படை­யெ­டுப்­புடன்
சம்­பந்­தப்­பட்­ட மண்டூர் மற்றும் கதிர்காம ஆலயங்கள் கி.மு.1800 க்கு முற்­பட்­ட இராமாயணப் போருக்கு முற்பட்டதெனவும் கூறப்படுகிறது. வன்னிமைகளைச் சேர்ந்த வன்னியர்கள் என்போர், கூட்டங்களை தலைமை தாங்கி நடாத்தியதுடன் ஆலயக் கொடியேற்றம் தொடர்பாக முழுப் பொறுப்புகளையும் வன்னியர்களே வகித்தனர்.

கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் தெய்வானை அம்மனுக்கும் வள்ளியம்மனுக்குரிய ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் ஆலய உள்வீதியில் பிள்ளையார், நாகதம்பிரான், வைரவர் மற்றும் பத்தினியம்மன் மேடை போன்றவையும் அமைந்துள்ளது. சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் முருகனுக்கு ஆவணி மாதப் பூரணையில் தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னுள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும்.

முற்குகரின் வன்னிமை ஆட்சிக்குட்பட்ட இவ்வாலய திருவிழா ஆரம்பத்தில் நான்கு நாட்களே இடம்பெற்றதாகவும், பிற்பட்ட காலப்பகுதியில் பத்து பூசைகளும் அதனைத் தொடர்ந்து 10 சிறப்பு சப்பரத் திருவிழாவுமாக 20 திருவிழாக்கள் இடம்பெற்று வருகிறது. நான்கு ஊர் வண்ணக்கர்மாரிடம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சம்மதம் கேட்ட பின்னரே மண்டூர் முருகன் ஆலய கொடியேற்றம் இடம்பெற்று வருகிறது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இருபது நாள் திருவிழா இடம்பெற்று 21 நாள் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும். கொடியேற் றத்தை தொடர்ந்து முதல் 10 நாளும் இடம்பெறும் ஒற்றைத் திருவிழாவில் இரவில் மாத்திரமே பூசை இடம்பெற ஏனைய 11- 20 நாள் வரை அதிகாலை, இரவு என இரு வேளைகளில் திருவிழா இடம்பெற்று வருகின்றது. மந்திர உச்சாடனங்கள் எதுவுமற்ற மெளனபூசை வழிபாடுகளே ஆலயம் உருவாகிய காலத்திலிருந்து இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கொடியேற்ற நிகழ்வு, மதிய பூசையினை அடுத்து கொடியேற்ற கொக்கட்டி மரம் காட்டினுள் வெட்டி வந்து கொடியேற்றுவதற்குரிய சந்தண மண்டபத்தில் இரவு பூசை ஆராதனைகளுடன் ஆலயம் கொடியேறும். பிரதேச செயலாளரின் தலைமையில் மகாசபைக் கூட்டம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்தே கொடியேற்றம் இடம்பெறும். 365 நாட்களும் மூன்று வேளைகளிலும் பூசை நடைபெறும் மண்டூர் கந்த சுவாமி ஆலய பராமரிப்புகளை ஆரம்ப காலம் தொட்டு கோவிலார் எனும் வகுப்பினரே பூசைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெரிய கப்புக, சிங்களகுடி கப்புக குடும்பம் ஆகியோருள் பெரிய கப்புகனார் விசேட கால பூசைகளை மேற்க்கொள்கின்றனர்.

மண்டூர் கந்தசுவாமியின் தல விருட்சமாக தில்லைமரம் திகழ்கிறது. அதற்கு சான்றாக முருகன் ஆலய வளாகத்தில் தில்லை மரம் இன்றும் காணப்படுகின்றது. மட்டு வாவியினை அண்மித்துள்ள இவ்வாலயம் 1957 இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மிகுந்த சேதத்திற்குள்ளாகி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட நிலையில் பெட்டகங்களிலிருந்த ஆலயத்துக்குரிய ஏட்டுப்பிரதி ஆவணங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் மண்ணுக்குள் புதைந்ததாக ஆலய வண்ணக்கர் ஊடாக அறியமுடிகிறது. தற்போதைய முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள சோலைக்காட்டிலுள்ள வைர மரங்களான நாகை, திருக்கொன்றை, வாகை, முதிரை போன்ற பாழ்பட்ட பெரிய மரங்களை வெட்டி மரங்களாலேயை களப்பு நிரப்பப்பட்டு ஆலயம் முன் வளாகம் அமைக்கப்பட்டுள்ளதுடன், மட்டு வாவியினை நோக்கியவாறே கந்தசுவாமி எழுந்தருளியுள்ளார்.

திருவாரூர் தேர்ச் சிறப்பு போன்று மண்டூரில் முருகன், பிள்ளையார் உலா வரும் தேர் கண்ணாடி பதிக்கப்பட்டு அழகுணர்வு பொருந்தியதாக அமைந்துள்ளது. மண்டூர் கந்தசுவாமி ஆலய திரு­வி­ழாவின் போது புறப்­படும் சுவா­மியின் வெளிவீதி­யுலா வள்­ளி­யம்பாள் ஆலய முன்­றலைச்

சென்­றடைந்ததும் ஏடகத்தின் மீதுள்ள பேழையுள் இருக்கும் ஒரு பொருளை கப்புகனார் வள்­ளி­யம்பாள் ஆல­யத்­திற்கு சீலையால் மறைவாக எடுத்துச் செல்வார். பூசை முடிந்­ததும் மீண்டும் மறை­வாக கொண்டு வந்து பேழையுள் வைத்­ததும் ஊர்­வலம் தொடரும். தீர்த்­த திருவிழாவின் போது புட்பக விமானம் ஆல­யத்­தி­லி­ருந்து புறப்­பட்டு மட்டக்களப்பு வாவிக்­ க­ரையில் உள்ள சபா மண்­ட­பத்தை சென்­ற­டையும். கப்­பு­கனார் அதனுள் இருக்கும் பொருளை சீலையால் மறைத்து எடுத்துச் சென்று மட்­டக்­க­ளப்பு வாவியில் தீர்த்தம் ஆடுவார். தீர்த்தோற்சவம் இடம்பெற்று தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு வரும் முருகப் பெருமானுக்கு ஆராத்தி எடுக்கும் 4 பெண் பிள்ளைகளும்(கோயில் பெண்கள்) வேட பூசைக்கு வில் அம்பு எடுக்கும் பையனும் தெய்வானையம்மனின் கோபத்தினால் திடீரென மயங்கி விழுவதும், அதனை தொடர்ந்து மயங்கிய பிள்ளைகளை வள்ளியம்மன் ஆலயத்தின் பின்புறமாக கொண்டு செல்வதும் பெரிய கப்புகனார், தீர்த்தநீர் தெளித்து வீபூதி தரித்து வள்ளியம்மனின் அரவணைப்பால் மயக்கத்தை நீக்கும் வியக்கத்தக்க ஆபூர்வ நிகழ்வும் இடம்பெற்று வருகிறது.

பாக்கியராஜா மோகனதாஸ்