20க்கான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையானது ரிஷாட், ஹக்கீம் சேர்ந்து ஆடிய நாடகம்

 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தமையானது, அதனை நிறைவேற்றுவதற்காக ரிஷாட் மற்றும் ஹக்கீம் ஆகியோர் சேர்ந்து ஆடிய நாடகம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் தமது கட்சியிலிருந்து 20க்கு ஆதரவு அளித்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள மனோ கணேஷனோடு சேர்ந்து பயணிக்க கூட்டமைப்பு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேற்றுவதில், சிறுபான்மைக் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஆதரவளித்துள்ளார்கள். இது தொடர்பாக மிகவும் குழப்பகரமான நிலமை ஏற்பட்டிருக்கிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், சிறிலங்கா மக்கள் காங்கிரசும் இதனை எதிர்ப்பதாக சொல்லியிருந்தார்கள்.


குறிப்பாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் தானாகவே முன்வந்து இந்த சட்ட மூலத்திற்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்து, தனக்குத் தானே ஆஜராகி இதனை மும்முரமாக எதிர்த்தவர்.

18வது திருத்தில் தாங்கள் செய்த பாவத்துக்கு பிரயத்சித்தமாகத்தான் நாங்கள் 19வதுக்கு ஆதரவாக வாக்களித்தோம், தொடர்ந்தும் இந்த சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு காரணமும் அது தான்.

நாங்கள் ஒரு சிறிய கட்சி. அதனால் தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. அதனால் நீதிமன்றம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டவர். அப்படிச் செய்து விட்டு, தன்னுடைய கட்சியில் இருந்த மீதி நான்கு பேரும் வாக்களித்தது எப்படி என்று அவர் மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்.

ஏனென்றால் பாரிய சந்தேகம் எழுகிறது. இரண்டு கட்சித் தலைவர்களும் சேர்ந்து தான் நாடகம் ஆடியிருக்கிறார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுந்திருக்கிறது. தாங்கள் வாக்களிக்காமல், தமது கட்சிக்காரரைக் கொண்டு வாக்களித்து சட்டமூலத்தை நிறைவேற்ற உதவியிருக்கிறார்கள்.

இந்த திருத்தச் சட்டத்துக்கு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பது பற்றி முழுமையாக அறிய வேண்டும், ஏனென்றால் எமது முகத்துக்கு முன்னால் ஒன்றை சொல்லிக் கொண்டு, செயற்பாட்டிலே வித்தியாசமாக இயங்கியிருந்தால், சேர்ந்தியங்குவது, நம்பகத் தன்மை தொடர்பில் பாரிய பிரச்சினை உண்டு.

நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் தீர்மானங்களை எடுக்கிறோம்.

கொள்கைக்கு அமைவாக சேர்ந்து வருபவர்களோடு நாங்கள் பயணிக்க எப்பவுமே தயார். அந்த வகையிலே மனோ கணேஷன் அரவிந்தகுமாருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த வகையில் அவர்களேடு சேர்ந்து பயணிக்கத் தயார்.