
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேசத்தில் வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) பயிற்செய்கை அதிகபடியான விளைச்சலை இம்முறை பெற்றுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜாவிடம் தெரிவித்தனர்.
வெள்ளை கெக்கரி செய்கைக்கு பொருத்தமான இடமாக அடையாளப்படுத்தப்பட்ட மாங்கேணி பிரதேசத்தில் வெள்ளை கெக்கரி பதனிடும் நிலையம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு அரச காணி ஒன்றை பெற்றுத்தருமாறு கெலிஸ் நிறுவன உத்தியோகத்தர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் அண்மையில் வாகரைக்கான கள விஐயம் ஒன்றினை மேற்கொண்ட போது தற்போது இயங்கி வருகின்ற வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) பதனிடும் நிலையத்தை பார்வையிட்டு விவசாயிகளுடன் தங்களின் நிலமைகளை கேட்டு அறிந்தார்.
அதிகளவு வருமானத்தினை பெற்றுத்தருகின்ற தொழிலாக இத்தொழில் உள்ளதாகவும் நமது மாவட்டத்தினை தாண்டி அம்பாறை, திருகோணமலை பகுதிகளை சார்ந்த விவசாயிகளின் உற்பத்திகளும் மாங்கேணி நிலையத்திலேயே பதனிடப்படுகின்றதாகவும், அங்கு பதனிடப்பட்ட வெள்ளை கெக்கரி (ஹிக்கும்பர்) கொழும்பிற்கு கொண்டு சென்று பொதியிடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவ்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் வாகரை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் அதிகளவானோர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஹரன் தெரிவித்தார்.

















