ஆரையம்பதி பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வி
மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச சபையின் அமர்வு இன்று ஆரையம்பதி நந்தபோன் மண்டபத்தில் நடைபெற்றது.
சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தலைமையில் நடைபெற்ற அமர்வில் பிரதி தவிசாளர் சுந்;தரலிங்கம் உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையின் தவிசாளர் மகேந்திரலிங்கம் சபையில் முன் வைத்தார்.
இதன் போது சபை உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தததுடன் இறுதியில் வாக்கெடுக்கப்பிற்கு விடப்பட்டது.
பகிரங்கமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் 14 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பாக வாக்களித்ததுடன் தவிசாளர் உட்பட 3 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் தன்னிச்சையாக ஒரு தலைப்பட்சமாக வரவு செலவுத்திட்டத்தினை தயாரித்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேச மொன்றை இலக்கு வைத்தே இந்த வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் முஸ்லிம் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் இந்த வரவு செலவுத்திட்டத்தினை எதிர்ப்பதாக சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதே வேளை மண்முனைப் பற்று பிரதேச சபையின் 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமும் தோல்வியடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது













