உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் விசேடயாகம்

(காரைதீவு நிருபர் சகா)
கொரோனாத் தொற்றிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனை வழிபாடு சனிக்கிழமை தீபாவளி தினத்தன்று சிறப்பாக நடைபெற்றது.

பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கின் தென்கோடியில் அடர்ந்த கானகத்தின் மத்தியில் அமைந்துள்ள உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ க.கு.சிதாராம் குருக்கள் சிவாச்சாரியார் தலைமையில் அதிகாலை 05.30 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், ஆலய வண்ணக்கர் சுதா, இராணுவ அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிராத்தனை நிகழ்வானது 6.30 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் 'ஆலயதரிசனம்' நிகழ்வில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.