இலங்கையில் பரவியுள்ள கொரோனா இரண்டாவது அலையின் வேகமும் தாக்கமும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. சிறைச்சாலைகளுக்குள்ளும் அது ஊடுருவியிருப்பது அதிர்ச்சியளித்திருக்கின்றது. சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள மூன்று சிறைச்சாலைகளுக்குள் கொரோனா பரவியிருக்கும் நிலையில், 120 க்கும் அதிகமானவர்கள் அதன் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர். கொரோனா பரவும் வேகம் சிறைகளிலுள்ள கைதிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் அரசாங்கம் உடனடியாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது சற்று நிம்மதியைக் கொடுக்கின்றது.
இலங்கை சிறைச்சாலைகளைப் பொறுத்தவரை நெரிசல் மிகுந்த இடங்களாகவே அவை உள்ளன. தொற்றுநோய் வேகமாகப் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அங்கு அதிகமாகவே உள்ளன. சிறிய இடங்களில் அதினமானவர் தடுத்துவைத்திருப்பது இதற்கு பிரதான காரணம். இதனால், தனிநபர் இடைவெளியைப் பேண முடியாத நிலை உள்ளது. பொதுவான கழிவறைகளைத்தான் அங்குள்ளவர்கள் பயன்படுத்துகின்றார்கள். அதுவும் அதிகளவானர்கள் அதனைப் பயன்படுத்த தொற்று பரவுவதற்கான வாய்ப்புக்கள் உயர் நிலையில் உள்ளது.
கொரோனவின் முதலாவது அலை இலங்கையில் பரவிய போதே இது குறித்த கவனம் செலுத்தப்பட்டிருந்தது. பிணையில் விடுவிக்கப்படக்கூடியவர்கள், உட்பட நீண்டகாலக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், சிறைச்சாலைகளுக்குள் கொரோனா புகுந்து தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தும் வரையில், இவ்விடயத்தில் அரசின் கவனம் திரும்பியிருக்கவில்லை.
கொரோனா பரவலையடுத்து 80 நாடுகள் கைதிகளை விடுதலை செய்வதற்கான பொறிமுறைகளை அவசரமாக வகுத்துக்கொண்டிருந்தன. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் ஊனமடைந்தவர்கள், சுகவீனமடைந்திருப்பவர்கள், பெண்கள், சிறுவர்கள், தண்டனைக் காலத்தில் 40 வீதத்தைப் பூர்த்தி செய்தவர்கள் என்பன போன்ற அந்தந்த நாடுகளுக்குப் பொருத்தமான வகையில் இதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனைவிட ஜனாதிபதியின் மன்னிப்பு, அமைச்சரவை உத்தரவு, அவசரகால சட்டத்தின் கீழான உத்தரவு என்பனவும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
உடனடியாகவே அவை செயற்படுத்தப்பட்டமையால் பெருந்தொகையான கைதிகள் அந்த நாடுகளில் பாதுகாக்கப்பட்டனர். சர்வதேச ரீதியான ஆய்வு ஒன்றின்படி ஆறு லட்சத்துக்கும் அதிகமான கைதிகள் உலகின் பல நாடுகளில் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலமாக சிறைச்சாலைகளில் காணப்பட்ட நெரிசல் பெருமளவுக்குத் தவிர்க்கப்பட்டது. சிறைச்சாலைகளுக்குள் கொரோனா பரவல் தடுக்கப்பட்டது.
இலங்கையில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் கொரோனா பரவி பெருந்தொகையான கைதிகள் வெலிகந்தை சிகிச்சை முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்னரே அரசாங்கம் விழித்துக்கொண்டது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு இது குறித்து அவசர உத்தரவு ஒன்றை சட்டமா அதிபர் பிறப்பித்திருக்கின்றார். “விளக்கமறியல் கைதிகள் மீது குற்றப் பத்திரிகைகளைத் தாக்கல் செய்து அவர்களை விடுதலை செய்யுங்கள்” என்பதுதான் அந்த உத்தரவு எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 22 ஆயிரம் கைதிகளை விடுதலை செய்யக்கூடியதாக இருக்கும் என ஆணையளர் நாயகம் நம்புகின்றார்.
உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்க ஒன்றுதான். இருந்தாலும், இது எந்தளவுக்கு வேகமாக முன்னெடுக்கப்படும் என்பது தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் இவ்வாறான நடவடிக்கைகளை நீதித்துறை அவசர கதியில் முன்னெடுத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், “சட்டமா அதிபரின் உத்தரவின்படி முடிந்தளவுக்கு விரைவாக இதற்கான சென்முறைகள் முன்னெடுக்கப்படும்” என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறுகின்றார்.
சிறைச்சாலைகளில் விசாரணைகளோ, குற்றச்சாட்டுக்களோ இல்லாமல் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளின் பிரச்சினை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இவ்விடயம் குறித்து தமிழ்த் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்தும் அரசாங்கமும், சட்டமா அதிபர் திணைக்களமும் உடனடியாகக் கவனத்தைச் செலுத்த வேண்டும். முன்னுரிமைக்குள்ள விடயமாக அது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.













