மட்டு நகர் மக்களுக்காக இயற்கைமுறை விவசாயிகளின் பங்களிப்பு


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக அரசாங்கத்தினால் பல வாரங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊர்முடக்க, பயணத்தடையினால் ஏனைய பிரதேசங்களைப்போலவே கிழக்கிலும் பல சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த பருவத்தில்மேற்கொள்ளப்பட்ட பயிர் நடுகையானது நல்ல விளைச்சலை உருவாக்கிய போதும், அதைத் தொடர்ந்து பெய்த கடும் மழை, அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம் ஆகியவற்றால், அறுவடையினை கொண்டாட முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

நலிவுற்ற விவசாயிகள் தங்களது உற்பத்திகளுக்கான சிறந்த விலையை நிர்ணயிக்க முடியாதுள்ளதுடன் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாத நிலையினையும் எதிர்கொண்டுள்ளனர். இதனால் அவர்களது விளைச்சல்கள் அழிவடைந்தும் வருகின்றன. இந்நிலையில் வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் இயற்கைமுறை விவசாயத்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் முயற்சியானது, விவசாயிகளுக்கும் மட்டக்களப்பு வாழ் மக்களுக்கும் இந்த அவசரகாலத்தில் நன்மை பயப்பதாக உள்ளது

இயற்கைமுறை விவசாயத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஏறாவூர்பபற்று பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பங்களிப்புடன், பல்வகை மரக்கறிகள் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மட்டக்களப்பு நகரப்பிரதேசங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்விநியோகத்திற்காக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றும் வகையில் இயற்கைமுறை விவசாயத்திட்டக்குழு அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய மரக்கறிப்பொதிகள் இதுவரை கச்சேரி, பிரதேச செயலகம் உள்ளடங்கலாக பல அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரசாயனக் கலப்படமற்ற இத்தூய மரக்கறிப்பொதிகள் விற்கப்படுவது, இத்தைகைய நோய் எச்சரிக்கைக் காலத்தில் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் பாவனையாளர்களுக்கு திருப்தியான கொள்வனவையும் ஏற்படுத்துவதாக பகிர்ந்துள்ளனர்.

இயற்கைமுறை விவசாயத்திட்டமானது கொய்க்கா (தென் கொரியா) நிறுவனத்தின் நிதிப்பங்களிப்போடு வேள்ட் விஷன் லங்கா அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் வாகரை, கோறளைப்பற்று, கிரான், ஏறாவூர்பற்று ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 700 விவசாயிகள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.