நாட்டை விட்டு வெளியேற ஒரு மில்லியன் இளைஞர்கள் திட்டம் – மயந்த திஸாநாயக்க



எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர் 1983 கலவரத்தின்போது அல்லது யுத்தத்தின்போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என கூறினார்.

இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வளர்ச்சி ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் வருங்கால சந்ததியினர் நாட்டை வளர்ப்பதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.