மட்டக்களப்பில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு டிஜிடல் கொடுப்பனவுமுறையூடான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
கிழக்கு பிராந்திய வியாபார தலைவர் நித்தியானந்தம் கேதீஸ்வரன் தலைமையில் மற்றும் ஏனைய தலைவர்களான எஸ் சத்தியசீலன் , கே திலகேஷன் வழிகாட்டுதலில் இம்முறை நத்தார் பண்டிகையினை முன்னிட்டு இச்சந்தை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் அபாயம் நிலவும் இச்சந்தர்ப்பத்தில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் விதமாக இந்நத்தார் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஹட்டன் நஷனல் வங்கி அறிமுகம் செய்திருக்கின்ற விசேட செயலியான “சோலோ” தொடுகை முறையற்ற கொடுக்கல் வாங்கல் செயற்பாட்டினூடான பணப்பரிமாற்ற சேவையினை பயன்படுத்தி இந்நத்தார் சந்தை விசேடமாக சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்காக கடந்த சனிக்கிழமை (18.12.2021 ) காலை 9.00 மணிமுதல் பிற்பகல் 7.00 மணிவரை மட்டக்களப்பு அமேரிக்கன் மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் ஏனைய விருந்தினர்களாக பிரதேச செயலாளர் மண்முனை வடக்கு வன்னியசிங்கம் வாசுதேவன் , கால்நடை சுகாதார அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி உதயராணி உகேந்திரன் , சிறு கைத்தொழில் பிரிவு உதவி பணிப்பாளர் எஸ் வினோத் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வினை ஹட்டன் நெசனல் வங்கி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்தன.
இந்நிகழ்வின்போது தொடுகையற்ற பணப்பரிமாற்ற சேவை உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உற்பத்தியாளர்களின் பொருட்களும் சந்தைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












