இலங்கையில் டெங்கு நோய் தொற்று நோயாக உருவெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் மாத்திரம் நாட்டில் இதுவரை 6,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் விசேட சமூக வைத்தியரான ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 8,966 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்முனை, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு வைரஸின் தற்போதைய வகை மாறியுள்ளது.டெங்கு காய்ச்சல் வகை 01, வகை 02, வகை 03 மற்றும் வகை 04 என பல்வேறு வகையான டெங்கு காய்ச்சல்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
வகை 02 சமீபத்தில் அதிகரித்து வருவதாகவும், இந்த நாட்களில் பதிவாகும் நோயாளர்கள் வகை 03 என்றும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களைத் தடுப்பது மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது போன்ற டெங்கு தடுப்பு முறைகளை கடைப்பிடிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.












