பாடசாலை முகாமைத்துவத்தில் வள முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் !


பாடசாலை முகாமைத்துவத்தில் வள முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் காலத்திற்கு காலம் ஏற்படும் மாற்றங்களான அறிவியல் புரட்சி, தொழிநுட்ப வளர்ச்சி,பூகோளமயமாக்க காரணிகளின் வளர்ச்சியினால் உலகலாவிய நாடுகளின் அரசியல், பொருளாதாரம்,கல்வியியல், கலாசாரம், சமூகவியல் முதலான துறைகளில் நிமிடத்துக்கு நிமிடம், செக்கனுக்கு செக்கன் பல்வேறு மாற்றங்கள், கல்விக் கொள்கையிலும், கல்விச் சீர்திருத்தங்களும் கொண்டு வரப்படுவதுடன், நாட்டின் தேசிய குறிக்கோளை அடையும் வகையில் விசேட குறிக்கோள்களை அடையும் வகுப்பறைச் செயற்பாடுகளைக் கொண்ட பாடசாலையின் வினைத்திறனைத் தீர்மானிக்கும் வகையில் பாடசாலையானது வளமுகாமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக இயங்கி வருகிறது.

இன்று பரவலாகப் பேசப்படும் விளைதிறன் பாடசாலை ((Effective School)) பற்றிய கருத்தியலானது, பாடசாலையில் காணப்படும் வளங்களின் உச்சப்பயனை அடையும் வகையிலான வினைத்திறன் செயற்பாடுகளில் வளங்களே முக்கியத்துவம் பெறுகிறது. பாடசாலை அபிவிருத்தி முகாமைத்துவத்தின் நோக்கம் பாடசாலையை விளைதிறன் பாடசாலையாக உருவாக்குவதாகும். கல்வி அமைப்பினுள் காணப்படும் ஒவ்வொரு பாடசாலையையும் விளைதிறன் பாடசாலையாகக கட்டியெழுப்புவதிலேயே ஒவ்வொரு நாட்டினதும் கல்வி முகாமைத்துவச் செயற்பாடு கவனம் செலுத்துகின்றது.

கல்வி முகாமைத்துவச் செயற்பாட்டில் ஈடுபடும் ஒவ்வொரு அதிபரும், விளைதிறன் பாடசாலை என்பது எவ்வாறானதொரு நிறுவனம் என்பதை நன்கு உணர்ந்து கொள்வது அவசியமாகும். ஒரு பாடசாலை தனது நோக்கங்கள் குறிக்கோள்களை எதிர்பார்த்த அளவில் அடைந்தால் மாத்திரமே அதை விளைதிறன் பாடசாலையாகக் கொள்ள முடியும். தேசிய கல்வி நோக்கங்கள் ஒரு நாட்டிற்குப் பொதுவாக இருக்கும். 

அந்த நோக்கங்களுக்கு இயைபான வகையில் ஒரு பாடசாலை தனக்குரிய நோக்கங்கள், குறிக்கோள்களை அமைத்துக் கொண்டு அவற்றை அடைய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றிபெறுமாயின் அதனை விளைதிறன் பாடசாலை என அழைக்கலாம்.

ஒரு குறித்த பாடசாலையின் விளைதிறனின் அளவானது அப்பாடசாலை அடைந்து கொள்ளும் தனது நோக்கங்களின் அளவிலேயே தங்கியுள்ளது. ஒரு பாடசாலை அது அமைந்துள்ள சுற்றாடலில் அரிதாகக் காணப்படும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி அவற்றிலிருந்து உச்ச அளவு பயனைப் பெறுவதாகவும் அது விளங்க வேண்டும்.

குறிப்பிட்ட பாடசாலை தனது ஒழுங்கமைப்பினுள் காணப்படும் சகல அம்சங்களுக்கிடையிலும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் . அது தனது சூழலுடன் இயைபாக்கம் பெறவும் வேண்டும். இத்தகைய நிலைக்கு அது தனது முகாமைத்துவச் செயற்பாட்டைப் பயன்படுத்தக்கூடிய உயர்மட்ட ஆற்றலே அதன் விளை திறன் தன்மை என்பதால் கருதப்படும். ஒரு பாடசாலை தனது அமைப்பினுள்ளும், அதற்கு வெளியிலும் இயைபாக்கம் பெறவேண்டும்  எனும் போது அது கொண்டிருக்கும் இயைபாக்க ஆற்றலைக் குறிப்பிடுகின்றது. 

பாடசாலை அபிவிருத்திக்கு மாற்றங்கள் பிரதானமானவை. அவ்வாறு மாற்றங்கள் புகுத்தப்படும் போது அதற்குத் தடைகள், எதிர்பார்ப்புக்கள் தோன்றலாம். அத்தகைய தடைகளை இனங்கண்டு புதிய தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் முகாமைத்துவச் செயற்பாடுகளைப் பிரயோகிப்பதை இயைபாக்க ஆற்றல் எனலாம்.

ஒரு பாடசாலையின் வினைத்திறனை வரையறுத்தல் செயற்பாடானது, பாடசாலையின் விளைதிறன் பற்றி வரைவிலக்கணம் கூறுவது போன்றே சிரமமான காரியம் ஆகும். வினைத்திறன் என்ற சொல் பொருளியலில்  பரவலாக பயன்படுத்தப்படும் சொல்லாகும். அத்துடன், வினைத்திறன் என்ற சொல்லின் எண்ணக்கரு மூலதனம்,உற்பத்தி, செலவு என்ற சொற்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. பொருளியலில் வரும் இவ்வெண்ணக்கரு தொழில், உற்பத்தி என்பவற்றில் ஏதாவது ஒன்றுக்கு பயன்படுத்தும் உள்ளீட்டினால் உச்சப் பயனை பெற்றுக் கொள்ளும் செயற்பாடாகவே விளக்கப்படுகிறது. 

உச்ச அளவில் பயன்படுத்தி இலாபகரமான நிலைமைகளை அடைவதாகும்.இங்கு உற்பத்தி அல்லது விளைவு பற்றி அவதானம் செலுத்தப்படுகின்றது. பல்வேறு காரணிகளை பயன்படுத்தி கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படும் பாடசாலையின் வினைத்திறன் பற்றி வரைவிலக்கணம் முக்கியமானது. பாடசாலையின் வினைத்திறன் என்பது பாடசாலையின் வரையறைக்குட்பட்ட வளங்களை உச்சளவில் பயன்படுத்தி எதிர்பார்க்கும் நிலைமைகளை பெற்றுக் கொள்ளும் வகையில் வளமுகாமைத்துவம் பாடசாலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொதுவாக பாடசாலையில் காணப்படும் வளங்கள், மானிட வளங்கள் என வகைப்படுத்தலாம்.

பாடசாலையில் காணப்படும் பௌதீக வளங்களாக கட்டிடங்கள், தளபாடங்கள், ஆய்வு கூடங்கள், நூலகங்கள், கணினி அறை, ஆய்வு கூட உபகரணங்கள், விளையாட்டு மைதானம், தொழிநுட்ப உபகரணங்கள் என்பன அடங்கும். 

மானிட வளங்களாக பாடசாலையின் முகாமையாளரான அதிபர், வகுப்பறையின் முகாமையாளரான ஆசிரியர், பாடசாலையின் மையப்புள்ளிகளான மாணவர்கள் மற்றும் வெளிப்பிரிவினரான பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.

பாடசாலையில் பௌதீக மற்றும் மானிட வளங்களை முகாமைத்துவம் செய்யும் வகையில் கொள்கைகள், சுற்றறிக்கைகள், ஆவணங்கள், சேவைகள்சார் உள்ளீடுகள் என்பன உள்ளடக்கப்படுகின்றன.

பாடசாலையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் அடிப்படை அம்சங்களாக வளங்கள் காணப்படுகின்றன. 

பாடசாலை முகவராக இருந்தால் அதனை இயக்கும் கருவியாக வளங்களும் , வளங்களை நெறிப்படுத்தும் வகையில் கொள்கைகள், சுற்றறிக்கைகள், ஆவணங்கள், சேவைகள்சார் உள்ளீடுகள் என்பன பயன்படுகின்றன. உள்ளீடு, செயன்முறை, வெளியீடு என இடம்பெறும் பாடசாலைச் செயற்பாடுகள் யாவும் வினைத்திறன், விளைதிறன் என்பவற்றுடன் தொடர்புடையவை. 

பிரதானமாக ஒரு பாடசாலையின் வினைத்திறனை உள்ளக வினைத்திறன், வெளியக வினைத்திறன் என இரண்டு பிரதான துறைகள் தீர்மானிக்கின்றன. 

உள்ளீடுகளைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளப்படும் உற்பத்தியானது வினைத்திறனை தீர்மானிக்கும். உள்ளீட்டின் விளைவாக ஏற்படும் தாக்கங்கள் விளைத்திறனை எத்தகையது என்பதை மதிப்பீடு செய்வதற்கு பயன்படும். உலகலாவிய ரீதியில் நிறுவன இலக்கை அடையும் வகையில் வினைத்திறனில் உற்பத்தியும் தொடர்புபட்டிருக்கும் வகையில் விளைத்திறனில் தாக்கமும், விளைவுகளும் தொடர்புபட்டிருக்கும்.

பாடசாலையின் வினைத்திறனானது பாடசாலை வளமுகாமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடைய வகையில் பாடசாலை முகாமைத்துவத்துடன் இணைந்த ஒட்டுமொத்த செயற்பாடுகளில் வள முகாமைத்துவத்தின் வகிபங்கு அளவிட முடியாத வகையில் அமைகிறது. இனங்காணப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு மூலதனம், காலம், வேறு வளங்கள் ஆகியன எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை அளவிடுவது உள்ளீடுகளை அளவிடுதல் ஆகும். பாடசாலையில் உற்பத்தி நிகழும் போது வளங்கள் அளவிடப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைப் போன்று கல்வி நிறுவனத்திலும் மேற்கொள்ள முடியும். 

ஏனெனில், கல்வி நிறுவனமும் ஏனைய நிறுவனங்களைப் போன்று உச்ச விளைதிறனுக்காக வளங்களை பயன்படுத்திக் கொள்வதனாலே ஆகும்  எனினும், பொருளியல் துறைகளை அளவிடும் நுட்ப முறைளைப் பயன்படுத்தி கல்வியின் பெறுபேறுகளை அளவிட முற்படும் போது அளவீட்டு நோக்கம் பூரணமாக நிறைவேறாமையால் கல்வியலாளர்கள் இதனை விரும்புவதில்லை.

பாடசாலையின் முன்னேற்றத்தினையும், அபிவிருத்தியையும் அளவிடும் வினைத்திறனும், விளைதிறனும் பயன்படுத்தப்படும் வளங்களில் தங்கியுள்ளது. பாடசாலையில் உள்ள பௌதீக மற்றும் மானிட வளங்களில் செயற்பாட்டுத்தன்மை மற்றும் பயன்படுதன்மையைப் பொறுத்து முகாமைத்துவமானது முக்கியமானது.

முகாமைத்துவத்திலுள்ள திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்தல், ஆட்சேர்ப்பு, பாதீடு முதலான செயற்பாடுகள் வளமுகாமைத்துவத்தில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு படிமுறை ரீதியான செயற்பாடுகளும் முறையான வகையில் இடம்பெற வேண்டும்.

உதாரணமாக, பாடசாலைகளின் வகை, அமைவிடம் என்பன வளங்களை முகாமைத்துவத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகஷ்டப் பாடசாலைகள்ரூபவ் கஷ்டப் பாடசாலைகள், நகர்ப்புறப் பாடசாலைகள் முதலானவற்றில் வளங்கள் சமநிலையில்  காணப்படுவதில்லை. வளங்களின் தன்மை, பயன்படுத்தும் நிலைமைகளிலும் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது.

பொதுவாக கிராமப்புறப் பாடசாலைகளில் மாணவர் தொகை குறைவாகவும், நகர்ப்புறப் பாடசாலைகளில் மாணவர் தொகை அதிகமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பாடங்களுக்குத் தேவையான ஆசிரியர்களின் தொகையில் தட்டப்பாடும் காணப்படுகின்றது. வளங்களில் சமத்துவத்தில் ஆளணிப் பற்றாக்குறை, தளபாடங்கள், ஆய்வு கூடங்கள், மைதானம், நூலகம் முதலான பற்றாக்குறையும் காணப்படுகின்றன.

தேசிய ரீதியாக அடையப்பட வேண்டிய இலக்குகளை அடைய எத்தணிக்கும் பிரதான களம் பாடசாலையாகும். விளைதிறனை அளவிடுவது தொடர்பான கருத்தியலுக்கு ஒரு தெளிவான விளக்கம் பொருளியலில், கல்வியலிலும் துறை சார்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் வள அசமந்துவத்தை அடைவதில் உற்பத்தி, பயன் என்ற சொல் பயன்படுகிறது. 

கல்வி நோக்கங்களை கோட்பாடு ரீதியில் நோக்குவது சிரமமானது. உதாரணமாக ஒரு பாடசாலையில் மாணவரின் ஆளுமையையும், நடத்தையையும் அளவிடுதல் சிரமமானது. கல்வி செயன்முறை பற்றி சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக ஒரு வரைவிலக்கணம் இதுவரை இல்லை. 

பல்வேறு கல்வி நோக்கங்களையும், அது தொடர்பான கல்வி பாடசாலை செயல் முறைகளையும் அளவிடுவதற்கு பல்வேறு அளவுகோல்கள் அவசியமாகும். இதனால் பாடசாலையின் வினைத்திறன் அளவிடுதல் கடினமாகும்.

பாடசாலை அபிவிருத்தியானது நிறுவன முகமைத்துவம் மற்றும் தலைமைத்துவம் சார்பான திறனில் தங்கி உள்ளது. தற்போதைய உலக மாற்றங்கள் கோளமயமாதலின் விளைவுகள், சர்வதேசமயமாதலின் தாக்கங்கள், உள்நாட்டு வாழ்வியல் மாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், மனிதவள முகாமத்துவ மேம்பாடு, பௌதீக வள முகாமைத்துவ நுட்பங்கள் முதலிய விடயங்கள் சார்ந்து நிறுவன முகமைத்துவமானது பயணிக்க வேண்டியுள்ளது. 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நுட்பங்கள் சார்ந்து அறிவு அடிப்படையிலான முகாமைத்துவத்தினை இன்னும் எதிர்காலத்திலும் எதிர்கூறல் பண்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. கல்வி நிறுவனங்களான பாடசாலைகள் மற்றைய எல்லா வளங்களை விடவும் மனித பலத்துடன் பெரும்பலமும் தொடர்புடையதாகும். அதே போன்று பௌதீக வள அபிவிருத்தியும் பாடசாலை அபிவிருத்திக்கு அத்திவாரமானதாகும். காலமாற்றத்திற்கு முகங்கொடுக்கும் வகையில் நவீன கல்விக் கொள்கையின் படி, மேற்கொள்ளப்படும் கல்விச் சீர்திருத்தங்களும், கல்வி மாற்றங்களுக்கும் முகங்கொடுக்கும் வகையில் வளங்களின் தேவை மாற்றமடைகின்றது.

அந்தவகையில், தொழிநுட்ப கட்டிடங்களின் வருகை, தொழிநுட்ப பாடங்களின் வருகை, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, ஆயிரம் பாடசாலைத் திட்டம், தொழிற்கல்வி முதலான மாற்றங்கள் நடைமுறையில் காணப்படுகின்றன.

பல்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களை வரவேற்கவும், நடைமுறைப்படுத்தும் வகையில் வள முகாமைத்துவத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாடசாலையில் இருந்து கிடைக்கக் கூடிய வளங்களில் இருந்து உச்சப் பயன்பாட்டைப் பெறும் வினைத்திறனானது, வளமுகாமைத்துவத்தில் மையப் பொருளாக முக்கியம் பெறுகிறது.

நிறுவனத்தின் நோக்கம் பாடசாலையிலன் இலக்கு, நோக்கு, பணிக்கூற்று என்பது சரியாக தீர்மானிக்கப்பட்டு அவற்றை வெற்றிகரமாக அடைந்து கொள்வதற்கு ஏதுவான நிறுவனம் அபிவிருத்தி செய்யப்படுவது, சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய அம்சமாகும். பொதுவாக, இன்றைய பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் ஏற்ற வகையில் சரியானவற்றை மேற்கொள்ளுவதே முகாமைத்துவம் என்று பொதுவாக குறிப்பிடலாம். 

கல்விக்காக அதன் இலக்குகளின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட வளங்களிலிருந்து உச்ச பயனை பெறும் பொருட்டு மேற்கொள்ளப்படும் செயற்பாட்டு உத்திகளை கல்வி முகாமைத்துவம் கொண்டுள்ளது.

அந்த வகையில், கல்வி முகாமைத்துவத்தில் வள முகாமைத்துவம் மிக முக்கியமான ஒரு அம்சமாக காணப்படுகின்றது. உள்ளீடு (Input), செயற்பாடு(Process), வெளியீடு(Output) ஆகிய படிமுறையின் அடிப்படையில் இடம்பெறுகிறது. பொதுவாக, பாடசாலையில் பின்பற்றப்படும் முகாமைத்துவ வகைகளாக அலுவலக முகாமைத்துவம் மனிதவள முகாமைத்துவம், பௌதீக வள முகாமைத்துவம், நேர முகாமைத்துவம் என்பன முக்கியமானதாகும்.

பொதுவாக இன்றைய கல்விமுறையில் கல்வி முகாமைத்துவம் என்பது பெரும்பாலும் குறித்த, ஒதுக்கப்பட்ட பொதுக் கல்வி இலக்குகளை அடைவதற்காக வளங்களுடன் தொடர்புடைய முயற்சிகளாகவே அமைகின்றது. அந்த வகையில் பாடசாலையில் பௌதீக மற்றும் மனித வளங்கள் முக்கியமானவை. பாடசாலைச் சூழல், கலாசாரம், பாடசாலை அமைவிடம், பாடசாலையின் குறிக்கோள் என்ற அடிப்படையில் இவ்வளங்களின் தன்மைகள் மாறுபட்டு செல்கின்றது.

எனினும் , பாடசாலையை உள்ளடக்கிய கல்வி முகாமைத்துவத்தில் வள முக்கியத்துவம் மிக முக்கியமானது. வள முகாமைத்துவத்திற்கும், வெளியீடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

பாடசாலையின் அபிவிருத்தியில் வள முகாமைத்துவம் என்பது, பயன்படுத்தப்படும் வளங்களிலிருந்து உச்சப் பயனை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் சார்ந்த உத்தியாகும். வள முகாமைத்துவத்தின் ஊடாகவே முகாமைத்துவ செயற்பாடுகள் உருவாகி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டுக்கான இன்றைய போக்குகளாக உபகரண மயப்படுத்தல்  , பல உள்ளீடுகளை அதிகரித்தல் முதலான செயற்பாடுகளுக்கு அறிவு மைய உலகறிவும், மையத் தொழிற்துறை என்பனவும் முக்கியமாகின்றன. ஒரு நாட்டின் அபிவிருத்தியை தீர்மானிக்கும் அரசியல், பொருளாதாரம், சமூகவியல், கலாசாரம் என்பவற்றைத் தாண்டி கல்வியியல் துறையை அளவிடும் அபிவிருத்திச் சுட்டியாகவும், அளவுகோலாகவும் வளமுகாமைத்துவம் பாடசாலை வினைத்திறனில் முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டின் கொள்கைகள், நிறுவனத்தின் இலக்குகள் நோக்கிய தீர்மானங்களின் அடிப்படையில் வளங்களை பயன்படுத்தியே முகாமைத்துவ கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் பொதுக் கல்வித் துறையின்  செயற்பாட்டு களங்களான பாடசாலைகளின் முகாமைத்துவ செயற்பாடுகளின் பொதுநிலையில் ஏற்கனவே ஒத்துழைக்கப்பட்டுள்ள கல்வி இலக்குகளை நோக்கிய செயற்பாடுகளிலே இயக்கப்படுகின்றன. அந்த வகையில், வள முகாமைத்துவமானது பாடசாலையின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திக்கும் பாரிய பங்காற்றுகிறது.

ஏனெனில், பாடசாலை என்ற பதத்தில் ஒட்டு  மொத்த செயற்பாடுகளும் அடங்குகின்றன. பௌதீக வளங்களும், மானுட வளங்களும் பாடசாலையில் முக்கியத்துவம் பெறுகின்றன. வளங்களின்றி பாடசாலையின் இயக்கமில்லை. பொதுவாக வள முகாமைத்துவம் பல்வேறு கூறுகளை கொண்டு காணப்படுகின்றது.

அந்த வகையில் மனித வளம், பௌதீக வளம், கொள்கைகள், சுற்றறிக்கைகள், ஆவணங்கள் சேவைகள் சார் உள்ளீடுகள் என்பன வளமுகாமைத்துவத்தில் அமைகின்றன. பொதுவாக ,பௌதிகவளம் என்பது வெளிப்படையாக புலப்படக்கூடியதும், தொட்டு உணரக்கூடிய வளங்களும் ஆகும். 

உதாரணமாக, பாடசாலையில் காணப்படும் கட்டிடங்கள், கதிரை, மேசை, விஞ்ஞான உபகரணங்கள், தளபாடங்கள், தானியங்கிகள், பல்லூடக எறியிரூபவ் கரும்பலகை என்பவற்றை குறிப்பிடலாம். 

பாடசாலையின் வினைத்திறனை அளவிடுவது சிரமமான காரியம் ஆகும். ஒரு தொழில் அல்லது உற்பத்தி செயற்பாட்டில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளில் இருந்து உச்ச பயனை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டினை குறித்து நிற்கின்றது. அந்த வகையில், வினைத்திறன் மிக்க பாடசாலைகளின் தோற்றமானது, நவீன கல்விக் கொள்கையின் ஊடாக 21 ஆம் நூற்றாண்டிற்கான அறிவு முகாமைத்துவத்தில் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் காணப்படுகிறது.

பாடசாலை மேம்பாட்டு திட்டத்தில் பௌதீக வள முகாமத்துவத்திற்கும் முக்கிய இடம் வழங்கப்படுகிறது. பாடசாலைக்கு அத்தியாவசியமான பௌதீகக வளங்களின் தேவைகளை கண்டறிதல் இங்கு முக்கிய செயற்பாடாக இடம் பெறுகின்றது.

கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு தேவையான வகுப்பறை கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள் செயற்பாட்டறைகள், கணினி ஆய்வு கூடங்கள், உபகரணங்கள் தளபாடங்கள் என்பன உள்ளடக்கப்படுகின்றன.

பாடசாலையில் கிடைக்கும் வளங்களை உச்சமாக பயன்படுத்தி வரும் வினைத்திறன் ஊடாக பாடசாலையின் விளைதிறன் சுட்டிகளை அளவிட முடிகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட காலப்பகுதியில் பாடசாலையில் இருந்து கிடைக்கப்பெறும் மாணவர் சாதனைகள், பொறுப்பேற்று அதிகரிப்பு, ஆசிரியர்களின் வகுப்பறை கற்றல் கற்பித்தல் முயற்சிகள், தனியாள் இடைவினைத் தொடர்புகள் ,;பாடசாலை சமூகத் தொடர்புகள், மாணவர்களின் புத்தாக்க மற்றும் இணைப்பாடவிதான அடைவுககள், சுகாதார மேம்பாடு, பாடசாலையின் கீர்த்தி, நாம வளர்ச்சி

என்பவற்றைக் குறிப்பிடலாம். இவை யாவும் வளமுகாமைத்துவத்தின் விளைவுகளே ஆகும். விளைதிறன் தன்மையைக் கொண்டிருக்கும் ஒரு பாடசாலை, இத்தன்மையையும் கொண்டிருக்கவேண்டும். இல்லாவிடில் அது

பராமரிப்பு முகாமைத்துவத்தை மட்டும் கொண்ட பாடசாலையாகவே அமையும். மேலும் விளைதிறன் எனும் போது குறிப்பிட்ட பாடசாலை ஒன்று அது வழங்கக்கூடிய சேவைத் தரத்தில் தங்கியிருக்க வேண்டும். இதற்காக பாடசாலையின் ஆற்றலின் பண்பில் உயரியதாகவும், இடையீடற்ற வளர்ச்சி அல்லது அபிவிருத்தியையும் கொண்டிருக்க வேண்டும். பாடசாலை மாணவரின் பெறுபேறுகள் உயரிய மட்டத்தில் காணப்பட்டால் மாத்திரம் அப்பாடசாலையை விளைதிறன் பாடசாலையாகக் கொள்ளப்பட முடியாது. 

பொதுவாகப் பரீட்சைப் பெறுபேறுகளை வைத்தே விளைதிறன் தன்மையைக் கணிப்பிடல் சாதாரண நிலையாகும். இது ஒரு தவறான விளக்கமாகும். பாடசாலையொன்று நோக்கங்களை அடைவதற்குத் திட்டமிடுவதற்கு முன்னர் அது எவ்வகையான நோக்கங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான விளக்கம் பெற்றிருத்தல் வேண்டும். மிகக்குறைவான முயற்சியுடன் அடையக் கூடிய நோக்கங்களாக இருப்பின் அவற்றை அடையும் பாடசாலையை விளைதிறன் பாடசாலையாகக் கொள்ள முடியாத அளவுக்கு நோக்கங்கள் பெரிதாக இருப்பினும் பயனில்லை. 

எனவே பாடசாலை நோக்கங்களை அடைவதன் மூலம் ஒரு சாதனையைச் செய்துள்ளதாகக் கருதப்படக் கூடியஅளவுக்கு நோக்கங்கள் பொருத்தமானதாகவும், பெரியதாகவுருமிருத்தல் வேண்டும். 

பெருமுயற்சி செய்து எய்த முடியாத நோக்கங்களை அடைய முயலும் பாடசாலையை விளைதிறன் பாடசாலையாகக் கொள்ள முடியாது என்பதை அதிபர்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.பாடசாலையின் நோக்கங்களை அடைவதற்குப் பாடசாலையின் ஆற்றலும் விருத்தியாக்கப்படல் வேண்டும். பாடசாலையின் விளைதிறனை அடைவதற்கு இது அவசியமாகும்.

பாடசாலையில் பணியாற்றும் ஒவ்வொரு அங்கத்தவரின் ஆற்றலும் சேர்ந்ததே பாடசாலையின் ஆற்றலாக அமையும். இவ்வாற்றலைப் பயன்படுத்துவதுடன் தொடர்ந்து அதனை வளர்த்தலும்  பாடசாலையில் இடம் பெற வேண்டிய தொன்றாகும். விளைதிறன் பாடசாலை ஒன்றை உருவாக்குவதில் வள முகாமைத்துவமானது முக்கியத்துவம் பெறுகிறது.

உலகின் சகல நாடுகளிலும் உள்ள பாடசாலைகளின் ஒரு நோக்கமாக அமைவது, எதிர்காலத்திற்குப் பொருத்தமான சமநிலை ஆளுமை கொண்ட சமூகமொன்றினைத் தோற்றுவிப்பதாகும். உலகப் பாடசாலைகள் அனைத்தினதும் வளர்ச்சி, முன்னேற்றம், அபிவிருத்தி, உயர்ச்சி என்பவற்றை தீர்மானிக்கும் வகையிலும் முக்கியம் பெறுகிறது.

பாடசாலையில் வினைத்திறனை அளவிடும் வினைத்திறன் சுட்டிகளாக அங்கு காணப்படும் வளங்கள் முக்கியத்துவம் வருகின்றது. வளங்களின் வீண்விரயமானது நாடளாவிய ரீதியில் அதிகம் காணப்படுகின்றது. மாணவர் கல்விச் செயற்பாடுகள், மாணவர் இணைப்பாடவிதான செயற்பாடுகள், பாடசாலை சமூக தொடர்பாடல், பாடசாலை சுற்றுச்சூழல் மேம்பாடு, மாணவர் - ஆசிரியர் சுகாதார நடவடிக்கைகள், சமூக சேவை செயற்பாடுகள் என்பன அமைகின்றன. பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தில் வள முகாமைத்துவம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாடசாலையில் காணப்படும் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் வகையிலான செயற்பாடுகளை உள்ளடக்க 21ஆம் நூற்றாண்டுக்கான கற்றல் தேர்ச்சிகளை அடையும் வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை தீர்மானிப்பதிலும் , நாட்டின் தேசிய குறிக்கோளை அடையும் வகையிலும், காலமாற்றத்திற்கேற்ப நவீன கல்விக் கொள்கைளை உள்வாங்கும் வகையிலும் முக்கியத்துவம் பெறும் விளைதிறன் மிக்க பாடசாலைகளின் ஒட்டு மொத்த வினைத்திறனான செயற்பாடுகளை உள்ளடக்கிய பாடசாலை முகாமைத்துவமானது வளமுகாமைத்துவத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

கந்தசாமி அபிலாஷ்

B.Ed> u;ND in English> M.Ed( R)