

ஈழத்தின் முதல் தேரோட்டம் கண்ட திருத்தலம் என்ற பெருமைக்குரியது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம். இந்த தான்தோன்றீச்சரனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கவிக்கோ வெல்லவூர்க் கோபால் அவர்களால் எழுதப்பட்ட "கொக்கட்டிச்சோலை குறவஞ்சி" எனும் நூல் நேற்று (08.10.2022) மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையில் மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது.
தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் க.கருணாகரன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி பாரதி கென்னடி ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும் அருள்மிகு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலய பரிபாலன சபைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். சட்டத்தரணி மு.கணேசராசா வரவேற்புரையினையும், கலாநிதி தாக்க்ஷாயினி பரமதேவன் வெளியீட்டுரையினையும், க.மோனதாஸன் நூல் நயவுரையினையும் நிகழ்த்தினர்.
முதற் பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணி க.நாராணபிள்ளை மேடையில் வைத்து பெற்றுக் கொள்ள ஏனைய அதிதிகளுக்கு அவர்களின் இருப்பிடம் சென்று நூலை வழங்கியமை நேரத்தை மீதப்படுத்தியதுடன் மேடைக்கு அதிதிகளை அழைத்து வழங்குவதால் ஏற்படக்கூடிய தவறுகள், குறைபாடுகளை தவிர்க்கக்கூடிய செயற்பாடாக அமைந்திருந்தமை நல்லதொரு முன்னுதாரணமாகும். அதிதிகள் சிறப்புரைகளை நிகழ்த்தியதோடு அவர்கள் அனைவரும் பொன்னாடை போர்த்தி, பூமாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டமை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தினரின் மட்டக்களப்பிற்குரிய மண்வாசனையைப் பறைசாத்துகின்ற கெளரவிப்பு உபசாரத்தின் உச்சம் எனலாம்.
அனைவரினதும் வேண்டுகோளுக்கிணங்க சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் "கொக்கட்டிச்சோலை குறவஞ்சி" எதிர்வரும் மகா சிவராத்திரியின் போது ஆலய முன்றலில் தாள நயம் கொண்ட கூத்தாக ஆடப்படும் என வாக்குறுதி அளித்தமை நிறுவகத்தின் படைப்புக்களை ஜனரஞ்சகமாக சமூகமயப்படுத்தும் மற்றொரு நல்முயற்சி என்பதோடு பிரதேச படைப்பாளிகளுக்கு ஊக்கத்தையும், கெளரவத்தையும் கொடுக்கும் புதியதொரு வழிமுறை எனவும் கூறலாம்.














































